ஞாயிறு கொண்டாட்டம்

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

16-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டவையாக உள்ள 8,500 ஓலைச்சுவடிகள் மையத்தில் தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

DIN

உலகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள். அதனால்தான் சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளப்படுத்த உதவியவை ஓலைச்சுவடிகள். அத்தகைய ஓலைச்சுவடிகளைத் தயாரிக்க உதவிய பனைமரம்தான் தமிழ்நாட்டின் அரசு மரமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கலை, கலாசார, பண்பாட்டு பெருமைமிக்கவர்களாக, மட்டுமின்றி, உயிர் காக்கும் அரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களாக இருப்பதையும் பல ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட குறிப்புகளில் அறிய முடிகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய அரிய வகை ஓலைச்சுவடிக் கட்டுகள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டு இந்தியவியல் கலாசார, பண்பாட்டு ஆய்வு மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து மையத்தின் ஓலைச்சுவடிகள் பிரிவு தலைமை அதிகாரி தேவிபிரஷாத் மிஷேரா, மகேஷா திட்ட இயக்குநர் கே.திருக்குமரன் ஆகியோர் கூறியதாவது:

'இந்தியாவில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள் இந்திய கலாசார, பண்பாட்டை கண்டு வியந்துள்ளனர். அரசியலைத் தாண்டிய அவர்களது கலாசாரப் பார்வையானது 'இந்தியவியல்' எனும் ஆய்வு மையத்தைத் தொடங்கத் தூண்டியது. அதனால் ஜான்பிலியோகெட் என்பவர் தலைமையில் இந்தியவியல் மையம் 1956-இல் தொடங்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த மையத்துக்கு ஆண்டுதோறும் பிரான்ஸ் உள்துறை மூலம் நிதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஓலைச்சுவடி கண்காட்சிகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டவர்கள் தென்னிந்திய கோயில்களால் பெரிதும் கவரப்பட்டதால், அவற்றுக்கான தேவைகள், அதை செயல்படுத்திய விதத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போதுதான் சைவ ஆகமங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டு, அதன்படி, பூஜைகள், திருவிழாக்கள் என பண்பாட்டு நிகழ்வுகளை அறிந்தனர். அத்தகைய சைவ ஆகமங்கள் குறித்து மேலும் மேலும் அறியும் வகையில்தான் ஓலைச்சுவடிகள் தேடப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

16-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டவையாக உள்ள 8,500 ஓலைச்சுவடிகள் மையத்தில் தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ஓலைச்சுவடிகளில் 80 சதவீதம் சம்ஸ்கிருத மொழியில், கிரந்த எழுத்தில் உள்ளன. அவை அனைத்தும் சைவ ஆகம வாழ்வியல் முறை, கோயில் கட்டுமானம் உள்ளிட்ட செயல்பாடுகள், யோகம் குறித்த செய்திகள், தத்துவம் குறித்த தொகுப்புகள் என சைவம் சம்பந்தப்பட்டவைகளாகவே உள்ளன. அதில், 'சிதம்பர ரகசியம்' என நாம் கூறிவரும் ரகசிய கேள்விக்கான விடையளிக்கும் ஓலைச்சுவடிகளும் தேடி கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றை எளிமைப்படுத்தி மக்கள் அறியும் வகையில் நூலாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஆய்வு மையத்தில் தென்னிந்திய கோயில்களின் தலபுராண ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் நிலையில், அந்த கோயில்களின் 200 ஆண்டுக்கும் முற்பட்ட 1.50 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்களும் பாதுகாக்கப்படுகின்றன. அவை காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பழமையான ஓலைச்சுவடிகளில் 20 சதவீதம் தமிழ் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கியவையாக உள்ளன. அவை 15 -ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டவையாக உள்ளன.

தமிழ் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் சம்ஸ்கிருதம் கலந்தும் காணப்படுகின்றன. ஓலைச்சுவடிகளில் காணப்படும் அரியவகை மருத்துவக் குறிப்புகளை நூலாக்கும் பணியைத் தொடங்க முயற்சித்த நிலையில், அவற்றின் எழுத்துகளை வாசித்து தற்காலத்துக்கேற்ற பொருள் கொண்டு தகுந்த வார்த்தைகளில் எளிமைப்படுத்துவோர் இல்லாத நிலையுள்ளது. பாம்புக் கடிக்கான சிகிச்சையில் இருந்து, தற்போதைய சர்க்கரை நோய் பாதிப்புக்கான சிகிச்சை வரையில் அனைத்து வகை மருத்துவ ஆலோசனைகளும் அந்த ஓலைச்சுவடிகளில் பொதிந்துள்ளன. ஆனால், போதிய நிதி, சித்த மருத்துவர் உதவி இல்லாத காரணத்தால் சித்த மருத்துவம் சார்ந்த 400 தமிழ் ஓலைச்சுவடிகள் தற்காலத்து இளைஞர்கள் அறியமுடியாத நிலையில் உள்ளன.

அகத்தியர், கும்ப முனிவர், கோரக்க சித்தர், சதரத்ன மணிமாலை உள்ளிட்ட அரியவகை சித்த மருத்துவக் குறிப்புகள் ஓலைச்சுவடிகளாகவே உள்ளன. அவற்றை முறையாக சித்த மருத்துவம் படித்தவர்களால் மட்டுமே தற்கால தமிழில் மாற்றி எழுத முடியும் என்பதால், அந்தத் திறன் வாய்ந்தவர்களைத் தேடிவருகிறோம்.

ஓலைச்சுவடிகளில் பெரும்பாலானவை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பெறப்பட்டவையாக உள்ளன. அவற்றை மஞ்சள், எலுமிச்சை, புல், எண்ணெய் ஆகியவற்றுடன் பாதுகாப்பதுடன், குளிர்சாதன வசதியை ஏற்படுத்தியும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்கள் உயிர்காக்க வல்ல சித்த மருத்துவ ரகசிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நிலையில், அவற்றை தற்கால ஆய்வுக்கு உட்படுத்தினால், ஆங்கில மருத்துவத்தை மிஞ்சும் வகையில் நமது சித்தப் பாரம்பரிய மருத்துவம் திகழும்.

தற்போது இந்தியவியல் ஆய்வு பிரிவின் பராமரிப்புக்கான நிதி பிரான்ஸ் நாட்டிலிருந்து மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவுக்கு போதிய நிதியை, மத்திய அரசும், புதுவை அரசும் ஒதுக்கவேண்டியது அவசியம். சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகளும், தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளும் அதிக அளவில் எளிமைப்படுத்தப்பட்டு, அவை புத்தகங்களாகப்பட்டு, எதிர்காலத்தில் அவை கணினி மயமாக்கப்படலாம்' என்றனர்.

-வ.ஜெயபாண்டி.

படங்கள்- கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

கல்லூரியில் கருத்தரங்கம்

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

SCROLL FOR NEXT