தமிழ்மணி

பூர்வீகத்தைத் தேடி...

முனைவர் த. பூவைசுப்பிரமணியன்

தமிழர்களின் பூர்வீகம், மெய்யியல் சிந்தனைகள் முழுமையாக ஆராயப்படுதல் காலத்தின் தேவையாகிறது. திருக்குறள் பரிமேலழகரின் உரை இதற்குச் சிறந்த கருவியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர் தம் 133 அதிகாரங்களிலும் ஏதாவது ஓரிடத்தில் தன் பூர்வீகம் சார்ந்த செய்தியினைத் தவிர்த்துவிட்டு அகன்றதில்லை. எனவே, ஒரு குறளைக் குறிப்பிட்டு, அது சார்ந்த மற்ற குறள்களின் எண்களைப் பதிவுசெய்து புதிய ஆய்வுப் போக்குக்கு ஆற்றுவித்தலே இச்சிறு குறிப்பின் நோக்கம்.

""தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்'' (1037)

இக்குறளின் பொருளாவது: "நிலத்தைப் பன்முறை உழுது ஆறவிட்டு அதன்பின் பயிர் செய்தால் அப்பயிர்க்கு ஒருபிடி எருவும் இடுதல் வேண்டாம்' என்பதே. இதில் தொடிப்புழுதி எனும் சொல்தான் இன்றும் உழுகுடி மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது. பரிமேலழகர் தம் உரையில் தொடிப்புழுதி என்பதற்கு "ஒரு பலப்புழுதி' என்று உரையிடுகிறார்.

உழவர்கள் நிலத்தினை நான்குமுறை உழுது காயவிடுவர். இறுதியாகச் "சால் உழவு' எனும் முறையில் உழுவர். இந்தச் சால், உழவு நிலத்தின் மண்ணை வரிவரியாகப் பிரித்துக் கொடுக்கும். இவ்வாறு பிரித்து வைப்பதன் மூலம் நீர், நிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாகப் பாயும். இவ்வாறு நிலத்தினைப் பலமுறை உழுவதை "செஞ்சால் உழவு' என நற்றிணையும் (340:7), அகநானூறும்(26:24) குறிப்பிடுகின்றன. விவசாயிகள் இதனை, "பொடி மண் உழவு, தொடிப்புழுதி' என்ற சொற்களால் பயன்படுத்துகின்றனர். ""மொச்சைய தொழுபுழுதில ஊனனும்'' எனும் தொடர் மூலம் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

"அகல உழுவதைவிட ஆழ உழு' எனும் பழமொழியும் இந்தத் தொடிப்புழுதி எனும் சொல்லுக்கு உயிரூட்டுகின்றன. இதனைப் போல் விவசாயிகள் பயன்படுத்தும் மிகுதிச் சொற்கள் திருக்குறளில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் வித்து (85), இருபுனலும், வருபுனலும் (737), வில் ஏர் உழவர் (872), காடி (1050), வாளொடு (726), அமிழ்தம் (11) என்பன போன்ற விவசாயச் சொற்கள் வழக்கில் உள்ளன.

சங்கப் பாடல்கள் உழவர்களையும் போர் வீரர்களையும் ஒற்றுமைப்படுத்துகின்றன. உழுகுடி மக்களின் வழக்குச் சொற்களைச் சேகரித்து ஆராய்ச்சிக்கு வித்திடுவது காலத்தின் தேவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT