தமிழ்மணி

இந்த வாகம் கலாரசிகன்

சென்றவாரம் வெளிவந்த "இந்தவாரம்' பகுதியில் இரண்டு திருத்தங்கள். அது தவறோ, திருத்தமோ அச்சாகிவிட்ட அனைத்துக்குமே நான்தான் பொறுப்பு. சரியாக எழுதிக் கொடுத்தாலும் தப்பாக அச்சாகி இருந்ததைப் படித்துப் பார்த்த

தினமணி

சென்றவாரம் வெளிவந்த "இந்தவாரம்' பகுதியில் இரண்டு திருத்தங்கள். அது தவறோ, திருத்தமோ அச்சாகிவிட்ட அனைத்துக்குமே நான்தான் பொறுப்பு. சரியாக எழுதிக் கொடுத்தாலும் தப்பாக அச்சாகி இருந்ததைப் படித்துப் பார்த்தபோது, பிழையைத் திருத்தாதது உங்கள் குற்றமே தவிர எங்கள் குற்றமல்ல என்று உதவி ஆசிரியர்கள் அடம்பிடித்தால் தலையசைத்து ஏற்பது தவிர அடியேனுக்கு வேறு புகல் ஏது?

முனைவர் அகரமுதல்வன் இருப்பது திருவெண்காட்டில். அச்சாகி இருந்தது "திருவாலங்காடு' என்று. தவறுக்கு வருந்துகிறேன். இரண்டாவது தவறு, முற்றிலும் என்னுடைய தவறு. தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, பத்திரிகையாளர் சுதாங்கனின் தாய்வழிப் பாட்டனார் என்று எழுதியிருந்தது தவறு. அவர் பி.ஸ்ரீ.யின் மகனுடைய பெயரன். கூடுதலாக இன்னொரு தகவல். சுதாங்கனின் பாட்டனார் வி.எஸ்.நாராயணன், அதாவது பி.ஸ்ரீ.யின் மகன், பெரியவர் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த காலத்தில் சுமார் 30 ஆண்டுகள் "தினமணி'யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

*******

மலையாளத்தில் ஓர் அற்புதமான வார்த்தைப் பிரயோகம் உண்டு. இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏதாவது குழந்தைத்தனமான கருத்துவேறுபாடு ஏற்பட்டால், அதை "செüந்தர்யப் பிணக்கம்' என்று கூறுவார்கள்.

"செüந்தர்யம்' என்றால், அழகு அல்லது வனப்பு என்று பொருள். "பிணக்கம்' என்றால், சண்டை அல்லது கருத்துவேறுபாடு. "அழகான சண்டை' என்று மொழிபெயர்க்கலாமே ஒழிய, செüந்தர்யப் பிணக்கம் என்கிற மலையாள வார்த்தைப் பிரயோகத்துக்கு அதுவே முழுமையான விளக்கமாகிவிடாது.

எனக்கும் நெல்லைக்கண்ணனுக்கும் அப்படி அடிக்கடி செüந்தர்யப் பிணக்கம் வருவது வழக்கம். ஏன், எதற்கு என்பதெல்லாம் எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதுகிடக்கட்டும்.

நெல்லைக்குப் போனால் நெல்லைக்கண்ணனைப் பார்த்து ஒருசில நிமிஷங்களாவது பேசாமல் வருவது என்பதைப் போன்ற வேதனை எதுவுமே கிடையாது. ஏனென்றால், அவரிடம் பத்து நிமிஷங்கள் பேசிவிட்டு வந்தால், மன்னிக்கவும் அவர் பேசிக் கேட்டுவிட்டு வந்தால், குறைந்தது பத்துப் புதிய தகவல்களை நாம் தெரிந்துகொண்டிருப்போம்.

நெல்லைக்கண்ணனின் இலக்கியப் பார்வை மிகவும் வித்தியாசமானது. சங்க இலக்கியமாக இருந்தாலும், சமய இலக்கியமாக இருந்தாலும், கம்பன், இளங்கோ போன்றோர் படைத்த காப்பியங்களாக இருந்தாலும், பாரதி முதல் இன்றைய பழநிபாரதி வரையிலான கவிஞர்களின் படைப்புகளாக இருந்தாலும் நெல்லைக்கண்ணனுக்கு அவையெல்லாம் விரல்நுனி விஷயங்கள்.

கடந்த வாரம் நெல்லை சென்றபோது நெல்லைக்கண்ணனின் வீட்டில் காலதாமதமாகச் சாப்பிடச்சென்ற எனது குற்றத்தை மன்னித்து, முகமலர்ந்த உபசரிப்புடன் அவர் எனக்களித்த விருந்தோம்பலை உயிருள்ளளவும் மறக்கமுடியாது. அவர்கள் வீட்டில் எனக்காக சமைத்திருந்த "சொதி'யின் சுவை இன்னமும் நாவிலிருந்து அகன்றபாடில்லை.

கம்பனைப் பற்றிய பேச்சு வந்தது. ராமனை வனவாசம் போகச்சொன்ன செய்தி கேட்டு கோபம் கொந்தளிக்க இலக்குவன் அம்பில் நாணேற்றி வருவதாக ஒரு காட்சி. அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக ராமன் கூறுவதுபோல அமைந்த அற்புதமான பாடல், ""நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை'' என்று தொடங்கும் அயோத்தியா காண்டம்-நகர்நீங்கு படலம் 129-வது பாடல் (1733). அந்தப் பாடலுக்கு எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும் சரி, பல உரையாசிரியர்களும் சரி, ""வெள்ளப்பெருக்கு இல்லாமல் இருப்பது நதியின் பிழையல்ல'' என்பதுதான்.

