பறவைகளின் உணவுத் தேவைக்காக நிலத்தில் தானியங்களை பயிரிட்டு வருகிறார் கோவை அருகேயுள்ள குளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்து முருகன்.
இயற்கை விவசாயம் செய்து வரும் முத்து முருகனுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. முத்து முருகன் இயற்கை விவசாயம் செய்வதால் நிலத்தில் ரசாயன உரங்களை கலப்பதில்லை. அதன் காரணமாக முத்து முருகனின் நிலத்தில் நத்தை, பூச்சி புழுக்கள் அதிகம். மயில்களுடன், கிளிகள், மைனாக்கள், மரங்கொத்திகள், மாங்குயில்கள், சிட்டுக்குருவிகள், செம்போத்து என்று முத்து முருகனின் பண்ணை பறவைகளின் சரணாலயமாக மாறி நிற்கிறது. சோறாக்க வைத்திருந்த அரிசி மணிகளை சிட்டுக்குருவிகளுக்குத் தந்து மகிழ்ந்த பாரதியாரை நினைவுபடுத்தும் முத்து முருகன் மனம் திறக்கிறார்:
""இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல. விலங்குகள், பறவைகள், செடி கொடி மரங்களுக்கும் சொந்தம். ஆனால் மனிதனோ "உலகம் பிறந்தது எனக்காக மட்டுமே' என்று வாழ்கிறான். சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் மனிதனுக்கு ஆறு அறிவு தரப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு மூன்று யானைகள் கோவை மதுக்கரை பக்கத்தில் ரயில் வண்டியில் அடிபட்டு இறந்திருக்கின்றன. அந்த செய்தி கேட்டு சில நாள்கள் நான் தூங்கவில்லை.
"யானைதானே அடிபட்டு இறந்து போனது' என்று நாம் கடந்து போய்விட்டோம். யானைகள் வழித்தடத்தில் ரயில் பாதை போகிறது என்பதை எளிதாக நாம் மறந்துவிடுகிறோம். யானைகள் இருக்கும் இடத்தில் உணவு கிடைக்காததால் உணவைத் தேடி இன்னொரு இடத்தைத் தேடித் செல்லும் போதுதான் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. ஒருவேளை உருவத்தில் பெரிய யானையுடன் மோதி ரயில் கவிழ்ந்து விட்டால் எத்தனை உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும்?
விலங்குகள் காட்டைவிட்டு நாட்டுக்குள் வருவதும் உணவைத் தேடித்தான். மனிதன் தினம் தினம் காடுகளை ஏதாவது ஒரு விதத்தில் ஆக்கிரமிக்கிறான். அதன் விளைவாகத்தான் விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. விலங்குகள் உணவு இல்லாமல் காடுவிட்டு கிளம்புவது மனித குலத்திற்குத் தரப்படும் ஒரு எச்சரிக்கை.
காடுகளின் நிலைமை சரியில்லை என்று கொடுக்கும் சமிக்கை. அதை உணர்ந்து மனிதன் தனது வாழ்க்கை முறையை பொறுப்புடன் நடத்தினால் பல அழிவுகளைத் தடுக்க முடியும். புவி வெப்பமாதல், கார்பன் பெருக்கம் உலகை அச்சறுத்தும் இரண்டு காரணிகள். அதை புரிந்து கொண்டு தீர்வு காணாவிட்டால் மிகப் பெரிய இழப்புகளை அதீத பெருமழை, காட்டு வெள்ளம், நிலச்சரிவு, புயல், சூறாவளி, கடல் அரிப்பு போன்றவை அதிகரிக்கும்.
சொல்வது சுலபம். சொல்கிறமாதிரி வாழ்ந்து காட்டுவதுதான் சிரமம் என்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்று சமூகம் கிட்டத்தட்ட ஒட்டு மொத்தமாக வழி மாறி போய்க் கொண்டிருக்கின்றன. அவர்களை சடுதியில் நிறுத்திவிட முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் "நம்மால் என்ன செய்ய முடியும்' என்று யோசித்தால் போதும். மாற்றங்கள் நிகழும். என்னைப் பொறுத்தவரையில், மனிதன் சும்மா இருந்தாலே காடுகள் வளரும். எனது சொந்த அனுபவம் இதைத்தான் சொல்கிறது.
