காலை நேரம்.. அந்த சின்ன உணவு விடுதியில் நல்ல கூட்டம். அரசு கார் சர்ரென்று கடை முன் வந்து நிற்கிறது. காரிலிருந்து டிரைவர் இறங்கி கடை உரிமையாளரைப் பார்த்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு "நவதானிய இட்லி வேணும்' என்று சொல்ல ... ஆச்சரியத்தில் அந்த இளைஞர் ஸ்தம்பித்துப் போகிறார். உடனே மூன்று இட்லியை மூன்று வித சட்னியுடன் பேக் செய்து கொடுக்கிறார்.
ஒரு மணி நேரத்தில் வெங்கையா நாயுடு டுவிட்டரில் "மிகவும் சுவையான தானிய இட்லிகளை காலை உணவாக முடித்தேன். சித்தம் சுதீர் என்ற தொழில் முனைவரின் தயாரிப்பு. வழக்கமான காலை உணவிற்கு மாற்று உணவாக நறுமணமும், சுவையுடன் கூடிய தானிய இட்லிகளைச் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது' என்று டுவிட்டரில் பதிவிட்டார். சந்தோஷத்தில் சுதீருக்குத் தலை கால் புரியவில்லை. சில மணி நேரத்தில் சுதீர் உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்தியானார். இந்த சம்பவம் சென்ற வாரம் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினம் சென்ற போது நடந்தது.
விசாகப்பட்டினம் வால்டேர் பகுதியில் அரசினர் ஓய்வு மாளிகைக்கு அருகில் அந்த டிபன் சென்டரை நடத்தும் இளைஞர் சித்தம் சுதீர். வேளாண்மை பொருளாதாரத்தில் முதுகலை முடித்தவர். நவ தானியங்களால் இட்லிகளை வித்தியாசமாகக் கூம்பு வடிவத்தில் அவித்து சுதீர் விற்கும் இட்லிகள் விசாகப்பட்டினத்தில் மிகவும் பிரபலம்.
சித்தம் சுதீர் தொடர்கிறார்:
"அம்மா திணை வகைகளில் இட்லி செய்து தர அதன் சுவை எனக்குப் பிடித்துப் போனது. பிறகு நானே பலவேறு தானியங்களில் இட்லி தயாரிக்க ஆரம்பித்தேன். தொடக்கத்தில் சொதப்பினாலும், பல முயற்சிகளுக்குப் பிறகு தரமான தானிய இட்லிகளைத் தயாரிக்கும் கலையை தெரிந்து கொண்டேன். அந்த தைரியத்தில் முதலில் எனது கடையை தள்ளுவண்டியில் கையேந்தி பவனாகத் தொடங்கினேன். சமீபத்தில்தான் கட்டடத்திற்கு மாறினேன்.
கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை தானிங்களை ஊறவைத்து அத்துடன் கருப்பு உளுந்தை ஊற வைத்து அரைத்து எடுத்த மாவை காய வைக்கப்பட்ட மந்தார, பலா, ஆல மர இலைகளை கூம்பு வடிவில் சுருட்டி அதில் ஊற்றி வழக்கமாக இட்லியை ஆவியில் அவிப்பது மாதிரி அவித்து எடுப்போம். கார சாரமான மூன்று வகை சட்னிகளுடன் பரிமாறுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.