கோவையில் அண்மையில் நடைபெற்ற ஜே.கே. டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் மோனித் குமரன் எல்.ஜி.பி. எஃப். 4 ரூக்கி பிரிவில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்குத் தனி ரசிகர்கள் உண்டு. அந்தப் பந்தயங்களைக் காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கம்.
கார் பந்தயத்தில் பங்கேற்பது அதிக பொருள் செலவு பிடிக்கும் என்பதாலும், உயிரிழப்பு ஏற்படும் என்பதாலும், இந்தியாவில் இதற்குப் போதிய வரவேற்பு தொடக்கத்தில் கிட்டவில்லை. ஆனால், தற்போது இளம் வீரர்கள், வீராங்கனைகள் அதிக அளவில் கார், பைக் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதில் ஓபன் பிரிவிலும், சிறுவர், சிறுமியர் பிரிவுகளிலும் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சென்னை, இருங்காட்டுக் கோட்டை, கோவை கரி வேகப்பந்தய மைதானம், ஹைதராபாத், நொய்டா போன்ற இடங்களில் மைதானங்கள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள கரி வேகப்பந்தய மைதானத்தில் அண்மையில் ஜேகே டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. இதில், 93 புள்ளிகளுடன் எல்.ஜி.பி. எஃப். 4 ரூக்கி பிரிவில் மோனித் சரவணன் சிறப்பாகச் செயல்பட்டு, பட்டம் வென்றுள்ளார். மூன்று, நான்காவது சுற்றுகளில் 3-இல் வென்றார் மோனித்.
எல்.ஜி.பி. பிரிவு என்பது ஒற்றை இருக்கை, ஓபன் வீல் ரேசிங் தொடக்க வகைப் பந்தயமாகும். இதில் 1298 சி.சி. திறன் கொண்ட பந்தய கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மோனித் குமரனுக்கு சிறுவயது முதலே பந்தய வீரராக வரவேண்டும் என்பதே நோக்கமாகும். பள்ளியில் கணிதப் பாடம் பயிலும்போது, மிகவும் தாமதமாக முடிப்பாராம். இடது கைப்பழக்கத்தால் தாமதமாக கணக்குப் பாடங்களை முடிப்பாராம்.
இதுகுறித்து மோனித் கூறியது:
'முதன்முதலில் கோவையில் கார்ட்டிங் பிரிவில் வென்றேன். பார்முலா 1300 நொவிஸ் கோப்பை பிரிவில் பங்கேற்கத் தீர்மானித்தேன். ஆனால் கரோனாவால் அதுமுடியாமல் போய்விட்டது. தற்போது அஹுரா ரேசிங்கில் இடம் பெற்று பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன்'' என்கிறார்.
ஐந்து முறை தேசிய சாம்பியன் பெற்ற கணேஷ் பிரசாத்திடம் பயிற்சி பெறுகிறார் மோனித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.