ஞாயிறு கொண்டாட்டம்

இன்னிசை பாடிவரும்..!

மெல்லிசை குழுக்களின் மறுமலர்ச்சிக்கு நம்பிக்கை

சந்திரமௌலி

மெல்லிசை நிகழ்ச்சிகள் இல்லாத திருமண வரவேற்புகளா? என்று சொல்லும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெற்றிருந்தன. இன்று காலம் மாறி, மவுசு குறைந்துவிட்டது. அதற்கு கரோனா தொற்று மிக முக்கிய காரணம் என்றாலும், அதுமட்டுமே காரணம் அல்ல'' என்கின்றனர் 'மேடை மெல்லிசை, தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத் தலைவரான 'லட்சுமண் சுருதி' நிர்வாகி லட்சுமணன், துணைத் தலைவரான 'சாதகப் பறவைகள்' சங்கர்.

மெல்லிசைக் குழுக்களில் பங்களிக்கும் பாடகர்கள், வாத்திய இசைக் கலைஞர்கள், இதர ஒலி, ஒளி தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 2019-ஆம் முதல் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் லட்சுமணன், சங்கரிடம் பேசியபோது:

''தமிழ்நாடு முழுவதிலுமாக ஐநூறுக்கும் அதிகமான மெல்லிசைக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றில் சென்னையில் 150, சேலத்தில் 70, வேலூரில் 50, மதுரையில் 50 என குழுக்கள் இருக்கின்றன.

தமிழகம் முழுவதுமாக சுமார் 200 மெல்லிசைக் குழுக்கள் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் சில குழுக்கள் ஆடி மாதத்தில் மட்டும் கோயில்களில் கச்சேரிகளைச் செய்வார்கள்.

1980, 1990-களில் திரைப்படங்கள் மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. மெல்லிசை நிகழ்ச்சிகள் என்றால் ஊரே திரண்டு வரும். திருமண வரவேற்பில் மெல்லிசைக் கச்சேரிகள் கண்டிப்பாக இடம்பெறும்.

மனசுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்கள், பிரபலமான பக்திப் பாடல்களை நேரடியாக லைவ் மியூஸிக்குடன் கேட்டு ரசிப்பதை மக்கள் மிகவும் விரும்பினார்கள். மூன்று தெருக்கள் கூடும் சந்திப்பில், கோயில் கச்சேரிகள் என்றால் இசையைக் கேட்டு ரசிக்க மக்கள் பெருந்திரளாகக் கூடுவார்கள்.

பத்து மணிக்குக் கச்சேரி என்றால், நாங்கள் ஏழு மணிக்கு மேடையில் இசைக்கருவிகளை நிகழ்ச்சிக்காகத் தயார் செய்வதைக் கூட ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பார்கள். கச்சேரி முடிந்தவுடன், அடுத்த அரை மணி நேரத்துக்கு பாடகர்கள், இசைக்கலைஞர்களை மக்கள் சந்தித்துப் பாராட்டுவதும், கை குலுக்குவதும், ஆட்டோகிராஃப் வாங்குவதும் என்று மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

2000-க்குப் பின்னர் தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்துவிட்டன. திரை இசைக்கென்றே 24 மணி நேர சேனல்களும் துவக்கப்பட்டுவிட்டன. தொலைக்காட்சிகளில் சிறந்த திறமை கொண்ட பாடகர்களைக் கண்டறியும் இசை ரியாலிடி நிகழ்ச்சிகள் வந்துவிட்டன.

இவற்றையெல்லாம் மீறி பேரிடியாக வந்து இறங்கியது கரோனா தொற்று. பொது முடக்கங்கள், சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் எல்லாம் சேர்ந்து திரைத்துறை, நாடகங்கள், மெல்லிசை என அனைத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

மெல்லிசைக் குழுக்களில் பாடகர்கள், வாத்திய இசைக் கலைஞர்கள் போன்றோர் இசையின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டு, இந்தத் துறைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எனவே, பொது முடக்கக் காலத்தில், வேறு எந்தத் தொழிலுக்கும் போய் சம்பாதிக்கவும் வழி இல்லை. நிலைமையைச் சமாளிக்க பலர் கடன் வாங்கி, மிகவும் சிரமப்பட்டனர். சிலர் கிடைத்த வேலையை செய்து ஜீவனம் நடத்தினர்.

