பொ.ஜெயச்சந்திரன்
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் திருவள்ளுவர் சிலை, நாடாளுமன்றத்தில் குராய்டன் தமிழ்ச் சங்கம் நடத்திய "சாதனைகள் படைத்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா' அண்மையில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் குறித்து சிலரிடம் பேசினோம்.
லண்டன் தமிழ் மொழி கலைக் கழகத்தின் இயக்குநர் சிவா பிள்ளை:
எங்களது கோரிக்கையை வி.ஜி.சந்தோஷம் மகிழ்ச்சியோடு ஏற்று, 183-ஆவது திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இதனால் எதிர்காலத் தலைமுறையினர் திருவள்ளுவரை அறிய முடியும்.
உலக அளவில் தமிழ்ப் பணி செய்வோரைக் கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் அளிக்க வேண்டும் என்று எண்ணினோம். இதனைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் சிறந்த தமிழ்ப் பணி செய்பவர்களைச் சேகரித்தோம். அவர்களை நாடாளுமன்றத்தில் கெளரவிக்க வேண்டும் என்று தமிழ்ச் சங்கத்துக்கு எண்ணம் உருவானது. இதற்கு ஒப்புதலும் கிடைத்தது. இதன்படி, 2025 ஜூன் 18-ஆம் தேதி மாலை 5 மணியளவில் இந்த நிகழ்வு நடந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோரைக் கொண்டு விருதாளர்களைக் கெளரவித்தோம். நாட்டுக்கு ஒரு நபர் வீதம் தங்கள் தமிழ் வளர்க்கும் முறை, பணி குறித்து சுருக்கமாகவும் அவர்கள் பேசினர்.
மலேசியா உலகளாவிய இணைய வழி தமிழ்ப் பள்ளியின் இணை நிறுவனர் ராதிகா ஹரீஸ்:
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. நான் புறப்படும் நேரத்தில்தான் அகமாபாத்தில் இருந்து, லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. மனதில் ஒரே நடுக்கம், தடுமாற்றம், கவலை. திடீரென்று நிகழ்ச்சி தள்ளிப் போடலாம் என்று அறிவித்தார்கள் என்றால் என்ன செய்யலாம் என்று பல கற்பனைகள் ஓடியது. இருந்தாலும் கடைசி நேரத்தில் ஒரே முடிவாக விமானத்தில் ஏறினேன். அறிவித்த நாளில் குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழின் குரல் உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நனவாக்கி, நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களின் பாராளுமன்றத்தையே அளப்பரிய சாதனையை செய்துள்ளனர். ஆக்ஸ்போர்ட்டில் அடிக்கல் நட்டு, திருவள்ளுவரையும் எதிர்வரும் தலைமுறையினர் கொண்டாட வழிவகுத்துள்ளனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் என்னுடைய பாதம் படுகிற வாய்ப்பை இறைவன் நமக்கு கொடுத்துள்ளான் என்று எனக்கு நானே கைத்தட்டி பாராட்டிக் கொண்டேன்.
சிட்னி தமிழ் வளர்ச்சி மன்ற நிறுவனர் சந்திரிகா சுப்பிரமணியன்:
தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அயராது பாடுபடும் தனிநபர்கள், அமைப்புகளின் கூட்டு முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிக்கு அன்றைய நிகழ்வே சான்றாகும். வரலாறு, அறிவு, மீள்தன்மை ஆகியவற்றில் ஆழ்ந்த ஆளுமை கொண்ட தமிழின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு பெருமையையும், கர்வத்தையும் தருகிறது.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சண்முகப்பிரியா கார்த்திகேசு:
இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும், தமிழுக்காக தம்மை அர்ப்பணித்துள்ளனர். அதனால் நானும் இலக்கியக் கட்டுரைகளை எழதி இருக்கிறேன். அந்த தொடக்கம்தான் எனக்குள் ஒரு விதையைப் போட்டது. தமிழை நான் நேசித்தது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இதனைப் பாராட்டும் விதமாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் விருது வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில்,மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தோழிகளின் அறிமுகம் கிடைத்தது பெருமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.