நெல்லைக்கண்ணன் ஒரு வித்தியாசமான விளக்கம் தந்தார். ""வெள்ளம் இல்லாதது நதியின் குற்றமல்ல'' என்பதல்ல கம்பனின் கருத்து. "நறும்புனல் இன்மை' என்று குறிப்பிடுவதால், "வெள்ளம் இருக்கிறது ஆனால் அது நறும்புனலாக இல்லை' என்பதுதான் சரியான கருத்தாக இருக்கமுடியும்.சாக்கடை கலந்துவிட்டதால் நதியின் வெள்ளம் நறும்புனலாக இல்லாமல் இருப்பது நதியின் குற்றமா? என்று ராமன் கேட்பதாக இந்த வரிகளுக்குப் பொருள்கொள்வதுதானே நியாயம் என்பது நெல்லைக்கண்ணனின் நியாயமான கேள்வி.

இதனால்தான் நெல்லைக்குப் போகும்போது நெல்லையப்பரை வணங்காவிட்டாலும் கூட நெல்லைக்கண்ணனை சந்திக்க நான் தவறுவதில்லை!

*******

சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும், மராட்டிய, நாயக்கர் மன்னர்களையும் அடிப்படையாக வைத்துத் தமிழில் பல சரித்திர நாவல்கள் புனையப்பட்டிருக்கின்றன. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலப் பின்னணியிலும், பிரஞ்சு ஆட்சியின் பின்னணியிலும் புனையப்பட்ட கதைகளும், நாவல்களும் மிகமிகக் குறைவுதான்.

புதுச்சேரியைத் தலைநகராகக்கொண்டு பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியையும், அதற்குப் பின்னால் பிரெஞ்சு "குவெர்னர்'களும் நடத்திய ஆட்சியையும் பின்புலமாக வைத்துப் புனையப்பட்ட ஒருசில நாவல்கள் வெளிவந்திருப்பது உண்மை. சமீபத்தில் அப்படிப்பட்ட பிரெஞ்சு இந்திய வரலாற்று நாவல் ஒன்றை நான் வாசிக்க நேரிட்டது.

"ட்யூப்ளேயின் காதல்' என்கிற இஸட் ஒய்.ஹிம்ஸôகர் எழுதிய அந்த நாவல் விறுவிறுப்பான நாவலென்றோ, பரபரப்பான பல புதிய தகவல்களுடன் கூடிய நாவல் என்றோ சொல்லிவிட முடியாது. முழுக்க முழுக்க கற்பனை கலந்த ஒரு கதையை, இன்றைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறை கிழவர் ஒருவர் சொல்வதுபோல அமைந்த நாவல் அது.

ராஜமான்ய மாகாராஜ ராஜஸ்ரீ செவாலியே ழோசப் ஃப்ரான்சுவா துய்ப்ளே... இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத ஒரு பெயர் அது. புதுச்சேரியின் பிரெஞ்சு "குவெர்னர்' துய்ப்ளே மட்டும் வெற்றி பெற்றிருந்தால், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கவர்னரான ராபர்ட் கிளைவை இவர் தோற்கடித்திருந்தால், இந்திய சரித்திரமே திருத்தி எழுதப்பட்டிருக்கும்.

1698-இல் பிறந்து 1763-இல் இறந்த துய்ப்ளே, அத்தனை அதிகாரமும் பறிக்கப்பட்டு, ஏறத்தாழ ஒரு கைதியாகவே 1754 ஆகஸ்டு 15-ஆம் தேதி பிரான்ஸ் திரும்பினார். அவரது அந்திமகாலம் மிகவும் கொடுமையானது. பிரெஞ்சு குவெர்னராகப் புதுச்சேரியில் கோலோச்சிய துய்ப்ளே வறுமையில் உழன்று, தனது 66-வது வயதில் 1763 நவம்பர் 10-ஆம் தேதி கடுமையான துயரத்தில் பிரான்ஸ் நாட்டில் இயற்கை எய்தினார் என்கிறது வரலாறு.

ராபர்ட் கிளைவ் போலவே நம் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு சரித்திர நாயகர் ழோசப் ஃப்ரான்சுவா துய்ப்ளே!

*******

நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை "பிரமிள்' என்பது பல விமர்சகர்களின் கருத்து. புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் தனக்கென ஒரு தனி பாணியை நிலைநிறுத்தியவர் படிமக் கவிஞர் என்றும், ஆன்மிகக் கவிஞர் என்றும் போற்றப்படும் தருமுசிவராம் என்கிற பிரமிள். இலங்கை திருகோணமலையில் பிறந்தவர் என்றாலும், தனது 30-வது வயதிலேயே இந்தியா வந்துவிட்டவர். தனது 20-வது வயதிலேயே சென்னையிலிருந்து வெளிவந்த "எழுத்து' பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுதத் தொடங்கிவிட்ட பிரமிள், வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் 6.7.1997 அன்று மறைந்தார்.

"வழி' என்ற தலைப்பில் 1976}ல் பிரமிள் எழுதிய கவிதை ஒன்று எனக்குத் திடீரென்று நினைவுக்கு வந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல் மழை வராதா என்று ஏங்கிய எனது மனதில் பிரமிளின் "வழி' என்ற கவிதை மழை சொரிந்தது.

வயிற்று பசி தீர்க்க

வராதா என்றேங்கி

மழைக்கு அண்ணாந்த

கண்கள்

கண்டுகொண்டன

வானம் எல்லை இல்லாதது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT