ஞாயிறு கொண்டாட்டம்

சிரிக்க வைக்கும் சிறுவன்!

நடிப்பில், பேசும் வசனங்களில்  லட்சக்கணக்கான  இதயங்களில்  இடம் பிடித்திருக்கும்  அழகான  சிறுவன்  ரித்விக் (7). 

பிஸ்மி பரிணாமன்


நடிப்பில், பேசும் வசனங்களில் லட்சக்கணக்கான இதயங்களில் இடம் பிடித்திருக்கும் அழகான சிறுவன் ரித்விக் (7).
கோவை ஆவணி பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர். இதுவரை நடித்திருப்பது 16 காணொலிகளில். 18 லட்சம் பேர்கள் ரித்விக்கின் காணொலிகளைப் பார்க்கிறார்கள். காணொலிகள் ஒவ்வொன்றும் தொழில்நுட்பத் தரம் கொண்டுள்ளன..
ஒவ்வொரு காணொலியிலும் குறைந்தது மூன்று வேடங்களில் நடிக்கும் ரித்விக் இந்தச் சாதனைகளை எப்படி நிகழ்த்தி வருகிறார் . அவரே சொல்கிறார்:
""அப்பா ஜோதிராஜ் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர். வேலைக்காக சென்னை அவ்வப்போது சென்று வருவார். அவருக்கு படம் பிடிப்பது, தொகுப்பது, அனைத்தும் நன்றாக வரும். அம்மா ஆஷா எனக்கு ஒப்பனை செய்து தேர்ந்த கலைஞி ஆகிவிட்டார். சென்ற ஆண்டு கரோனா காலத்துல பள்ளிகளை பூட்டிட்டாங்களா .. வீட்டில் இருந்து இருந்து போர் அடிச்சது. அப்பத்தான் என்னை வச்சு வீடியோ பண்ணலாம் என்று அப்பா தீர்மானித்தார். சின்னச்சின்ன சம்பவங்களைச் சொல்லி அதுக்கு அப்பா வசனம் எழுதி நடிக்கக் கற்றுக் கொடுத்தார். வசனம் எப்படி பேசணும்னு அப்பா சொல்லிக் கொடுக்க ... தொடக்கத்தில் சொதப்பிய நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து நடிக்கவும், வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசவும் கத்துக்கிட்டேன். நான் நன்றாக நடிக்கிறேன் என்று அப்பா உறுதி செய்து கொண்டதும் "ரித்து ராக்ஸ்" என்ற சேனலை சென்ற ஆண்டு (2020) மத்தியில் யூடியூபில் தொடங்கினார்.
முதல் காணொலியில் சில செய்திகளை காமெடி செய்தியாக்கி வாசிக்கணும். பல முயற்சிகள் செய்த பிறகு கச்சிதமாக வாசித்தேன். அந்தக் காணொலிக்குக் கிடைத்த பலத்த வரவேற்பு அடுத்தடுத்த காணொலிகளுக்கு ஏறுவரிசையில் அமைந்தது. ஒரே வீடியோவில் பல வேடங்கள் வரும். அதில் உடைகளை, ஒப்பனையை மாற்றிக் கொண்டு நடிப்பேன். பெண்ணாகவும், வயதான பெண்ணாகவும் செளரியை தலையில் வைத்துக் கொண்டு சேலை கட்டிக் கொண்டு நடித்திருக்கிறேன். சில காட்சிகளில் சிரிக்காம ... அதே சமயம் பார்க்கிறவங்க சிரிக்கிற மாதிரி நடிக்கணும். தொடக்கத்தில் வசனம் பேசும் போது நானும் சிரித்துவிடுவேன். பல முறை அந்தக் காட்சியைப் படம்பிடிக்க வேண்டிவரும். அப்பா கொஞ்சமும் சங்கடப்படாமல் கோபப்படாமல் மீண்டும் மீண்டும் படம் பிடிப்பார்.
