'வா' என்பதோர் எழுத்து; நெடில்; உயிர்மெய். "வா' என்பதோர் சொல்; ஓரெழுத்து ஒரு மொழி(சொல்). "வா' என்பதோர் சொற்றொடர் (நீ) வா. தோன்றா எழுவாய்! இவ்வாறு ஓர் எழுத்தே சொல்லாகவும், சொற்றொடராகவும், விளங்கும் பெருமையது தமிழ். இவ்வோரெழுத்து மட்டுமில்லை. நெட்டெழுத்துகள் எல்லாமும் பொருள் குறிக்கும் சொல்லாக வரும் என்பார் தொல்காப்பியர். ""நெட்டெழுத் தேழே ஓரெழுத்து ஒருமொழி'' என்பது அது. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒü இவை உயிர் நெடில். இவற்றின் உயிர்மெய் நெடில், கா, கீ, கூ, கே, கை, கோ, கெü முதலாக விரியும் அல்லவா!
சில நெட்டெழுத்துகளுக்குப் பொருள் வழக்கு இல்லாமை கண்ட நன்னூலார், 40 நெட்டெழுத்துகளைக் கூறி "இவை பொருள் பெறும்' என்றார். நெட்டெழுத்துகளில் இரண்டு எழுத்துகள் குறுகி நின்று குறிலாகியும் பொருள் தரும் என்றார். அவை நோ - நொ; தூ - து. நோ - துன்பம், தூ - உண். இவை நொ, து என வந்து பொருள் தரும் என்றார்.
வர வரத் தமிழ் மரபு வழியும், மரபு நிலை மாறியும் மொழி முதலாகாது என விலக்கப்பட்ட சொற்களும் மொழி முதலாகவும், ஓரெழுத்து ஒரு மொழியாகவும் கொள்ளப்பட்டன.
"வா' என்பது எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைகளைப் பெறுதலைக் கண்டோம். இனி, "வா' என்பது இயல் (தமிழ்); நீட்டி அழைத்தால் - இசைத்தால் - இசைத்தமிழ்! "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!' - இசை. ஒப்பனை செய்து கொண்டோ, செய்யாமலோ, இத்தொடரை நட்டுவம் பிடித்தால் "நாடகம்' எனப்படும் கூத்து ஆகிவிடும். இவ் வெல்லாமும் இயற்கை இயங்கியல் மொழிக்கு உரியவை. தமிழ் இயற்கை இயங்கியல் மொழி.
கிளி பேசுகிறது; பிள்ளையாகக்கொண்டு போற்றிக் "கிளிப்பிள்ளை' என்று பெயரும் இட்டனர். பெற்றெடுத்த பிள்ளைக்கு அம்மா, அப்பா, மாமா என்பது போல் சொல்லிச் சொல்லித் தம் மழலைச் செல்வம் போல் பேசச் செய்தனர்.
வெயில் நுழைதல் இல்லாத சோலையுள் "குயில்' இருந்து கூவும் இசையைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தனர். மலைச்சாரலில், மழை முகில் கண்டு ஆடும் மயிலின் அழகில் தோய்ந்தனர். இயலும் இசையும் கூத்தும் இயங்கியலாய் அமைதலைக் கண்டு தமிழ் ஒலி அடங்கலை அமைத்தனர்!
""குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்''
என்பது போல முத்தமிழ் ஒருங்கியலல் இயற்கையைப் போற்றித் தம் மொழியைப் படைத்தனர்.
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.