எழுமகளூரில் கண்டறியப்பட்ட புத்தர் சிலையுடன் பா. ஜம்புலிங்கம்  
ஞாயிறு கொண்டாட்டம்

புத்தர் சிலையைத் தேடி...

ஓய்வின்றி புத்தர் சிலையைத் தேடி கள ஆய்வு மேற்கொள்வதை அவர் தனது வாழ்நாள் கடமையாக மேற்கொண்டு வருகிறார். இக்கள ஆய்வில் கிடைத்த அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்தது...

தினமணி செய்திச் சேவை

"தமிழகத்தில் சங்க காலத்தில் புகழ்பெற்றிருந்த பெளத்த மதம் பிற்காலத்தில் வீழ்ச்சியடைந்தாலும், அதனுடைய சுவடுகள் ஆங்காங்கே இன்னும் இருக்கின்றன. பெரும்பாலும் வயல்வெளி, திறந்தவெளியில் பராமரிப்பின்றிக் கிடக்கும் சிலைகளை வெகுசில ஆய்வாளர்கள் கண்டறிந்து, பதிவு செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை 65 புத்தர் சிலைகளைக் கண்டறிந்து, பதிவு செய்து, சோழ நாட்டில் பெளத்தம் என்ற நூலை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளேன்'' என்கிறார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், பெளத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம்.

ஓய்வின்றி புத்தர் சிலையைத் தேடி கள ஆய்வு மேற்கொள்வதை அவர் தனது வாழ்நாள் கடமையாக மேற்கொண்டு வருகிறார். இக்கள ஆய்வில் கிடைத்த அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்தது...

"தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982- ஆம் ஆண்டில் அலுவல் நிலைப் பணியாளராகப் பணியாற்றியபோது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் 1993 -ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பில் (எம்.பில்.) சேர்ந்தேன். அப்போது, ஆய்வேடு தயார் செய்வதற்கு "தஞ்சாவூர் மாவட்டத்தில் பெளத்தம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்து சமர்ப்பித்தேன். இதன் மூலம் புத்தர் சிலைகளைத் தேடிக் கண்டறியும் ஆர்வம் மேலோங்கியது.

இதன் பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு 'சோழ நாட்டில் பெளத்தம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். இதற்கு வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் "பெளத்தமும் தமிழும்' என்ற நூலையும், அவருக்குப் பின்னர் பெளத்தம் தொடர்பாக பிற அறிஞர்கள் எழுதிய நூல்களையும் வாசித்தேன். இதன் அடிப்படையில் 1993 - 1999-ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 40 புத்தர் சிலைகளைக் கண்டறிந்தேன்.

மங்கலம் கிராமத்தில்...

முனைவர் பட்டம் பெற்ற பின்னரும் புத்தர் சிலைகளைத் தேடும் பணியைக் கைவிடவில்லை. நண்பர்கள், உறவினர்கள், வரலாற்றறிஞர்கள் உள்ளிட்டோரிடம் பேசும்போது, தங்களது பகுதியில் புத்தர் சிலை இருக்கிறதா எனக் கேட்டறிவேன். அவர்கள் சொல்லும் இடத்துக்கு விடுமுறை நாளில் செல்வேன். போகும்போது பல்வேறு சவால்களையும், புதுப்புது அனுபவங்களையும் பெற்றேன்.

பெரும்பாலும் பேருந்தில் சென்று, பின்னர் தொடர்புடைய கிராமத்துக்கு சைக்கிளில் செல்வேன். பெரும்பாலான புத்தர் சிலைகள் வயல்வெளியில்தான் கிடந்தன. அப்போது, வயல்வெளியில் சில நூறு மீட்டர் முதல் 5 கி.மீ. வரை நடந்தே சென்றுள்ளேன். திருவாரூர் அருகேயுள்ள திருநெல்லிக்காவலில் புத்தர் சிலையைத் தேடிச் சென்றபோது ஏறக்குறைய 25 கி.மீ. நடந்து சென்றேன். அங்குள்ள புத்தரை திருமணமாகாத பெண்கள் திருமணமாவதற்காக வழிபடுகின்றனர்.

திருப்பாம்பரத்தில்...

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகேயுள்ள புத்தமங்கலத்தில் நான் கண்டறிந்த புத்தரை மழையை வரவழைக்கும் சாமி என மக்கள் வழிபடுகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள மங்கலம் கிராமத்திலுள்ள புத்தர் சிலைக்கு மீசை உள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வளையமாபுரத்தில் தலையில்லாமல் இருந்த புத்தர் சிலையை 2007-ஆம் ஆண்டில் பார்த்து பதிவு செய்தேன்.

புத்தூரில்

பெரும்பாலான இடங்களில் புத்தர் சிலைகள் தலை இல்லாமலும், முகம் சிதைக்கப்பட்டும் பராமரிப்பில்லாமல் வயல்வெளியிலும், திறந்தவெளியிலும் கிடக்கின்றன. சில பகுதிகளில் ஊர் நடுவில் நல்ல பராமரிப்புடன் மக்கள் வழிபாட்டிலும் புத்தர் சிலைகள் உள்ளன. சில இடங்களில் புத்தராகவே வணங்குகின்றனர். சில ஊர்களில் அமணர், அம்மண சாமி, செட்டியார் சாமி, ராஜகுமாரன், சிவனார், கடன் கொடுக்கும், வழங்கும் சாமி, சாம்பான், ரிஷி போன்ற பெயர்களில் வழிபடுகின்றனர். திருநீறு பூசி, சந்தனம் - குங்குமம் இடுகின்றனர். செவ்வாய், வெள்ளி, வைகாசி புத்த பூர்ணிமா, தைப்பொங்கல் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். ஆனால், அடையாளம் தெரியாமல் சமணர் உள்ளிட்ட பிற சிலைகளையும் புத்தர் எனக் கூறி வழிபடுகின்றனர்.

புத்தர் சிலையைப் பொருத்தவரை பெரும்பாலான சிலைகள் அமர்ந்த நிலையில் தியானக் கோலத்தில் உள்ளன. இச்சிலைகள் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகிய சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் திரிவாலி எனப்படுகிற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின் மீது, வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடனோ, இவற்றில் பெரும்பான்மையான கூறுகளுடனோ உள்ளன. இதன் சில கூறுகள் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலைகளில் காணப்படுகின்றன. சோழ நாட்டில் அமர்ந்த நிலையிலான புத்தர் சிலைகளே அதிகம் காணப்படுகின்றன.

இதுவரை மொத்தத்தில் 65 புத்தர் சிலைகளைக் கண்டறிந்து, பதிவு செய்துள்ளேன். இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறேன். தற்போதும் யாராவது புத்தர் சிலை இருப்பதாகக் கூறினால், உடனடியாக அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வேன்'' என்கிறார் ஜம்புலிங்கம்.

-வி.என். ராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த டேரில் மிட்செல்!

குறள் படித்தால் குவலயம் ஆளலாம்!

“திமுக கூட்டணி சரியாக இல்லை!” தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

பிக் பாஸுக்கு பிறகு முதல்முறையாக... தாயுடன் விஜே பார்வதி!

SCROLL FOR NEXT