பெண் வேடம் போடுவது ஊரடங்கு காலத்தில் சிரமமாக இருந்தது. முழு ஊரடங்கு காரணமாக மேக்கப் சாதனங்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேக்கப் பொருள்கள், விக், உடைகளை நாம் நினைத்தது போல் வாங்க முடியவில்லை. அதற்காக பெண் வேடம் போடாவிட்டால் காணொலி சுவாரஸ்யமாக இருக்காது. அம்மா வீட்டில் இருக்கும், துணி, சேலை, சவுரி வைத்து திறமையாக உடை, கூந்தல் அலங்காரம் செய்து முடித்தார். ஒரு சவுரியைக் கொண்டு, கொண்டை, ஜடை, லாங் ஹேர், ஷார்ட் ஹேர்னு விதவிதமா ஹேர் ஸ்டைலை செய்தார். காணொலி வெற்றியில் அம்மாவுக்கும் சரி பங்கு உண்டு. எனது காணொளிகளை யூடியூபில் பார்த்துவிட்டு பிரபலமான ஆடை நிறுவனம் (போத்திஸ்) என்னை வைத்து விளம்பரப்படமொன்றைத் தயாரித்தது. அதற்காக சென்னை சென்று வந்தேன்.
புதிய காணொலியாக செவ்வாய் கிரகத்திற்குப் போவது குறித்தான காணொலி. . அதற்கான ராக்கெட், செவ்வாய் கிரகத் தோற்றம் போன்றவற்றை அப்பா கிராபிக்ஸில் கச்சிதமாகச் செய்தார். விண்வெளி வீரன், செவ்வாயில் டீ கடை நடத்துபவர், டீ கடைக்கு வேண்டிய பால், டீ தூள், சீனி சப்ளை செய்யும் விமானப் பெண்ணாகவும், பூமியில் இருக்கும் மனிதனாகவும் நான்கு வேடங்களில் நடித்திருக்கிறேன். சில காணொலிகளில் எட்டு வேடங்களில் நடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு வேடத்திலும் தனித்தனியாக நடிக்க வைத்து, பிறகு அப்பா ஒரே காட்சியில் அத்தனை பாத்திரங்களும் வருமாறு செய்துவிடுவார். இதனால்தான் எனது காணொலிகளுக்கு மக்களின் ஆதரவு அமோகமாகக் கிடைத்திருக்கிறது.
"நடி..' என்று அப்பா வற்புறுத்த மாட்டார். "நடிக்க ரெடி' என்று நான் சொன்னதும்தான் அப்பா படம் பிடிக்கத் தொடங்குவார். தினமும் படப்பிடிப்பு இருக்காது. வாரத்திற்கு இரண்டு நாள் படப்பிடிப்பு நடக்கும். பிறகு அப்பா எடிட்டிங், மிக்சிங் போன்ற வேலைகளை பார்ப்பார். பிறகுதான் யூடியூபில் பதிவேற்றம் செய்வார். விண்வெளி வீரனாக நடிக்க உடைகளை அம்மா தயார் செய்தார். வீட்டில் பல உடைகள், காட்சிகளை அமைக்கத் தேவைப்படும் பொருள்களின் பெரிய சேகரிப்பே உள்ளது.
பெண்ணாக நடிக்கும் போது தலையில் சவுரி வைத்து நடிப்பேன். அப்போது சவுரி கழுத்தில் பட்டு அசெளகரியமாக இருக்கும். அடிக்கடி கழுத்தைச் சொறியணும். "எந்திரன்' வேஷத்தையும் போட்டிருக்கேன். அப்பா வசனங்களை எழுதுவார். நானும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு சொல்ற மாதிரி நடித்துவிடுவேன்.
இன்ஸ்டாகிராம், ஷேர் சாட்ல ரித்து காணொலிகளை பதிவேற்றம் செய்ய ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இந்த அரிய வாய்ப்பு கிடைக்கறதுக்குக் காரணம் எனது காணொலிகளை மக்கள் ஆர்வமா பார்த்து வாடிக்கையாளர்களாக மாறியிருப்பதுதான். அவங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்''என்கிறார் ரித்விக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT