காய்கனிகளில் விரும்பிய உருவங்களைச் செதுக்குவதில் திறமைசாலியாய் திகழ்கிறார் சமையல் கலை நிபுணர் தா. ஆனந்தகுமார்.
நாற்பத்து ஆறு வயதான இவர், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்தவர். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துவிட்டு சமையல் கலை தொழில்நுட்பம் பயின்று, திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
"பள்ளிக் காலத்தில் தெர்மாகோல் மூலம் கலைப் படைப்புகளை உருவாக்கி, பல்வேறு பரிசுகளைப் பெற்றேன்.
சமையல் கலைக்கு வந்தவுடன் காய்கனிகளில் சிற்பம் செதுக்குவதில் ஆர்வம் ஏற்பட்டது. ஓய்வு நேரங்களில் பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, அன்னாசி உள்ளிட்ட காய்கனிகள், பழங்களில் பறவைகள், மீன், பூக்கள் எனப் பலவகை வடிவங்களையும், தர்பூசணியில் சுவாமி படங்களையும், முக்கிய நபர்களின் உருவப் படங்களையும் செதுக்கி வருகிறேன்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது முப்பதுக்கும் மேற்பட்ட தோற்றங்களை தர்பூசணியில் வடித்தேன்.
நட்சத்திர விடுதியில், உணவுகளைச் சுவையாக சமைப்பதுடன், அவற்றை அழகாக காட்சிப்படுத்துவதும் முக்கியம்.
கடந்த 17 ஆண்டுகளாக சமையல் கலை நிபுணராக உள்ள நிலையில், காய்கனிகளை விதவிதமான வடிவங்களில் செதுக்கும் கலையில் எனது சொந்த ஆர்வத்தாலும், புதுப்புது முயற்சியாலும் நிறைய கற்றேன்.
நான் பணிபுரியும் நட்சத்திர விடுதியில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தங்கியிருந்ததை அறிந்து, தர்பூசணியில் அவரது உருவப் படத்தை செதுக்கி அவரிடமே வழங்கினேன். அவர் என்னை வெகுவாகப் பாராட்டியதுடன் புகைப்படமும் எடுத்துகொண்டார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தரும்போது, அவர்களது நாடுகளின் தேசிய சின்னம், உலக அதிசயங்கள் உள்ளிட்டவற்றை காய்கனிகளில் செதுக்கி பார்வைக்கு வைக்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி அளவற்றது.
தற்போது சுப நிகழ்ச்சிகளில் காய்கனிகளில் கலை அலங்காரம் செய்ய மக்கள் அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். மணமக்களின் உருவத்தை காய்கனிகளில் செய்து கொடுப்பதுடன் மணமேடையை காய்கனிகளைக் கொண்டு அலங்கரித்து கொடுக்கிறேன்.
திருமண அலங்காரத்துக்கு 10 மணி நேரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. சுவாமி படங்கள், முக்கிய தலைவர்களின் உருவப் படங்களை ஒரு மணி நேரத்தில் செதுக்கி விடுகிறேன்.
2017- ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த "உதய் சமுத்ரா' நிறுவனம், 2018 ஆம் ஆண்டு சிகா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்தக் கலையை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். எனது முயற்சிக்கு குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.