தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நாடகம், செய்தி வாசிப்பு என சின்னத்திரை முகமாக இருந்தவர் ப்ரியா பவானி சங்கர், தற்போது சினிமாவில் ஹீரோயின். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் "மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமான இவரின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள் பல இயக்குநர்கள். சின்னத்திரை டூ சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
எப்படி இருந்தது முதல் சினிமா அனுபவம்?
கேமிரா குறித்த அனுபவங்கள் இருந்ததால், சினிமா மிகவும் பிரம்மாண்டமானது என்ற பயமே வரவில்லை. தொலைக்காட்சியிலிருக்கும்போது எப்படிப் படப்பிடிப்புக்குச் செல்வேனோ, அப்படித்தான் எனக்கு சினிமாவும். இரண்டுக்குமான வேறுபாடுகள் பெரிதாக தெரியவில்லை. இனிமேல் நாம் ஸ்டார் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. எப்போதுமே வேலையில் நேர்மையாக இருப்பேன். அதே நேர்மைதான் சினிமாவில் நடிக்கும் போதும். செய்தி வாசிப்பதில் எனக்கு ரசிகர்கள் ஏராளம். நீங்கள் செய்தி வாசித்தால் பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். மக்களின் கருத்துதான் முக்கியம்.
தொலைக்காட்சி, சினிமா என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
தொலைக்காட்சிக்கான ரீச் பெரியது. நம்மை நேரடியாக மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அதனால்தான் சினிமாவை விளம்பரப்படுத்தக் கூடத் தொலைக்காட்சிக்குச் செல்கிறோம். சினிமாவில் தற்போதுதான் அறிமுகம் என்றாலும், தொலைக்காட்சி மூலமாக அனைவரது வீட்டுக்கும் ஏற்கெனவே சென்றடைந்துவிட்டேன். தொலைக்காட்சியில் என்னைப் பார்த்துப் பாராட்டியவர்கள், சினிமாவில் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருந்தேன். தொலைக்காட்சி, சினிமா என அனைத்துமே வேலைதான். அதற்கான வரவேற்பு என்ன என்பது தெரிந்திருக்கிறது. அந்த வித்தியாசத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஆர்வமாக இருக்கிறேன்.
அதிக சம்பளம், புகழ், கேமிரா வெளிச்சம் என்பதற்காகத்தான் பொறியாளர் பணியை விடுத்து வந்தீர்களா...
பிடித்த இடத்தில் இருக்கிறேன். அவ்வளவுதான். இதில் பெரிய அளவில் குழப்பிக் கொள்ள எதுவுமில்லை. பொறியாளர் வேலையை விட்டு, மீடியாவுக்குள் வருவதை பேஷனாக நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. பொறியாளர் வேலையைப் பிடித்துச் செய்பவர்கள், குடும்பச் சூழலால் பணிபுரிபவர்கள், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். சினிமா ஒரு பெரிய துறையைப் போல, ஐ.டியும் ஒரு பெரிய துறை. எனக்குப் பொறியாளர் வேலை பிடிக்கவில்லை, விட்டு விட்டேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு மீடியா மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. பகுதி நேரமாகச் செய்து வந்ததை, முழு நேரமாகச் செய்து பார்க்கலாம் என்று இதற்குள் வந்தேன்.
நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...
நண்பர்களுக்குக் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். சிலர் டி.வி.சேனல்களிலேயே நீதான் நம்பர் ஒன் இடத்துக்கு வர வேண்டும் என்றார்கள். சிலர் சினிமாதான் உனக்கு சரியான இடம் என்றார்கள். கருத்துக்கள் என்பதே மாறுபட்டவைதான். படம் வந்தால், இந்த கருத்து சதவீதத்தின் தன்மை மாறும். படம் வெளியாகி என்ன விமர்சனம் வரும் என்பதைத் தாண்டி நண்பர்கள் வாயிலிருந்து வரும் கருத்துகளிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியவில்லை. இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நல்ல இடத்தில் வந்து நிற்கும் ஒரு படமாக நிச்சயம் இருக்கும்.
இனி சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியுமா...
தொலைக்காட்சியில் நடிப்பதை இப்போது தவிர்த்திருக்கிறேன். அவ்வளவுதான். அது சினிமாவுக்காக எடுத்துக் கொண்ட நேரம். மற்றபடி சினிமா என்பது இயக்குநர்கள் அழைக்கும் போது பார்க்கலாம். சினிமா என் எண்ணத்தில் ஒரு போதும் இருந்ததில்லை. "மேயாத மான்' கதை என்னை சினிமாவுக்குள் இழுத்து விட்டது. நல்ல அழைப்பை தட்ட முடியாமல் வந்து விட்டேன். எனக்காக கதாபாத்திரங்களை உருவாக்கி அழைத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். இல்லையென்றால் என் வழக்கமான வேலைகள் தொடரும்.
ரோல் மாடல்....
ஆண்ட்ரியா "தரமணி' படத்தில் தனி பாணி நடிப்பை உருவாக்கி விட்டார். அது போல்தான் தனித்துவத்தை கொடுக்க வேண்டும் என் விரும்புகிறேன். "பூ' படத்தில் நடித்த பார்வதி சிறந்த நடிகை. சினிமாவின் இலக்கணங்களை மீறி இருக்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இது மாதிரி நிறைய ரோல் மாடல்கள் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.