மகாகவி பாரதியார், சோறு தின்பதற்காகவே வாழும் மனிதர்களை "வேடிக்கை மனிதர்கள்' என்று விதத்தும்; நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமின்றி வஞ்சனை புரியும் மனிதர்களை "வாய்ச்சொல் வீரர்' என்று வசைபாடியும்; அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட மனிதர்களை "ஊமைச் சனங்கள்' என்றும்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்து வேவு பார்க்கும் விநோத மனிதர்களை "விந்தை மனிதர்கள்' என்று நிந்தனை செய்தும்; செத்த பிறகு சிவலோகம்-வைகுண்டம் சேர்ந்திடலாம் என்று நினைக்கிற மனிதர்களை, "பித்த மனிதர்' எனப் பிரித்தும் - இவ்வாறு மனிதர்களைப் பிரித்து வகைப்படுத்தும் பாரதியார்போல் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர், மனிதர் சிலரைப் ""பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள்'' என்று சாடுகிறார். அதாவது, "செத்துச் செத்துப் பிறப்பதுதான் இந்த மனிதர்களுடைய தொழில்' என மனம் வருந்திக் கூறியுள்ளார்.
திருவள்ளுவர், இந்த உலகத்தில் வாழும் மனிதர்களைப் பார்த்து, ""இவர்களில் நிஜ மனிதர்கள் யார்? நிழல் மனிதர்கள் யார்? என்று பார்த்தவுடன் பகுத்தறிந்து கொள்ள முடியவில்லையே!'' என்று வருந்திக் கூறியுள்ளார்.
÷காட்டில் வாழும் விலங்குகளை நாம் கண்ட மாத்திரத்தில் "இது புலி, இது பூனை' என்று சொல்லிவிடுகிறோம். ஆனால், நாட்டில் வாழும் மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில், "இவன் போக்கிரி, இவன் புனிதன்' என்று கூற முடியவில்லையே!
÷உருவத்தாலும் உறுப்பாலும் ஒன்றுபோலவே காட்சி அளிக்கும் மனிதர்களில் "நிஜ மனிதன் யார்? நிழல் மனிதன் யார்?' என வள்ளுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
""மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம் கண்ட தில்'' (குறள்-1071)
÷"மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை' என்கிறார்.
÷அந்தவகையில், கல்வி அறிவில்லாத மனிதர்களை "மரமனிதர்கள்' என்றும், கூலிக்குக் கொடிபிடிக்கும் குண்டர் கூட்டத்தை "வாடகை மனிதர்கள்' என்றும் நாம் பிரித்து வகைப்படுத்தலாம் அல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.