தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

DIN


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவில் "தினமணி' தனது மிக மூத்த வாசகர் ஒருவரை இழந்துவிட்டது. "தினமணி'யின் முதல் இதழிலிருந்து அவர் படித்து வருகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாள் விடாமல் "தினமணி' நாளிதழைப் படிப்பவராக அவர் இருந்து வந்தார் என்பது நிச்சயம். அதிகாலையில் அவர் முதலில் படிக்கும் நாளிதழாக "தினமணி'தான் இருந்து வந்திருக்கிறது.
அதேபோல, "தமிழ்மணி' பகுதியையும், எனது "இந்த வாரம்' பதிவுகளையும் தவறாமல் படிப்பவர்களில் "கலைஞர்' கருணாநிதியும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால், இந்த வாரத்துக்கும், கலாரசிகன் என்கிற எனது புனைபெயருக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியதே, அவர் இவை குறித்து அடிக்கடி "முரசொலி' இதழில் எழுதியதால்தான்.
""தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு'' என்றும், ""வாரந்தோறும் "கலாரசிகன்' என்கிற புனைபெயரில் தினமணியில் அவர் எழுதும் "இந்த வாரம்' இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்'' என்றும் அவர் முரசொலியில் பதிவு செய்ததைத் தொடர்ந்துதான், "இந்த வாரம்' இந்த அளவுக்குப் பிரபலமானது. அவர் படிக்கிறார் என்பது தெரிந்ததும், ஏனைய அரசியல் தலைவர்களும் "இந்த வாரம்' பகுதியின் வாசகர்களாக மாறிய விந்தை நிகழ்ந்தது.
கடந்த 70 ஆண்டுகளாக தமிழக அரசியல், "கருணாநிதி' என்கிற ஐந்தெழுத்துப் பெயரைச் சுற்றித்தான் பின்னிப் பிணைந்து கிடந்தது. அவரைப் போல எழுத வேண்டும், அவரைப் போலப் பேச வேண்டும், அவரைப் போலப் புகழ் பெற வேண்டும், அவரைப் போல அரசியல் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் அவரது சமகால ஆளுமைகள் அனைவருக்குமே இருந்த பேராசை. ஆனால், அவருக்கு இணையாக சினிமா, இலக்கியம், அரசியல் என்று எல்லாத் தளங்களிலும் வேறு யாராலும் வெற்றி அடைய முடியவில்லை என்பதுதான் "கலைஞர்' கருணாநிதியின் வாழ்நாள் சாதனை. அவரது உயரம் குறைவு. ஆனால் அவரடைந்த வெற்றியின் உயரம் மாளப் பெரிது!
தனக்கென்று நாளிதழ். அந்த நாளிதழின் மூலம் நூலகம், அந்த நூலகத்தில் எப்போது வேண்டுமானாலும் தனக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களும் தகவல்களும் என்று தனது அரசியல் வாழ்க்கைக்கு முறையான அஸ்திவாரம் அமைத்துக் கொண்டது அவரது புத்திசாலித்தனம். பண்டித ஜவாஹர்லால் நேருவால்கூட "நேஷனல் ஹெரால்ட்' நாளிதழின் மூலம் சாதிக்க முடியாததை "கலைஞர்' கருணாநிதியால் சாதிக்க முடிந்தது.
அவரிடம் இருந்த மூலதனமெல்லாம் தமிழன்னையின் பரிபூரணமான ஆசி. அவரது பேச்சிலும், எழுத்திலும் கொஞ்சி விளையாடிய தமிழ் அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச்சென்றது. பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத அவருக்கு சங்க இலக்கியங்களும், தமிழ்க் காப்பியங்களும் ஏன் சமய இலக்கியங்களிலும் கூட புலமை இருந்தது என்பது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத பேராற்றல். அவருக்கு இறைநம்பிக்கையும் இறையுணர்வும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இறைசித்தம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
"தினமணி' நாளிதழில், உலகத் தமிழ் மாநாடு நீண்ட காலமாக நடத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கோவையில் தமிழ் மாநாடு கூட்டப்பட வேண்டும் என்று அன்றைய முதல்வர் "கலைஞர்' கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன், நாளிதழ் வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களில், கோவையில் தமிழ் மாநாடு நடத்துவது குறித்த அறிவிப்பு அவரிடமிருந்து வந்துவிட்டது. அதன் தொடர்ச்சிதான் கோவையில் கோலாகலமாக நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாடு.
"பராசக்தி' வாழும் காலம்வரை அவரது எழுத்தும் வாழும்... அவரது தமிழும் வாழும்!

