தமிழ்மணி

பல்லோர் உவந்த உவகை

முனைவர் பா. நாகலட்சுமி


"பல்லோர் உவந்த உவகை' என்னும் இத்தொடர், "பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சி' எனப் பொருள்படும். பலரது மகிழ்ச்சியைப் பற்றிக் கூறுவது யார்? "மலிபெயல் கலித்த' எனத் தொடங்கும் கபிலரது அகநானூற்றுப் பாடலில், தலைமகன் வரைவு மலிந்தமை அறிந்த தோழி கூற்றுப் பாடலாக வருகிறது.

தலைவன் வரைவு (திருமணம் செய்துகொள்ள இசைந்தது)மலிந்தமை தோழிக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. களவு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சில இடையூறுகளால் தலைவி அடைந்த துயரம் தீரப் போகிறதல்லவா!  நல்லதோர் மணவாழ்வு தலைவிக்கு வாய்க்கப் போகிறதல்லவா! அதனால்தான் இந்தப் பெருமகிழ்ச்சி. அம்மகிழ்ச்சி எத்தகையது தெரியுமா? அதனைக் கபிலரது பாடல் வரிகளே எடுத்தியம்புகின்றன.

"நாடுவறங் கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைதறு காலைக்
குன்றுகண் டன்ன கோட்ட யாவையுஞ்
சென்றுசேக் கல்லாப் புள்ள உள்ளில்
எனறூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுட் பெய்தந் தற்றே'

மழையின்றிக் கோடை நீடிய காரணத்தால் நாடு வறுமையுற்றது; உழுகலப்பைகள் தூங்கின; பசுமை என்பதே இல்லை. நீரில்லாக் காரணத்தால் பறவைகள் வந்து தங்காத பெரிய கரைகளையுடைய பெரிய குளங்கள் வெப்பம் மிகுந்து காணப்பட்டன. 

இந்நிலையில், அப்பெரிய குளங்கள் நிறையும்படி பெருமழை பொழிந்தது.அந்த இன்பமான வைகறைப் பொழுதில், மழை பொழிந்து, குளம் நிறையக் கண்ட மக்கள் அடைந்த உவகை அளக்கலாகா உவகையல்லவா! மழை பொழியக் குளம் நிறைந்தது; மக்கள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. பலரும் அடைந்த உவகை எல்லாம் என்னுள் பெய்து வைத்தாற் போல நானும்  உவகை அடைகிறேன்'' எனத் தோழி கூறுகின்றாள்.

தலைவன் வரைவு மலிந்தமையால் தோழி உற்ற உவகைக்கு உவமையாக, மழை பொழிந்து, குளம் நிறையக் கண்ட பலரும் அடைந்த உவகை கூறப்படுகிறது. உவகை என்ற உணர்வுக்கு அந்த உவகை உணர்வே உவமையாவது அருமையிலும் அருமை.

பெரிய குளங்கள் குன்றங்களைக் கண்டாற் போன்ற பெரிய கரைகளைப் பெற்றிருந்தன என்கிற செய்தி குறிப்பிடத்தக்கது. சங்க காலத்திலேயே மழைநீர் சேமிப்புப் பெற்ற முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிய முடிகிறது. பெருமழை பொழிந்தபோதும் வெள்ளச்சேதம் என்பது இல்லையாம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT