ஞாயிறு கொண்டாட்டம்

திருநங்கைகள் வாழ்க்கையில் திருப்புமுனை

மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

கே.வாசுதேவன்

மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மனித நாகரிக வளர்ச்சி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் திருநங்கைகளுக்கு அதே நிலையே தொடர்கிறது. இதனால் பலர் தவறான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழும் நிலையிலேயே இன்றும் இருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக் குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், ஆதரவற்றோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. வருமானம் ஈட்ட இயலாத திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1,500 என உயர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதன் மூலம் 1,760 பேர் பயன்பெறுகின்றனர்.

2021-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்காக 'திருநங்கை' என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டது. இதன்வாயிலாக, 10,153 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக ஊர்க்காவல் படையில், சென்னையில் 5 பேர், தாம்பரத்தில் 15 பேர், ஆவடியில் 10 பேர், மதுரையில் 7 பேர்,கோயம்புத்தூரில் 7 பேர், திருச்சியில் 6 பேர் என மொத்தம் 50 திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துவது, இரவு ரோந்து போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு காவல்துறையின் மூலம் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை திருநங்கைகளிடம் புதிய நம்பிக்கையும், அளப்பரிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிலரிடம் பேசியபோது:

திருநங்கைகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி டி.டி. சிவக்குமார்:

அரசு வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதன் விளைவாக தமிழ்நாடுஅரசு, முன்னோட்டமாக ஊர்க்காவல் படையில் திருநங்கைகளைச் சேர்த்துள்ளது.

திருநங்கைகள் வாழ்க்கையில் இது நல்ல முன்னேற்றமாகவும், திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களும் இனி தைரியமாக திருநங்கைகளுக்கு வேலையை அளிக்க முன்வருவார்கள்.

இதனால் திருநங்கைகளின் வாழ்க்கையில் சமூக, பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில திருநங்கைகள் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும், அங்கு அவர்களுக்கு மரியாதையும், உரிமையும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆனால், ஊர்க்காவல் படை வேலை திருநங்கைகளுக்கு அத்தகைய அனுபவத்தை வழங்காது என நம்புகிறோம்.

நாட்டிலேயே முதல் முறையாகத் திருநங்கைகளுக்காக அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு திருநங்கைகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

கோயம்புத்தூர் செல்வபுரம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் ஸ்ரீ குட்டி:

கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்த எனக்கு, வாடகைக்குக் கூட வீடு கிடைக்கவில்லை. திருநங்கை சமூகத்தில் நான் இணைந்த பின்னர் எனது பெற்றோர் என்னுடன் பேசுவதை 8 ஆண்டுகளாக நிறுத்திவிட்டனர். சமூகத்தில் ஒரு சாதாரண உயிரினத்துக்கும் கிடைக்கும் மரியாதைகூட, எனக்குக் கிடையாது.

இவை அனைத்தும் நான் ஊர்க்காவல் படையில் சேர்ந்தவுடன் தலைகீழாக மாறியுள்ளது. எட்டு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த எனது பெற்றோர், இப்போது என்னிடம் பேசுகின்றனர். சீருடையில் இருக்கும் என்னைச் சந்திக்கும் பொதுமக்கள், மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துகின்றனர். வாடகைக்கு வீடு தருவதாக உரிமையாளர்கள் தேடி வந்து பேசுகின்றனர்.

சில நேரங்களில் இப்போது நிகழ்பவை கனவில் நடப்பது போன்று இருக்கிறது. சமூகத்தில் எனக்குக் கிடைக்கும் மரியாதையையும், கௌரவத்தையும் பார்த்து மேலும் பல திருநங்கைகள் தாங்களும் ஊர்க்காவல் படையில் சேர முடிவு செய்திருப்பதாகக் கூறுகின்றனர். திருநங்கைகள் வாழ்க்கையில் ஊர்க்காவல் படை மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் ப்ரணிகா ஸ்ரீ:

திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றோ, வேலை இல்லை என்றோ, கல்வி இல்லை என்றோ இனி கூற முடியாது. தயவு செய்து இந்த வாய்ப்பை அனைத்து திருநங்கைகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊர்க்காவல் படையில் இருக்கும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் இது வரையில் கிடைக்காத மரியாதையும், மதிப்பும் கிடைத்துள்ளது.

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் பிரேமா:

பட்டதாரியான எனக்கு தமிழ் உள்பட ஆறு மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும். சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற லட்சியம் என்னிடம் இருந்தது. ஆனால், திருநங்கையான பின்னர், அந்த லட்சியத்தை எட்ட முடியாது என்பது தெரிந்தபோது மிகுந்த வேதனை ஏற்பட்டது.

கோயம்புத்தூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்த என்னை திருநங்கை என்பதால், வேலையை விட்டு நீக்கினர். தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்துள்ள எனக்கு பலரும் கையை குலுக்கி வாழ்த்துக் கூறும்போது ஏற்படும் ஆனந்தத்துக்கு அளவே கிடையாது.

காக்கிச் சீருடையை நான் அணியும்போது என்னுடைய லட்சியத்தை அடைந்துவிட்டதாக நினைக்கிறேன்.

ஊர்க்காவல் படையில் திருநங்கைகளைச் சேர்த்து எங்களது வாழ்க்கையில் தீபத்தை ஏற்றியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு அரசை நாட்டுக்கே கலங்ரை விளக்கமாக ஒளிரச் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்ரியாட் - நயன்தாரா போஸ்டர்!

பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூடல்

”தூங்குபவர்கள் காதில் விசிலடிக்காதீர்கள்!” தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன்!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! மூத்த வீரருக்கு இடமில்லை!

சிறை - உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள்? தமிழ் பதில்!

SCROLL FOR NEXT