 
கோவை விஜயா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கே "பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்' என்கிற புத்தகம் கண்ணில் பட்டது. எப்படி இத்தனை நாள்களாக இதைப் படிக்காமல் இருந்தோம் என்று நினைத்துக்கொண்டே பார்த்தபோது, அந்தப் புத்தகம் முனைவர் சொ.சேதுபதியால் எழுதப்பட்டது என்பது என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது.
கிருங்கை சொ. சேதுபதியும் அவரது இளவல் சொ. அருணனும் விசை தட்டும் பாணியில் ஒன்றன்பின் ஒன்றாகப் புத்தகங்களை எழுதிக் குவிப்பவர்கள். சேதுபதியைப் பொருத்தவரை மிக அரிய ஆய்வுகளை அவரால் தொடர்ந்து எப்படி வெளிக்கொணர முடிகிறது என்கிற வியப்பு எனக்கு எப்போதும் உண்டு. 
அவர் எந்தவொரு புத்தகத்தை எழுதினாலும், அச்சானவுடன் எனக்கு ஒரு பிரதியைத் தவறாமல் அனுப்பி வைத்துவிடுவார். அப்படி இருந்தும், "பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்' என்கிற இந்தப் புத்தகம் எனது பார்வையில் படாமல் போனது வியப்பாக இருக்கிறது.
மகாகவி பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது என்பதை இந்தப் புத்தகம் அளவுக்குத் தெள்ளத் தெளிவாக வேறு யாரும் பதிவு செய்ததில்லை. அதேபோல, பாரதிதாசன் எழுதிய ஒரு பாடல், பாரதியாரின் பெயரில் உலவுகிறது என்பதையும் இது பதிவு செய்கிறது. 
பாரதியாரும் அரவிந்தரும், பாரதியாரின் தீபாவளி கனவு, பாரதியார் நோக்கில் நாயன்மார்கள், பாரதியார் பாடிய ஊஞ்சல் பாட்டு, பாரதியார் கேட்ட திருத்தொண்டத் தொகைகள் ஆகிய கட்டுரைகள் புத்தகத்தின் தலைப்பில் குறிப்பிட்டிருப்பது போலவே, "பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்'. பாரதியாருக்கும் அரவிந்தருக்கும் இடையே இருந்த நெருக்கமும், கம்பர் குறித்த அரவிந்தரின் கருத்தும், அரவிந்தருடனான பாரதியின் கடைசி சந்திப்பும் குறிப்பிடத்தக்க பதிவுகள். முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அணிந்துரை வழங்கிய புத்தகம் எனும்போது, அதற்கும் மேலாக இதுகுறித்துச் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை.
சிலம்பொலியார் குறிப்பிட்டிருப்பது போல இது, ""பாரதி ஆய்வு வானில் சிறந்ததொரு ஒளிக்கீற்று!''


சில கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததாகவோ, அற்புதம் என்று கூறும்படியாகவோ இல்லாமல் இருந்தாலும், மனதைத் தொடும். ஒரு நொடி நம்மை ரசிக்கத் தூண்டும். அப்படியொரு கவிதை புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த "அவனியை கவனி' என்கிற கவிஞர் இளங்கவியின் கவிதைத் தொகுப்பில் வெளியான "விலைவாசி' என்கிற கவிதை.

நீ தொடும் உயரம்
நான் தொடுவது
எப்போது?
விலைவாசியிடம்
விவசாயி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT