நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளது. சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான். இந்த பத்மாவதி - வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மனைவி. இப்போது திருமணத்துக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை,
பத்மாவதி - வேணுகோபாலின் மகன் வயிற்றுப் பேரன் கோகுல். இவருக்கும், ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழ், கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் பிரபல நடிகர் சாய் குமாரின் உடன் பிறந்த சகோதரரான ஐயப்பா பி. சர்மாவின் மகள் கமலா ஹாசினிக்கும்தான் திருமணம் நடந்துள்ளது.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் 'கேப்டன் பிரபாகரன்'. விஜயகாந்தின் 100-ஆவது படமான இது கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸாகி இருக்கிறது. படம் வெளியீடு குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது, ''விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினரும் இப்
படத்தைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். படத்தை ஒரு திருவிழா மாதிரி கலகலப்பாகக் கொண்டாடினார்கள். இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த வெற்றி. 'கேப்டன் பிரபாகரன் - பாகம் 2' எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இப்போது சண்முகப் பாண்டியனை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் படம் உருவாகும் என்ற அறிவிப்பை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் வருகை தந்திருக்கிறார்கள். இவ்விழாவில் ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கெளரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு எனப் பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் தயாரிப்பாக யோகிபாபு நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்கவுள்ளார்.
எஸ்.வி. புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் - வேலன் தயாரிப்பில் உருவாகும் படம் 'அழகர் யானை'. 'மரகதக்காடு' படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் 'காடுவெட்டி' விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் நடிக்கின்றனர். இவர்கள் தவிர யானை ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
மங்களேஷ்வரன் கூறும்போது, ''இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையைத் தரும் படமாக இந்த 'அழகர் யானை' உருவாகிறது. எல்லோருக்குமான மழையையும் காற்றையும் போல எல்லோருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் விதைப்பதே இந்த அழகர் யானை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.