எங்கள் சங்கம் மூலமாக, அத்தியாவசியப் பொருள்களை ஒரு சிலருக்கு வழங்கி உதவினாலும், பெரிய அளவில் உதவிக்கரம் நீட்ட எங்களுடைய நிதி நிலைமை இடம் தரவில்லை. ஒட்டுமொத்த பொருளாதாரமே கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் சிறு அளவில்தான் உதவினார்கள். எனவே, மெல்லிசைக் குழுவினர் மிகக் கடுமையான நெருக்கடி நிலையைச் சந்தித்தனர்.

பொது முடக்கம் விலக்கப்பட்டு, நிலைமை சீரடைந்தபோதிலும் எங்கள் நிலைமையில் முன்னேற்றமில்லை. கட்டுப்பாடுகளோடு திருமணங்கள் நடத்தவேண்டிய கட்டாயத்தில், சிக்கனமாகத் திருமணம் நடத்துவதை வரப்பிரசாதமாகக் கருதினார்கள். இந்தக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட முதல் பலி வரவேற்பின்போது நடக்கும் மெல்லிசை நிகழ்ச்சிகள்தான்.

முழுமையான இசைக் கருவிகளுடன் கூடிய மெல்லிசைக் கச்சேரிகள் என்பது மாறி, டி.ஜே. என்று அழைக்கப்படும் 'டிஸ்கோ ஜாக்கி' என்கிற கலாசாரம் திருமணம் உள்ளிட்ட பொதுவான இசை நிகழ்ச்சிகளிலும் நுழைந்து

விட்டது. பதிவு செய்யப்பட்ட பாடல்கள் ஒலிக்க, இளைய தலைமுறையினர் குத்தாட்டம் போடுவது அதிகரித்துவிட்டது. இதற்கு செலவும் குறைவு.

சேனல்களின் இசை ரியாலிடி ஷோக்கள் மூலமாக பிரபலம் அடையும் இளம் பாடகர்கள், பாடகிகள் 'கொரோகே' என்ற பதிவு செய்யப்பட்ட பின்னணி இசை அல்லது மிகக் குறைவான இசைக் கலைஞர்களோடு குழுக்களை அமைத்து, பாடல்களை பாடி, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, திருமண மண்டபங்களில் இனிமையான இசையை ரசிக்கக் கூடிய வகையில் ஒலி உள்கட்டமைப்புகள் இல்லை. அதீத சப்தம், எதிரொலி காரணமாக, இசையை ரசிக்கக் கூடிய சூழலுக்கு பதிலாக இரைச்சல்தான் உள்ளது என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. . இதனால் ஒரு சாரர், வரவேற்பு நிகழ்ச்சிகளின்போது, பதிவு செய்த மென்மையான இசை ஒலிக்கச் செய்வதை விரும்புகிறார்கள். இது மெல்லிசைக் குழுக்களின் வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது.

முன்பெல்லாம் அரங்குகளில் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பங்கேற்கும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்து, ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். ஆனால், கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில், மெல்லிசை நிகழ்ச்சிகள் முன்னுரிமை இழந்துவிட்டன.

இருந்தாலும், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்தும் 'லைவ் மியூசிக்' நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் மீண்டும் மெல்லிசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு மறுமலர்ச்சி வரும் என்பது எங்களது நம்பிக்கை'' என்றனர் லட்சுமணன், சங்கர்.

பிரபல 'உதயராகம்' மெல்லிசைக் குழுவின் யு.கே.முரளி:

1980, 1990- கள்தான் மெல்லிசை குழுக்களுக்குப் பொற்காலம். அப்போது திரைப்படப் பாடல்களே மக்களின் ரசனையில் ஒன்றிப் போன ஒரு விஷயமாக இருந்தது. மெல்லிசைக் குழுக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆண்டுக்கு 200-க்கும் அதிகமான படங்கள் வெளியாகும். ஒவ்வொன்றிலும் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெறும். அவற்றை எல்லாம் ஒத்திகை பார்த்து, மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும்போது மக்கள் கேட்டு ரசித்து மகிழ்வார்கள். பிரபலமான மெல்லிசைக் குழுக்களுக்கு மாதத்தில் இருபது, இருபத்தைந்து நாள்கள் நிகழ்ச்சிகள் இருக்கும்.

விடுமுறை நாள்களில் ஒரே நாளில் நான்கு நிகழ்ச்சிகள், மாதத்தில் 35 நிகழ்ச்சிகள் என்று படுபிஸியாக நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம். இப்போது புதிய திரைப்படங்கள் வெளியாவது மிகவும் குறைந்துவிட்டது. ஹிட் பாடல்களும் குறைவுதான். எனவே, பல்வகையான பாடல்களை, ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுக்க வேண்டி உள்ளது'' என்றார் முரளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT