தமிழ்மணி

அறிஞர்களுக்கு சுவடி தந்த அறிஞர்! 

முனைவர் சே. கரும்பாயிரம்


இலங்கையிலுள்ள திருக்கோணமலையில் தம்பிமுத்துப் பிள்ளைக்கு மகனாக 1863-ஆம் ஆண்டு பிறந்தவர் தி.த. கனகசுந்தரம்பிள்ளை. தொடக்கக் கல்வியை, தனது தந்தையாரிடமும், கணேச பண்டிதர், கதிரைவேற்பிள்ளை, போன்றோரிடமும் பயின்றார். பின்னர்1880-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அங்கு எஃப்.ஏ., பி.ஏ. ஆகிய பட்டங்களைப் பெற்றார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை நன்கு அறிந்து கொண்டார். 
சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய 
தமிழ்ப் பேரகராதியில் துணைப் பதிப்பாசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.      
அச்சில் பதிப்பிக்கப்படும் நூல்கள் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் தி.த. கனகசுந்தரம்பிள்ளை. அதனால் அவர் காலத்துப் பதிப்பாசிரியர்களான வ.உ. சிதம்பரம்பிள்ளை, கா. 
நமச்சிவாய முதலியார், தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் போன்றோர் தாம் பதிப்பிக்க இருந்த நூல்களை அவரிடம் கொடுத்துத் திருத்தங்களைப் பெற்று வெளியிட்டனர்.  
பிறருடைய நூல்கள் பலவற்றிற்கும் திருத்தங்கள் செய்து கொடுத்த தி.த. கனகசுந்தரம்பிள்ளை 1908-ஆம் ஆண்டு சுன்னாகம் 
அ.குமாரசுவாமிப் பிள்ளையின் உரையுடன் வெளிவந்த யாப்பருங்கலக்காரிகைக்குத் திருத்தங்கள் செய்து கொடுத்ததோடு அந்நூலுக்கு முகவுரையும் வழங்கியுள்ளார். 
அவர் நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். 1912-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட 
அகப்பொருள் விளக்கம் நூலுக்குச் சுன்னா
கம் அ.குமாரசுவாமிப் பிள்ளையோடு இணைந்து உரை எழுதினார்.  
தமிழ் மொழியொடு வடமொழியிலும் அவருக்குப் புலமை இருந்ததால் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்துள்ளார். அதற்குச் சான்றாக 1907-ஆம் ஆண்டு வால்மீகி இராமாயணக் கிஷ்கிந்தா காண்டத்தின் வசனத்தைப் பண்டித நடேச சாஸ்திரியோடு இணைந்து வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ததைக் கூறலாம்.    
பதிப்பாசிரியராக இருந்து நூல்கள் வெளிவர காரணமாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவர் பல சுவடிகள் கொண்டு ஒப்பு நோக்கி திருத்தங்கள் செய்து வைத்திருந்த 
நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்தைத் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1923-ஆம் ஆண்டு வெளியிட்டதைக் குறிப்பிடலாம். 
சி.வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம் ஆண்டு முதல் முதலில் கலித்தொகையைப் பதிப்பித்தபொழுது தி.த. கனகசுந்தரம்
பிள்ளை அவருக்கு சுவடிகள் தந்து உதவி
னார்.  அவர் செய்த உதவியை மறவாமல் சி.வை. தாமோதரம்பிள்ளை தாம் பதிப்பித்த கலித்தொகையின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.  
டாக்டர் உ.வே. சாமிநாதையருக்குச் சுவடிகள் பல கொடுத்து உதவியவர் தி.த. கனகசுந்தரம்பிள்ளை. புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பாமாலை (1895), பதிற்றுப்பத்து (1904), குறுந்தொகை (1937) ஆகிய பதிப்புகளுக்கு அவர் சுவடிகள் கொடுத்ததை உ.வே. சாமிநாதையர் அந்தந்த நூல்களின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.   
முதல் முதலில் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்.
இவருடைய பதிப்புக்கு தி.த. கனகசுந்தரம்பிள்ளை இரண்டு சுவடிகள் கொடுத்ததோடு, பதிப்பாசிரியரான பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 1914-ஆம் ஆண்டு மறைந்தமையால் அவர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்து அந்நூல் வெளிவருவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கிறார். 
தி. செல்வகேசவராய முதலியார் பழமொழி நானூறு (1917), ஆசாரக்கோவை (1918) ஆகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பித்தவர். இந்தப் பதிப்புகளுக்கு முறையே ஒரு சுவடியைத் தந்தவர் தி.த. கனகசுந்தரம்பிள்ளை. இவர் கொடுத்த ஆசாரக்கோவைச் சுவடியினைப் பிற சுவடிகளோடு ஒப்பு நோக்கிய பொழுது பாடவேறுபாடுகள் இருந்தன என்பதை தி.  செல்வகேசவராய முதலியார் தன்னுடைய பதிப்புரையில் கூறியுள்ளார். 
இவரின் தொல்காப்பியம், அகநானூறு ஆகியவற்றின் சுவடிகளை முறையே இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் (1920) என்னும் நூலின் பதிப்புக்கு கா. 
நமச்சிவாய முதலியாரும் அகநானூற்றுப் பதிப்புக்கு வே. இராஜகோபாலையங்காரும் பயன்படுத்தியுள்ளனர். 
சைவ சித்தாந்த மகா சமாஜம் 1940-ஆம் ஆண்டு சங்க இலக்கியம் முழுவதும் (மூலம் மட்டும்) கொண்ட பதிப்பை வெளியிட்டது. இப்பதிப்புக்குப் பல்வேறு சுவடிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு 
ஆகிய நூல்களுக்கு தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் தாள்சுவடிகள் துணைநின்றன.  
பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளை 1912-ஆம் ஆண்டு தொல்காப்பிய இளம்
பூரணரின் உரை முழுமைக்குமான சுவடியை தி.த. கனகசுந்தரம்பிள்ளையிடம் பெற்று அதனை தாளில் எழுதிக் கொண்டார். இது பற்றி அகராதி - நினைவுகள் (பக்.6)  என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாள்சுவடி இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பதிப்பித்த வ.உ. சிதம்பரம்பிள்ளைக்குப் பெரிதும் பயன்பட்டது.  
பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளை, 
புறத்திரட்டு (1938), கயாதரம் (1939) இன்னா நாற்பது (1944), நான்மணிக்கடிகை (1944), பழைய உரையுடன் திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (1944), ஆகிய நூல்களைப் பதிப்
பிக்க தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் சுவடிகள் உதவியாக இருந்தன.       
இவ்வாறு பதிப்புகளுக்குச் சுவடிகள் பல கொடுத்து உதவிய தி.த. கனகசுந்தரம்பிள்ளை பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள கோயில்கள் மீது பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்களைத் தொகுத்து ஈழமண்டலத் திருத்தல தேவாரமும் திருப்புகழும் என்னும் தலைப்பில் நூலினை வெளியிட்டும் தமிழுக்குப் பெருந்தொண்டு செய்தவராக விளங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT