உலகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள "இந்தியன் ப்ரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம்நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.
சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் பணக்கார, செல்வாக்குமிக்கதுமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் ஐ.பி.எல். தொடர் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு தற்போது 18-ஆவது சீசனை எட்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இன்டியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொடர் ஆண்டுதோறும் மார்ச் தொடங்கி, மே வரை ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளும் முன்கூட்டியே விற்றுவிடுகின்றன. இந்திய, சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடம்பெற்று ஆடுவதால் உலகம் முழுவதுமே ஐ.பி.எல். தொடரைக் காண விழைகின்றனர்.
முக்கிய நட்சத்திர வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்பட்ட நிலையில், பல்வேறு வீரர்கள் திறமையின் அடிப்படையில் பெருந்தொகை தந்து அணிகளால் ஏலத்தில் வாங்கப்பட்டனர். ஐ,பி,எல், தொடரில் பல்வேறு நடுத்தர, ஏழை வீரர்களின் வாழ்க்கையில் பொருளாதாரமும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஐ.பி,எல். சீசனிலும் புதிய நாயகன்கள் உருவாகின்றனர்.
நிகழாண்டு ஐ.பி,எல். தொடரிலும் இளம்வயது வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
வைபவ் சூரியவன்ஷி 13 ஆண்டுகள், 243 நாள்கள் (ராஜஸ்தான் ராயல்ஸ்):
தில்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மத்தியில் ஏலத்தில் கடும் போட்டி நிகழ்ந்த நிலையில், பதிமூன்றே வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.
இதனால் ஐ.பி.எல். வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர். நடப்பாண்டில் பிகார் ரஞ்சி அணியில் அறிமுகமான அவர், யு-19 அணி டெஸ்ட் ஆட்டங்களில் ஆடியுள்ளார். பிரையன் லாராவை தனது முன்னோடியாக கருதும் வைபவுக்கு ராகுல் டிராவிட், குமார் சங்ககரா ஆகியோர் ஊக்கம் தந்து மெருகேற்றுகின்றனர்.
ஆன்ட்ரே சித்தார்த், 18 வயது, தமிழகம் (சென்னை சூப்பர் கிங்ஸ்):
ஐந்து முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் வயது குறைந்த வீரராக தமிழ்நாட்டின் ஆன்ட்ரே சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஏலத்தில் அவர்
ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். ஏற்கெனவே "தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2024' தொடரில் ஆடியுள்ள சித்தார்த், ஆடும் இரண்டாவது டி20 போட்டி ஐ.பி.எல். தொடராகும்.
தமிழ்நாடு ரஞ்சி கோப்பை அணிக்காக ஆடியுள்ள அவர், சராசரி 93 என மொத்தம் 373 ரன்களை விளாசியுள்ளார். சேப்பாக்கம் சொந்த மைதானம் என்பதால், அதில் களமிறங்கினால் ஆன்ட்ரே சித்தார்த் ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
கெவெனா மப்ஹகா 18 ஆண்டுகள் 231 நாள்கள், (ராஜஸ்தான் ராயல்ஸ்):
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மற்றொரு இளம்வீரராக தென்னாப்பிரிக்காவின் கெவெனா மப்ஹகா இணைந்துள்ளார். ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு பெறப்பட்ட மப்ஹகா வேகப் பந்து வீச்சாளராக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி மிரட்டுகிறார். 2024 யு 19 உலகக் கோப்பை, ஏற்கெனவே மும்பை இண்டியன்ஸ் அணியில் ஆடியுள்ளார். எஸ்.ஏ. 20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் மப்ஹகா.
அல்லா கஸான்ஃபர் 18 ஆண்டுகள், 240 நாள்கள், (மும்பை இண்டியன்ஸ்):
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வலது கை ஆஃப் பிரேக் பெளலரான அல்லா கஸான்ஃபரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, மும்பை அணிகள் போட்டி போட்டன. மும்பை அணி கடைசியில் ரூ.4.8 கோடிக்கு கஸான்ஃபரை வாங்கியது. முன்பு கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த அவர் ஒரு ஆட்டத்தில் கூட களமிறக்கப்படவில்லை. ஆப்கன் தேசிய அணியிலும் இடம் பெற்றுள்ள அவர், தனது சிறப்பான பந்துவீச்சால், இடது கை பேட்டர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்.
ஸ்வஸ்திக் சிக்ரா 19 ஆண்டுகள், 238 நாள்கள், (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு):
பத்தொன்பது வயதே ஆன ஸ்வஸ்திக் சிக்ரா பெங்களூரு அணியால் ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். 2024 சீசனில் டெல்லி அணியால் வாங்கப்பட்ட நிலையில் களமிறக்கப்படவில்லை. தொடக்க பேட்டரான ஸ்வஸ்திக் உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் 499 ரன்களைக் குவித்து அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் பணியையும் சிக்ரா செய்வது கூடுதல் பலமாகும்.
முஷீர் கான், 19 ஆண்டுகள், 271 நாள்கள், (பஞ்சாப் கிங்ஸ்):
நிகழாண்டு ஐ.பி.எல். தொடரின் மற்றொரு இளம் வீரர் முஷீர் கான். பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட முஷீர் கான், இந்திய வீரர் சர்ப்ராஸ் கானின் சகோதரர். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட்டத் திறனை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் முஷீர் கான். 2024 யு19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியனாக முக்கிய பங்கு வகித்தவர் . ஏற்கெனவே முதல்தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் உள்பட3 சதங்கள் விளாசியது அவரது சாதனையாகும்.
நூர் அகமது, 19 ஆண்டுகள், 326 நாள் (சென்னை சூப்பர் கிங்ஸ்):
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நூர் அகமது சிறந்த ஸ்பின் பெளலர் என்பதை மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலேயே நிரூபித்து விட்டார். மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பையின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்.
குஜராத் டைட்ன்ஸ் அணி ஏலத்தில் ரூ.5 கோடிக்கு அவரை வாங்க முயற்சித்தபோது, சி.எஸ்.கே. ரூ.10 கோடியாக ஏலத் தொகையை உயர்த்தியதால் குஜராத் பின்வாங்கியது. இதனால் சி.எஸ்.கே.யில் இணைந்தார் நூர் அகமது. இடது கை மணிக்கட்டு ஸ்பின் பெளலரான அவர் உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிய சிறப்புடையவர். நிகழாண்டு ஐ.பி.எல், தொடரில் அனைத்து இளம் நட்சத்திரங்களும் சிறப்பாக ஆடி அசத்துவர் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.