அடுக்குமாடி கட்டடச் சுவர்களில் பல வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்ட சுவர் ஓவியங்கள்தான் அந்தப் பகுதியைக் கடப்பவர்களை நின்று ரசிக்கச் செய்கிறது.
கோவை அருகேயுள்ள உக்கடம் புல்லுக்காட்டில் நகர்ப்புற வாழ்விட வாரிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டங்களில்தான் அவை வரையப்பட்டிருக்கின்றன.
இந்த ஓவியங்களை வரைபவர்கள் பட்டியலில் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் ஓவியர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சென்னை மாநகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றும் திட்டத்தின்படி, மேம்பாலங்கள், பெரிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டன.
கோவையிலும் அதே யுக்தியை ஓவியர்கள் கையாண்டுள்ளனர். உள்ளூர் ஓவியர்களுடன், சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஓவியர்களும் கை கோர்த்துள்ளனர்.
சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை பெரிய அளவில் வரைந்து, கோவை மாநகரவாசிகளை அசத்தி வருகின்றனர்.
சில சுவர் ஓவியங்கள் 42 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட ஓவியங்களாக அமைந்துள்ளன.
"தெருக் கலை' என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பல நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் உலக நாடுகளைச் சுற்றும்பொழுது சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் வெளிச் சுவர்களில் அந்தப் பகுதியில் நிலவும் சூழ்நிலைகளை உள்வாங்கி கண்களை, மனங்களைக் கவரும் விதத்தில் பொருத்தமான ஓவியங்களை பல நிறங்களில் பிரமாண்டமாக வரைவது அவர்களின் பொழுதுபோக்கு. இந்த வகையில், கோவையை ஓவிய நகரமாக மாற்றிவருகின்றனர் உள்ளூர் வெளிநாட்டு ஓவியர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.