தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 2

முது முனைவர் இரா. இளங்குமரன்

உலகம் உருண்டையானது; உலா வருவது என்பவை கண்டோம். எப்படி உலா வருகிறது? எப்படிச் சுழல்கிறது? வலமாகச் சுழல்கிறது.

""வலன் ஏர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு'' (திருமுரு. 2-3). திரிதருதல் - சுழல்தல். வலமாகச் சுழல்கிறது; அழகாகச் சுழல்கிறது; பலரும் புகழச் சுழல்கிறது. ஏன்? உலகம் உவப்பச் சுழல்கிறது. அதுமட்டும்தானா, வலமாகச் சுழல்கிறது!

நீர்ச் சுழலைப் பாருங்கள்! சுழல் காற்றாம் சூறைக் காற்றை அல்லது சூறை(றா)வளியைப் பாருங்கள். ஆடுமாடு படுப்பதைப் பாருங்கள். பறவை வட்டமிடுவதைப் பாருங்கள். செக்குச் சுழலலைக் காணுங்கள்.

ஊர்வலம் - நகர்வலம் - கோயில் வலம் - ஆகியவற்றை நோக்குங்கள். எல்லாச் சுழற்சிகளும் வலமேயாம். சுழலலுக்கு அடிப்படை மூலம் என்ன? வட்டம் - வளையம் - உருளை - உருண்டை தாமே! சதுரம், முக்கோணம், நாற்கோணம், எழுகோணம், எண்கோணம் - சுழலுமா?

குழந்தைகள் உருட்டும், சிறுகாற் பொற்றேராம் நடைவண்டி, கம்பலை (கமலை) வண்டி! எல்லா வண்டிச் சக்கரங்களும் வட்டம்தானே. பொறி இயக்கச் செய்கையால் விளைந்த மிதிவண்டி, குதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, கரட்டுந்து, சாலை உருளை, தொடர் வண்டி, வானூர்தி எல்லாமும் கொண்ட சக்கரம், வட்டம்தானே! இயற்கையான வலச் சுழற்றிதானே!

வட்டமாகச் செய்ததால்தானே வட்டை, வளையம், வளையல், வட்டு, சக்கரவடிவில் செய்யப்பட்ட சக்கரை, கருப்புக்கட்டி வட்டு, விளையாட்டு வட்டெறிதல், வட்டமடித்தல் எல்லாம்! வளசல், வளாகம், வளார், வளை, வட்டம், மாவட்டம் ஆகிய எல்லாம்.

இது இயற்கை, கதிர் வட்டம் மட்டுமா? கதிரொளியைக்கொண்டு ஒளி செய்யும் கோள் (ஒளியைக்கொண்டு ஒளி செய்வதால்) இயக்கம் ஆகிய திங்கள், செவ்வாய், புதன்(அறிவன்), வியாழன், வெள்ளி, சனி (காரி) கரும்பாம்பு, (இராகு), செம்பாம்பு (கேது) என்னும் எல்லாமும் வலச் சுழற்சிதானே! இவ்வியற்கை இயக்கத்தைச் செய்வது எது - அதற்கு என்ன பெயர்? இவ்வியற்கை இயங்கியலைச் செய்வது ஈர்ப்பாற்றல் - இயக்காற்றல்! "இயவுள்' என்பது பெயர். இயக்கி (இசக்கி) என்பது மக்கள் வழக்கு. பெரும் பெயர், "இயவுள்' என்பது முன்னோன் இட்ட பெயர். இரண்டு மலைகளுக்கு இடைவெளி உண்டானால் கடக்கிறோமே, அதற்குப் பெயர் "இடை கழி'; இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்கச் சான்றோருள் ஒருவர் பெயர். நெடிய வீட்டின் முன்னும் பின்னும் போய் வர இடையே நடைவழி இருந்தால் இடைகழி! டேழி, ரேழி - கொச்சை வழக்கு.

இரண்டு மனைகளுக்கு இடையே கடவு இருந்தால் போக்கு வரவு புரிய உதவும். கடவுதல் செலுத்துதல்; ஆம், இயக்குதலே! இயவுளுக்குப் பின்னே வந்த கடவுதல் செய்யும் ஆற்றல், கடவு - கடவுள் எனப்பட்டது.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்ல முதற்கண் வேண்டுவது கடவுச்சீட்டு; அந்நாட்டின் இசைவுக்கு உரியது "புகவுச்சீட்டு'!

இயவுள் ஆற்றல், கடவுதலாம் கடவுள் ஆற்றல் எங்கே உள்ளது என்றால், "எங்கே இல்லை?' என்பது, வினாவுக்கு வினாவே விடை! எங்கும் உள்ளதற்கு உரிய பெயர் என்ன?இறை! இறை என்பதன் பொருள் எங்கும் தங்கியது. "இறை கூர்தல்' என்பது புறப்பாடல். இவை எல்லாம் அறிவியலா, அறியா இயலா?

தொடர்வோம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT