தமிழ்மணி

இஸ்லாமியப் பெண் "ஞானி'கள்!

இசுலாமியப் பெண்கள் பலர் இறைவனைப் போற்றி மெய்ஞ்ஞானப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.

தாயம்மாள் அறவாணன்

இசுலாமியப் பெண்கள் பலர் இறைவனைப் போற்றி மெய்ஞ்ஞானப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண் கவிஞர்கள் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். கீழக்கரை செய்யது ஆசியா உம்மா, கச்சிப்பிள்ளையம்மாள், தென்காசி ரசூல்பீவி. இம்மூவரும் சூஃபிகளாகப் பாராட்டப் பெற்றனர்; மெய்ஞ்ஞானிகளாகப் புகழப் பெற்றனர்.

செய்யது ஆசியா உம்மா
இவர், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கி.பி. 1865-இல் பிறந்தவர். கொடைவள்ளல் சீதக்காதி மரைக்காயர் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் மூதாதையர் கீழக்கரை ஜும் ஆ பள்ளி வாசல், புதுப்பள்ளி வாசல், காயல் பட்டணத்துப் பள்ளி வாசல் முதலியவற்றைக் கட்டினார்களாம். தந்தையார் ஹபீபு மரைக்காயர், தாயார் உம்மா ஹமீபு உம்மா. ஆசியா உம்மா இறை
நேசச் செல்வர்களின் துதிப் பாடல்களை மனனம் செய்து பாடிக்கொண்டே இருப்பாராம். தியானத்தில் ஈடுபட்டு, இறைவனைத் துதித்துப் பாடுவதும், கவிதை படைப்பதுமாக இருந்துள்ளார். இறைநேசர் கல்வத்து நாயகத்தின் நெருங்கிய சீடராகவும், கீழக்கரைப் பல்லாக்கு ஒலியுல்லாவுடன் நெருங்கிய நட்பும் உடையவராகத் திகழ்ந்துள்ளார்.
இவர்களால் இறைவேண்டுதல் கவிதைக்கு ஊக்கமும் ஊட்டமும் பெற்றார். ஆசியா உம்மா இஸ்லாமிய ஞானமார்க்கத்தை எளிய முறையில் விளக்கும் வசன நூல் ஒன்றை அரபுத் தமிழில் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்கள், "மெய்ஞானத் தீப இரத்தினம்', "மாலிகா இரத்தினம்' என இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. அவற்றுள் மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் எளிதில் கிடைக்கிறது. ஆனால், மாலிகா இரத்தினம் கிடைக்கப் பெறவில்லை. மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் அரபுத் தமிழில் எழுதப் பெற்றுள்ளது. ஏறக்குறைய 71 தலைப்புகளில் பாடல்கள் பாடியுள்ளார். விருத்தம், துதி, புகழ் மாலை, ஆனந்தக்களிப்பு, கும்மி எனப் பல "பா' வகைகளில் பாடும் ஆற்றல் பெற்றவர் ஆசியா உம்மா.
கண்ணிகளின் தலைப்பாகச் சில வருமாறு: பேரானந்தக்கண்ணி, அருளானந்தக்கண்ணி, பரமானந்தக்கண்ணி, சதானந்தக்கண்ணி, மேலாம்பரக்கண்ணி, பரஞ்சுடர்க்கண்ணி, ஏகபராபரக்கண்ணி, கஃப்பார் கண்ணி, சதக்குவலிகண்ணி, குணங்குடியார்கண்ணி, ஹபீபு வலிகண்ணி. குணங்குடியார் கண்ணி எனும் தலைப்பில் உள்ள ஒரு பாடலைக் காண்போம்:

""அறிவானந்தம் பொழிந்தீர் ஆனந்தமாரியைப் போல்
குறிப்பான யோக முற்ற குணங்குடியென் நாயகமே
மனோன்மணியாள் வந்தேன் மதிக்க வொண்ணாச்
}சொற்களெல்லாம்
குணமுடனே தாருமைய்யா குணங்குடியென் நாயகமே''

ஞான ரத்தினக் கும்மியை 120 கண்ணிகளால் அரபுத் தமிழில் ஆக்கியிருக்கிறார். ஞானத்தை ஞானப் பெண்ணாக உருவகித்துப் பாடியுள்ளார். மெஞ்ஞானி செய்யது ஆசியா உம்மா, அரிய பல பாடல்களை எழுதியது பெண்களுக்குப் பெருமை நல்குவதாகும்.

கச்சிப்பிள்ளையம்மாள்
கச்சிப்பிள்ளையம்மாள் இளையான்குடியில் பிறந்தவர். அவரின் தந்தையின் பெயர் லுக்மான். அவரின் சகோதரர் பெயர் முஹம்மது மீறான் மஸ்தான். கச்சிப்பிள்ளையம்மாள் பாடிய பாடல்கள் "மெஞ்ஞான மாலை' என்ற பெயருடன் கி.பி.1918ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. அதில் மெய்ஞ்ஞான மாலை, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞான ஊஞ்சல், மெய்ஞ்ஞானக் கும்மி போன்றவற்றைப் பல கண்ணிகளில் இயற்றியுள்ளார். அவற்றுள் "மெய்ஞ்ஞானக் குறம்' வருமாறு:

""உண்மையுள்ள ஞானமதை உலகிலுதித்தோர்க்கு
ஓர்மையுடனே எடுத்திங் குரைக்கிறே னிப்போதே''

""கண்மணியா யுலகில்வந்த கச்சிப்பிள்ளை கூறும்
கருக்குழியின் ஞானமிதன் கருத்தை யறிவீரே''


ரசூல்பீவி பரிமளத்தார்
இவர், நெல்லை மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். 1910-ஆம் ஆண்டில் வாழ்ந்தவர். தென்காசியில் வாழ்ந்த சின்ன மீறான் என்பவரின் மகன் முகம்மது காசிம் என்பவரைப் "பரிமளத்தார்' என்றே அழைப்பர். அவரின் மனைவியே ரசூல்பீவி. பரிமளத்தாரும் ரசூல் பீவியும் பாவலர்கள். பரிமளத்தார் பாடல்கள் என்ற நூலை அவர்தம் மகனார் முகம்மது அப்பா சாகிப் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
"பரிமளத்தார் பாடல்' என்ற நூலின் பிற்பகுதியில்
ரசூல் பீவி எழுதிய "ஞானாமிர்த சாகரம்' என்ற நூலும் இடம்பெற்றுள்ளது. ஞானம் போதிக்கும் நல்ல கவிதைகள் ரசூல் பீவி கவிதைகளாகும். கணவன் - மனைவி இருவருமே இசுலாமிய ஞானிகள். ரசூல் பீவி தம்முடைய நூலில் தம் கணவரை நோக்கி, தெளிவு பெறுவதற்காகக் கேள்விகளைக் கேட்பதும் அதற்குக் கணவர் பதில் கூறுவது போன்றும் (வினா-விடை) பாடிய பாடல்கள் அனைத்தும் ஞான மொழிகளாகும். மேற்குறித்த பெண் ஞானியர் மூவரும் எழுதிய பாடல்கள் அனைவருக்கும் பொருந்துவன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT