முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஐ.பி. எல். போட்டியில் சிறுவன்

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலம் முடியும் தருணத்தில், திடீரென பதிமூன்று வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியை ஏலம்விட அறிவிப்பு வெளியானது.

Updated On : 1 டிசம்பர், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 நவம்பர், 2024 at 11:59 PM

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலம் முடியும் தருணத்தில், திடீரென பதிமூன்று வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியை ஏலம்விட அறிவிப்பு வெளியானது. அடிப்படை விலை முப்பது லட்சம் ரூபாய்தான்! ஆனால் வைபவை வாங்க ராஜஸ்தான், தில்லி அணிகள் போட்டா போட்டி போட, ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வாங்கிவிட்டார்.

கிரிக்கெட் ரசிகர்களைத் திகைப்புள்ளாக்கி இருக்கும் இந்தச் சிறுவனை அறிவோம்:

பீகாரின் தாஜ்பூர் கிராமத்தில் 2011 மார்ச் 27-இல் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, நான்கு வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். விவசாயியான தந்தை சஞ்சீவ், வைபவுக்காக வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய பயிற்சிக் களத்தை உருவாக்கினார். ஒன்பது வயதில் கிரிக்கெட் அகாதெமியில் சேர்த்தார்.

Advertisement

தனது திறமையால் வைபவ் கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க, வினோ மன்கட் டிராபியில் பன்னிரெண்டாம் வயதில் களம் இறங்கி, ஐந்து போட்டிகளில் 400 ரன்களை அடித்தார்.

12 ஆண்டுகள் ஒன்பது மாதங்களேயானபோது, வைபவ் 2023-இல் ரஞ்சி கோப்பை போட்டியில், 'கிரிக்கெட் வரலாற்றில் இளம் வீரர்' என்ற பெருமையுடன் அறிமுகமானார்.

Updated On : 30 நவம்பர், 2024 at 11:59 PM

இந்தச் சாதனை இதுவரை யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவருக்கும் மட்டுமே சொந்தமாக இருந்தது.

நவம்பர் 2023-இல் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற நாற்கரத் தொடருக்கான இந்தியா 'பி யூ-19' அணியில் சூர்யவன்ஷி இடம் பெற்றார். வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான 'இந்தியா ஏ யூ 19' அணிக்காக வைபவ் தேர்வானார். 'ஐசிசி யூ-19 'உலகக் கோப்பை 2024 அணி'யிலும் வைபவ் இடம் பிடித்தார்.

எட்டாம் வகுப்பு மாணவனான வைபவ், இந்தியா 'யு 19' அணிக்காக விளையாடி வருபவர். ரஞ்சி டிராபியிலும் பீகார் அணிக்காக ஐந்து முறை வைபவ் பேட்டை சுழற்றியுள்ளார்.

ஐந்தரை அடி உயரமுள்ள, இடதுகை பேட்ஸ்மேனான வைபவ், விரைவில் தொடங்கவுள்ள 'யு19' பிரிவுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓர் அங்கம். ஆஸ்திரேலியா 'யு19' அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வைபவின் திறமை, 108 ரன்களை எடுத்ததில் பளிச்சிட்டது.

2005-இல் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் சதம் அடித்த இங்கிலாந்தின் மொயீன் அலிக்கு பிறகு, யு-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிவேக சதமும் வைபவுக்குச் சொந்தம்.

வைபவின் தேர்வு பேசுபொருளாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.