உடையில் அழுக்கு, கறை ஆகியவை பட்டாலும் படாவிட்டாலும், சலவை செய்யப் போடுகிறோம். சலவைத் தொழில் செய்வார், "உவர்மண்' ஆட்டுப் புழுக்கை (பிழுக்கை) கொண்டே அழுக்கு - கறைகளைப் போக்குவர்!உவர்மண் நீரில் நனைத்து குறித்த அளவு நேரம் வைத்துப் பிழிந்து, சுருளையாக்கி வெள்ளாவிப் பானையில் இட்டு, தீமூட்டி வெதுப்பி, ஆட்டுப் புழுக்கை நீரையும் விட்டு நன்னீரில் அடித்துத் தோய்த்து வெயிலில் காயப்போட்டு உலர்ந்தபின் மடித்துத் தேய்த்து வழங்குவது வழக்கம்.
உவர்மண் போட்டது அழுக்கு, கறை போக்க என்றால், ஆட்டுப் புழுக்கை போட்டது ஏன்? இந்நாளில் "நீலம்' என்னும் சலவைப் பொருள் நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோமே; நிறப் பளிச்சீட்டுக்கு என வேதிமப் பொருள் கலந்த நீர் (டினோபால்) பயன்படுத்துகிறோமே! அப்பயன் முன்பு செய்தது, ஆட்டுப் புழுக்கை!
பழைய உரையாசிரியர்களும், சலவையரும் ஆட்டுப் புழுக்கை என்று கூறாமல், "நீலம்' என வழங்கியமை பயின்று அறிந்து கொள்ளலாம். மண்ணுதல், மண்ணுநீராட்டு, மண்ணு மங்கலம், மணி, மணிவிழா என்பவற்றுக் கெல்லாம் மண் மூலமாக இருப்பதை இவற்றால் அறியலாம்.
நீராடாமல் அழுக்குப் படித்த உடலொடு ஒருவன் தெருவில் நடமாடுகிறான். அவனை,
""சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன்
தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துனோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
காணா உயிர்க்கும் கையற் றேங்கி
உண்ணா நோன்பொடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன்''
என்கிறது மணிமேகலை (3:86-91). மண்ணா மேனியன் - நீராடா உடலன். அதே மணிமேகலை, பிச்சை எடுப்பார் கலத்தை, "மண்டை' என்கிறது (6:62; 6:92). குயக்கலம் செய்வார், சிற்பம் செய்வார், சுதை வேலை செய்வார் ஆகியோரை "மண்ணீட்டாளர்' என்கிறது அது (6:47; 26:37).
நீராடச் சென்ற ஒரு பெண்மகளை, ""மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை'' என்கிறது குறுந்தொகை (292). அவள் நீராடச் சென்றாள்; நீரில் வந்த அரிய மாங்காய் ஒன்றைக் கண்டாள்; விரும்பி எடுத்து உண்டாள்; அரண்மனைத் தோட்டத்துக் காய் அது. ஆதலால், காவலன் அவளை அரசன் முன் நிறுத்தினான்; தலையைக் கொய்துவிட ஆணையிட்டான் அரசன். தந்தை பெருஞ்செல்வன்; ஓடிவந்தான்; கொலைக் குற்றம் புரிந்தார்க்கு அதனை விலக்க 81 யானைகள் தந்தால் விடுதலை உண்டு என்பது பண்டை வழக்கம். அவ்வழக்கப்படி 81 யானைகள் தர முன்வந்தான். ஆனால், அரசன் ஏற்கவில்லை.
"பெண் கொலை புரிந்த நன்னன்' எனப் பழியுற்றான். "அவனைப் பாடோம்' எனச் சங்கச் சான்றோர் உறுதி கொண்டனர். பழியனைப் பாடுபவன், சான்றோன் ஆவனா? என வினவத் தோன்றவில்லையா?
மண் தலம், மண்டலம் ஆயது. சுழலும் பாம்பு புழுதியில் கிடப்பது "மண்டலி' எனப்பட்டது. மண்ணால் சுவர் எழுப்பிய கோயில் "மண்தளி' எனப்பட்டது. முதல் அடிபோல் நான்கடித் தளையும் சீரும் வரும் விருத்தப்பா, மண்டிலப்பா எனப்பட்டது. புகை செறிதல் "புகை மண்டலம்' ஆயது. புகழ் மண்டலால் "புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு' எனப்பட்டது. வயிறு நிரம்பக் குடித்தலும் உண்டலும் வயிறுமண்ட (முட்ட) உண்ணலாயது. மண்டபம், மண்டகம் இடப் பெயராயது "மண்' படிவு "மண்டி' ஆயது. பொருள் மண்டிக் குவிந்தது மண்டி, மண்டிக்கடை, பலசரக்கு மண்டி ஆயது. இனி, மண்ணுள் கொஞ்சம் புகுவோம்.
தொடர்வோம்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.