எனக்கு இருக்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பத்து சதவிகித பகுதியில் பறவைகளுக்காக பத்து ஆண்டுகளாக கம்பு சோளம் பயிரிட்டு வருகிறேன். பறவைகள் கூட்டமாக வந்து கம்பு சோளத்தைக் கொத்தித் தின்றுவிட்டு நன்றிக் கடனாக எச்சத்தை போட்டுச் செல்லும். அந்த எச்சம் நிலத்திற்கு உரமாகிறது. வேறு எங்காவது தின்றிருக்கும் காய், பழங்களில் இருக்கும் விதை சில எச்சத்தில் கலந்திருக்கும். அந்த விதைகள் மரமாகும்.
வவ்வால்கள் கூட பழங்களைக் கொண்டு வந்து தின்றுவிட்டு கொட்டைகளைக் கீழே போடும். அப்படி உருவானவைதான் எனது வயலில் இருக்கும் புளிய, முருங்கை, வேப்ப, இலுப்பை, பலா மரங்கள். நானாக நட்டு வளர்த்தது மூங்கில்கள் தென்னை மரங்கள் மட்டும்தான்.
வேப்பம் பழங்கள், முத்தின முருங்கைக் காய்களும் அணில்கள், கிளிகள் பறவைகளுக்கு உணவாகும். யானைக்கு மஞ்சள் பூசணி என்றால் உயிர். நான் போட்டிருந்த பூசணியை சாப்பிட்டுப் போய்விட்டது. மரவள்ளிக் கிழங்குகளை காட்டுப் பன்றிகள் தின்றுவிட்டுப் போகின்றன.
சோளத்தைக் கொத்தக் கூட்டம் கூட்டமாகக் கிளிகள் படையெடுத்து வரும். மைனாக்கள் இன்னொரு பக்கம். பகல் நேரத்தில் சிறிதும் பெரிதுமான வண்ணத்துப் பூச்சிகள்.. தட்டாம் பூச்சிகள்... இரவு நேரத்திலோ மின்மினிப் பூச்சிகள்... எனது வயலில் கிட்டத்தட்ட இருபது மயில்கள் வாழுகின்றன. அவைகள் புழு பூச்சிகளைக் கொத்தித் தின்னும். சோளமும் மயிலுக்கு இரையாகும். நாம் வாழ்வது போல அவைகளும் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்.
உலகம் என்பது விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், மனிதர்களைக் கொண்டதுதான். ஒன்றை ஒன்று சார்ந்து இயங்க வேண்டும். சென்ற ஆண்டு கரோனாவால் நான் பாதிக்கப்பட்டு பறவைகளுக்காக பயிரிட முடியவில்லை. "பறவைகளைப் பட்டினிப் போட்டுவிட்டேனே' என்று எனக்கு பெரிய வேதனை. பிறகு ஊரடங்கு தொடர்ந்ததால் வயலில் விவசாயம் செய்ய முடியவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது பறவைகள் குடிக்க தண்ணீருக்காக ஒரு குட்டையை வெட்டினேன்.
எனது வயலில் புதிதாக வளரும் மரக் கன்றுகளை கேட்பவர்களுக்கு இலவசமாகத் தந்துவருகிறேன். இலுப்பை மரக்கன்று கேட்டு அதிகம் பேர்கள் வருவார்கள். நிலத்தில் மூலிகைச் செடிகளும் உண்டு. அவைகளைக் கேட்டு பலரும் வருவார்கள். அவர்கள் கேட்கும் மூலிகைச் செடி இருந்தால் கொடுப்பேன்.
ஆனால் மாலை ஐந்து மணிக்கு மேல் வந்தால் செடிகளைப் பறித்துக் கொடுக்க மாட்டேன்... அடுத்த நாள் வாருங்கள் என்று சொல்வேன். மாலை நேரம் செடிகள் உறங்கும் நேரம். அவற்றை தொந்தரவு செய்யக் கூடாது.
இப்போது மழை பெய்வதாலும், பனிக்காலம் தொடங்கிவிட்டதாலும் பயிர் செய்ய முடியாது. மாசி, பங்குனி எப்போது பிறக்கும் என்று காத்திருக்கிறேன். மீண்டும் பறவைகளுக்காக மானாவாரி பயிர்களை விளைவிக்க வேண்டும்'' என்கிறார் 64 வயதாகும் முத்து முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.