சோலையார் வனத் தொடர்களின் நுழைவாயிலில் கம்பீரமாக அமைந்துள்ளதுதான் 'தென்னிந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் எண்பது அடி உயர அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. கேரளத்தின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியும் இதுதான்.
இயற்கை அதிசயத்தை, அழகை ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பிக்கும் ரசவாதம் அதிரப்பள்ளியில் அரங்கேறுகிறது. இதைச் சுற்றியுள்ள அரிய தாவரங்கள், விலங்கினங்கள், ஏனைய இயற்கை அழகான சுற்றுலாத் தலங்களுடன் போட்டி போட வைக்கின்றன.
சாலக்குடி ஆறுதான் அதிரப்பள்ளி அருவியாக மலையிலிருந்து பல பிரிவுகளாகக் குதித்து வானவில்லை சிருஷ்டிக்கிறது. மழைக்காலத்தில் சுமார் முந்நூறு அடி அகலத்தில் நீர்வீழ்ச்சி சீற்றத்துடன் பாயும் காட்சி மனதை அள்ளும். சாலக்குடி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனமலைக் குன்றுகளில் பிறந்து, வனப் பகுதி வழியாக நெளிந்துப் பயணிக்கிறது.
1980-களுக்கு முன்னர் இந்த நீர்வீழ்ச்சி குறித்து கேரளத்தில் பலருக்கும் தெரியாது. கேரள மாநில மின்சார வாரியம் இங்கு ஒரு அணை கட்டி நீரைத் தேக்கி மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டம் தீட்டியபோது, 'அணை கட்டினால் ஆற்றின் போக்கு மாறும். அதனால் பல பாதிப்புகள் ஏற்படும்' என்று பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது சர்ச்சையாகி, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
1986 -இல் தயாரான பாலசந்தரின் 'புன்னகை மன்னன்' காதல் - தற்கொலை காட்சிகள் அதிரப்பள்ளி அருவியில்தான் படம் பிடிக்கப்பட்டன. படம் வெற்றி பெற்றதும், அதிரப்பள்ளியும் பிரபலமானது. கமல், ரேகா பாறையில் எழுதிய வாக்கியத்தை வாசிக்கவும், அருகில் நின்று படம் பிடிக்கவும் இளைய தலைமுறையினர் அதிரப்பள்ளி வரத் தொடங்கினர்.
இப்படித்தான் அதிரப்பள்ளி சுற்றுலாத் தலமாக பிரபலமானது. தொடர்ந்து பல கால இடைவெளிகளில் 'குரு', 'தில் சே','ராவணன்', 'பாகுபலி' உள்ளிட்ட படங்களின் காட்சிகள் இங்குதான் படம்பிடிக்கப்பட்டன.
அதிரப்பள்ளி - வாழச்சால் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை காட்டெருமை, கடமான், சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகளும், பல்வேறு இருவாட்சி இன பறவைகளும் வாழ்கின்றன. நீர்வரத்து குறைவான காலங்களில், அதிரப்பள்ளி அருவியின் உச்சிக்குச் செல்லலாம்.
அங்கிருந்து கீழே விரிந்துக் கிடக்கும் ஆறு தவழ்ந்து செல்லும் நிலப்பரப்பு, வனத்தைக் காணலாம். வெவ்வேறு வழியாக வனப்பகுதியில் டிரெக்கிங் போகலாம். அதுபோல, தண்ணீர் குறைவாக விழும்போது, மலையின் அடிவாரத்திலிருந்து அருவியின் உச்சி முதல் பாதம் வரை பார்க்கலாம்.
அதிரப்பள்ளிக்கு 5 கி.மீ. தொலைவில் இருக்கும் 'வாழச்சால் அருவி' ஒரு போட்டி அருவியாகும். அதிரப்பள்ளி சுற்றி பட்டாம்பூச்சி பண்ணை, பொழுதுபோக்கு வாட்டர் தீம் பார்க் இருக்கிறது. சாகசம் விரும்புபவர்கள் ஜங்கிள் சஃபாரியும் போகலாம்.
ஜூன் முதல் டிசம்பர் வரை அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் பொங்கிப் பாயும். இந்தக் காலத்தில் தூர நின்று மட்டுமே ரசிக்க முடியும். ஜனவரி முதல் மே வரை தண்ணீர் வரத்து குறைந்துவிடும். இந்த மாதங்களில் அதிரப்பள்ளி அருவியின் உச்சிக்குச் செல்லாம்.
அதிரப்பள்ளி வந்து செல்ல அருகில் உள்ள ரயில் நிலையம் சாலக்குடி. கொச்சி விமான நிலையம் முக்கால் மணி தூரத்தில். அதிரப்பள்ளி வரும்போது குருவாயூர், கொச்சியையும் சேர்த்து மூன்று அல்லது நான்கு நாள்களில் சுற்றி பார்த்துப் போகலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.