தமிழ்மணி

பாரதியின் பதிப்புச் சிந்தனைகள்!

சுதேசமித்திரன்' பத்திரிகை, பாரதியை தேசியக் கவிஞராக அறிமுகப்படுத்திய வேளையில், 1906-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நமது பாரத நாடு முழுவதையும் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களைச் சான்றோர்களிடம் கேட்டுப்ப

சீனி. விஸ்வநாதன்

சுதேசமித்திரன்' பத்திரிகை, பாரதியை தேசியக் கவிஞராக அறிமுகப்படுத்திய வேளையில், 1906-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நமது பாரத நாடு முழுவதையும் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களைச் சான்றோர்களிடம் கேட்டுப்பெற்றுப் பதிப்பிக்க பாரதி ஆசைப்பட்டார்.

 ÷ஆசையின் விளைவாக, 13.2.1906-ஆம் தேதியிட்ட "சுதேசமித்திரன்' பத்திரிகையில், ""தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாகத் "தேசபக்திப் பாக்கள்' புனைந்தனுப்புவாராயின், அவையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்'' என்ற அறிக்கையை பாரதி வெளியிட்டார்.

 ÷ 1908-ஆம் ஆண்டில் தாமே அவ்வப்போது புனைந்த தேசிய சிந்தனைகளோடு கூடிய கீதங்களில் "ஸ்வதேச கீதங்கள்' என்று மகுடமிட்டுப் பதிப்பித்து வெளியிட்டார்.

 ÷தற்காலப் "பாரதியார் கவிதைகள்' தொகுதிகள் பெரும்பாலானவற்றுள் "சத்திரபதி சிவாஜி' என்கிற தலைப்பில் காணப்படும் தொடர் செய்யுளுக்குப் பாரதி தந்த தலைப்பு "சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது' என்பதாகும். முற்றுப்பெறாமல் அரைகுறை வடிவில் "இந்தியா' பத்திரிகையில் வெளியிடப்பட்ட அப்பாடலை, நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க முற்றுப் பெறச்செய்து நூலாகப் பதிப்பிக்கப் பாரதி திட்டமிட்டார். திட்டமிட்டபோதில், நூல் எந்த மாதிரியாக அச்சிடப்பட உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, 8.12.1906-ஆம் தேதிய "இந்தியா' பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

 ÷"".... இதிலே வரும் பதவுரை, முகவுரை, சிவாஜி மகாராஜாவின் சரித்திரம், சிவாஜியின் சித்திரம் - என்ற பல புதுமைகள் சேர்த்து மிகவும் உயர்ந்த கிளேஸ் (பளபளப்பு) காகிதத்திலே, அமெரிக்கா தேசத்துக் கவி புஸ்தகங்களின் மாதிரியாக அச்சிடப்பெற்று வருகின்றது'' - இந்த விளம்பரம் பாரதியின் பதிப்புச் சிந்தனைக்குக் கட்டியம் கூறுகிறது.

 ÷பாரதியின் பதிப்புச் சிந்தனை வளத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக "இந்தியா' 22.12.1906-ஆம் தேதிய பத்திரிகையில், "சிவஞான பாஷ்யம்', "வருண சிந்தாமணி' ஆகிய நூல்களுக்கு எழுதிய மதிப்புரைப் பகுதியைக் குறிப்பிடலாம்.

 ÷""தமிழ்ப் புஸ்தகங்கள் இப்போது சிறிது காலமாக மிகவும் ஜாஸ்தியாகப் பிரசுரமுறத் தொடங்கிவிட்டன. படித்தற்குத் தகுதியுடைய சிலவும், இல்லாதன பலவுமாக நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் "பூப்பிளக்க வெளியில் வரும் புற்றீசல்போலப் புலபுலெனக் கலகலென' வெளியேறுகின்றன. இப்படிப்பட்ட காலத்தில் படித்தற்கினிய, நல்ல, பயனுடைய புஸ்தகங்கள் அச்சிட்டு வருவதைக் காணும்போது, மனதுக்கு மிகுந்த ஆறுதலேற்படுகின்றது''.

 ÷"படிப்பதற்கு இனிமை தரும் முறையில் அமைந்திருக்க வேண்டும்; இனிய நூல்களும் நல்ல நூல்களாக இருத்தல் வேண்டும்; இனிய நூல்களும் நல்ல நூல்களும் பயன்தரும் வகையினவாக இருத்தல் வேண்டும்; படிப்பதற்கு ஏற்ற பயனுள்ள நல்ல நூல்களும் தெளிவான - தரமான அச்சு அமைப்புகளுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதும்தான் பாரதியின் பதிப்புச் சிந்தனையின் எதிர்பார்ப்பு.

 ÷15.11.1919-இல் கானாடுகாத்தான் வெ.சு. ஷண்முகம் செட்டியாருக்குப் பாரதி எழுதிய கடிதத்தில், தம்முடைய நூல்கள் எந்த மாதிரியாக அச்சிடப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 ""தடித்த காயிதம், நேர்த்தியான அச்சு, பெரிய எழுத்து, இடவிஸ்தாரம் - இவை கீதைக்கு மட்டுமேயன்றி, நாம் அச்சிடப்போகும் புஸ்தகங்கள் எல்லாவற்றுக்கும் அவசியம். ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும் கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப்படுகின்றனவோ, அப்படியே நம் நூல்களையும் இங்கு அச்சிட முயலவேண்டும்'' பாரதியின் பதிப்புச் சிந்தனையின் உள்ளாழ்ந்த பொருளை உணர இக்கடிதமே போதுமான அத்தாட்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT