ஞாயிறு கொண்டாட்டம்

பசுமைச் சுற்றுலாவுக்கு பச்சைமலை!

திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத் தொடர் பச்சைமலை.

ஆர். முருகன்

திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத் தொடர் பச்சைமலை. கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைத்தொடர்களுள் ஒன்றான இந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய வகையில் பசுமைச் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

அருவிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மலையேற்றம், கோடை வாசஸ்தலம் உள்ளிட்ட சிறப்புகளோடு, தேன், பலா, மா, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட விளைபொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இரவு தங்கி மலைச் சூழலை முழுவதும் ரசித்து மகிழலாம். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்து செல்ல ஏற்ற பகுதியாகும்.

சுமார் 19, 076 ஹெக்டேரில் மலை விரிந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீ. வரை உயரம் கொண்டது. சுமார் 527 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.35 காப்புக் காடுகள் உள்ளன. சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, வனத் துறையால் பராமரிக்கப்படுகிறது.

தென்புற நாடு, ஆத்தி நாடு, வன்னாடு, கோம்பைநாடு ஆகிய நான்கு பகுதிகளாக 48 கிராமங்களில் 'பச்சை மலையாளி' என்று அழைக்கப்படும் மலைவாழ்மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழிலாகும். இங்கு தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் பல உள்ளன.

இங்குள்ள மக்களின் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கேற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. பொழுதுபோக்குக்காக நாடகங்களை நடத்தி வருகின்றனர். இங்கு, விளையும் பயிர்களில் முந்திரி, மரவள்ளிக் கிழங்கு, பலாப்பழம், மாம்பழம் ஆகியன மலையின் சிறப்புப் பெற்றவை.

154 விதமான பறவை இனங்களும், 135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும் உள்ளன. 3 வாழிடங்களில் நூற்றுக்கணக்கான மான்கள் உள்ளன. காட்டுப் பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளை கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன.

மழைக் காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூற்று அருவி உள்ளிட்டவை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.

மலையேற்றம் செய்வதற்கு கனபாடி- கன்னிமார் சோலைபாதை, கனபாடி - ராமநாதபுரம் பாதை ஆகிய இரு பாதைகள் உள்ளன. கீழ்கரை கிராமத்தில் உள்ள ஏரியில் சுற்றுலாத் துறை சார்பாக படகு சவாரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சோலைமதி காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன.

பச்சைமலையில் உற்பத்தியாகும் கல்லாற்றில் விசுவக்குடி அருகே 40 மில்லியன் கனஅடி நீரை தேக்கும் விதமாக நீர்த் தேக்கம் அமைக்கபட்டுள்ளது.

பச்சைமலையின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக டாப் செங்காட்டுப்பட்டி, கீழ்கரை, கன்னிமார் சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை சார்பாக பார்வை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேனை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.

வனத்துறை சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கும் வழிகாட்டுதல் உள்ளது. பயிற்றுநர் உதவியுடன் கம்பார்-அரசடி, மாமரத்து சோலை-கீழ்கரை, காளியம்மன்கோயில்-செண்பகம் இயற்கைவழித்தடம், மாமரத்துசோலை-மூலக்காடு வரையில் மலையேற்றம் செல்லலாம்.

பச்சைமலையில் ரூ.4.27 கோடி மதிப்பில் பசுமைச் சுற்றுலாத் திட்டத்தை பிரத்யேகமாக வடிவமைத்து, தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுவுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருந்தது. இதற்கு மாநிலத் திட்டக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, , பச்சைமலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமையாகத் செயல்படுத்தப்படவுள்ளது. மூன்று மலையேற்றப் பாதைகள், டாப்செங்காட்டுப்பட்டியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்கள், அழகிய கலைத்தோற்றத்துடன் ஓய்விடம் கட்டமைக்கப்படுகின்றன.

அருவிகளை மேம்படுத்துதல், காட்சியிடங்களை அழகுபடுத்துதல், மலைவாழ் மக்கள் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துதல் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களும் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதுமட்டுமல்லாது ரூ.1.1 கோடியில் டாப்செங்காட்டுப்பட்டியில் குடில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

எப்படி செல்வது?

திருச்சியிலிருந்து 90 கி.மீ., பெங்களூரிலிருந்து 310 கி.மீ., சென்னையிலிருந்து 351 கி.மீ. தொலைவு உள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் பச்சைமலை உள்ளது. சோமனபுரம் சோதனைச் சாவடி. சோமனபுரத்திலிருந்து 30 நிமிட பயணத்தில் 16 கி.மீ.,தூரத்தில் பச்சைமலை தொடங்குகிறது. துறையூரிலிருந்து மூலக்காடு வழியாகவும் பச்சைமலைக்கு வரலாம்.

திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து காலை, பிற்பகல், மாலை நேரங்களில் சோலமதி வரையும், காலை, பிற்பகல், இரவு என போதக்கல் வரையும் பேருந்து செல்லும். உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாயம்பாடிக்கு காலை, மாலை வேளைகளிலும், போதக்கல் பகுதிக்கு காலை வேளையும் பேருந்து வசதி உள்ளது. வனத் துறை பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT