ஞாயிறு கொண்டாட்டம்

கனவின் லட்சியம் !

தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இரட்டை இயக்குநர்கள் முறை. 

ஜி. அசோக்


தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இரட்டை இயக்குநர்கள் முறை.

அறிமுக இயக்குநர்களான ஷ்யாம் - மனோஜ் இருவரும் இயக்கிய "குதிரை வால்' பெர்லின் திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வெனிசுலா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சந்தோஷ் சிவனின் மாணவர் ஷ்யாம். ஆர்.என். பிரசன்னாவின் உதவியாளர் மனோஜ்.

""நிறைய திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. பெர்லின் பட விழாவில் இந்தியாவின் சிறந்த கிரிட்டிக் வீக் படத்துக்கான விருது வாங்கியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வர இருக்கிறோம். இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதை தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்து பார்க்க போகிறோம்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார்கள் இருவரும்.

""இது முழுக்க முழுக்க கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள். நண்பர் ராஜேஷ்தான் இந்தக் கதைக்கான தாளகர்த்தா. அவர் கொண்டு வந்த கதையை அருமையாக கொண்டு வந்திருக்கிறோம். சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. உங்களின் நல் ஆதரவு வேண்டும். '' புன்சிரிப்புடன் பேசுகிறார் மனோஜ்.

"" ஆமாம்.... ஒரு நல்ல படம் பார்க்கிற அனுபவத்தோடு முடிந்து விடக்கூடாது. அது வெளியே வந்த பிறகு பார்த்தவர் மனதில் தொடர்ந்து வளர வேண்டும். யாருக்கான படமோ அந்த மக்களை நோக்கி ஒரு புன்னகை, புரிந்து கொள்ளல், ஒரு கைப்பற்றுதலாவது நம்மிடம் வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.'' இது இயக்குநர் ஷ்யாமின் வார்த்தைகள்.

தொடர்ந்து பேசும் ஷ்யாம்.... ""சினிமா வணிகம் சார்ந்ததுதான். ஆனாலும் எழுதி இயக்குகிறவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. நடிகர்கள் எதையோ சொல்லிவிட்டு போக, அது எத்தனையோ பேரின் வழியை மறிக்கிறது. புகழுக்காக, பணத்துக்காக மக்களைத் தூண்டிவிடுவது இங்கே நடக்கிறது. அப்படி எதுவும் இல்லாத ஒரு சினிமா இது. என்னை தொந்தரவு செய்கிற விஷயங்களைத் தவிர வேறு எதையும் எடுத்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கிறேன். என் படம் மக்களுக்குப் பயன்பட வேண்டும். வாழ்க்கை மிகவும் சிறியது. அதற்குள் நான் கற்ற கலையை இந்த சமூகத்திற்கு பயனுடையதாக்க விரும்புகிறேன். அதற்கு என் வழி சினிமா. இதில் கேளிக்கைகளுக்கும், வேடிக்கைகளுக்கும் இடமில்லை. என் வேலை வெளிப்படையாக நீதிபோதனை செய்வதல்ல. நான் சந்திக்கிற மனிதர்கள், சூழல்கள், அனுபவங்கள்... அது உருவாக்கிய நியாயங்களை மட்டுமே என் படத்தில் முன் வைக்கிறேன்.'' உள்ளார்ந்து பேசுகிறார் ஷ்யாம்.

"" ஒரு படம் அந்த மொழி சார்ந்தவர்களை கவர வேண்டும். அப்படித்தான் இது. ஒருவனுக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் அவனுக்கு வால் முளைத்து விடிகிறது. விடிந்ததும் நிஜத்தில் அவனுக்கு வால் இருக்கிறது. அந்த வாலுள்ள மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது கதை. வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானதாகவும் இருக்கிறது. விஞ்ஞானம் அது தரும் உல்லாசங்கள் என எதுவும் இல்லாத வாழ்க்கை எப்படி இருந்தது. வேலை முடிந்ததும் எல்லோருக்கும் "டைம் பாஸ்' என்று ஒன்று இருக்கும். அது இப்போது இல்லை. ஓடிக் கொண்டே இருக்கிறோம். அனுதினங்களை யார் தீர்மானிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவற்றுக்கு நடுவே எல்லோரும் சராசரி மனிதர்கள். எல்லாவற்றுக்கும் இடையே ஒருவன் சராசரி வாழ்க்கையை வாழ முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. கனவு ஒரு சொல் விளையாட்டோ வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல... அது தன்னுள் கொண்டிருக்கும் லட்சியம் அபரிமிதமானது. கனவில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டால், நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். இதுதான் கதை.'' இது மனோஜ்.

""பா. ரஞ்சித் சாருக்கு நன்றிகள். அவரின் நீலம் புரொடக்ஷன் கிடைத்ததில் இன்னும் மகிழ்ச்சி. இன்னொரு தயாரிப்பாளர் விக்னேஷ் எங்களுக்கான பெரிய பலம். கலையரசன், அஞ்சலி பாட்டீல் இப்படி நம்பிக்கையான நடிகர்கள். பிரதீப் குமார் இசை. கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு. அருமையான டீம் அமைந்ததில் மகிழ்ச்சி.எங்களின் முதல் படைப்பை நம்பிக்கையாக கொண்டு வருகிறோம். ஆதரவு கொடுங்கள்.'' இருவரும் ஒரு பேசி முடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT