தமிழ்மணி

இரவலரைத் தேடி ...

தயரதனின் நீதியும் ஈகையும்

தெ. ஞானசுந்தரம்

கோசல நாடு தெய்வப் பூதலமாய்த் திகழ்ந்தது. அங்கு வறியவர் இல்லை. அதனால் வண்மைக்கு வழியில்லை. அங்கு இரப்பாரும் இல்லை. ஈவாரும் இல்லை. "கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ' என்கிறார் கம்பர்.

அந்நாடு கல்வி என்னும் விதையிலிருந்து கேள்வி என்னும் பல கிளைகளும் தவம் என்னும் இலைகளும் அன்பு என்னும் அரும்பும் தோன்றி இன்பக் கனி வழங்கும் பயன்மரமாய் விளங்கியது. அதனை ஆட்சி புரிந்தவன் தயரதன். அவன் வேந்தர்க்கு வேந்தன். நல்லற மூர்த்தி. இரப்போர் கடல், அறிவுக் கடல், பகைக் கடல், போகக் கடல் ஆகிய நாற்கடலையும் கடந்தவன்.

தயரதன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோசலத்தில் பிச்சைக்காரர் பலர் இருந்துள்ளனர். அவன் "இல்லை' என்று வந்தவர்களுக்கு "இல்லை' என்று கூறாமல் வாரி வாரிக் கொடுத்தான். அவர்களது வறுமைத் துன்பம் அகன்றது. அவன் ஆட்சியில் பிச்சைக்காரர் ஒருவர் கூட இல்லை. இதனையே கம்பர் உருவக நடையில் "ஈகை என்னும் தோணியால் இரப்போர் என்னும் கடலைக் கடந்துவிட்டான்' என்கிறார்.

ஈந்தே கடந்தான்; இரப்போர்கடல்; எண்ணில் நுண்நூல்

ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர்; வாளால்

காய்ந்தே கடந்தான் பகைவேலை; கருத்து முற்றத்

தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்

என்று தயரதன் மாண்புகளை எடுத்துரைக்கிறார். இத்தகைய செல்வக் கிடப்பின் இடையே இருந்த நாட்டில் இரப்போர் இருக்க வாய்ப்பு உண்டோ?

இராமன் தாயின் சொல்லைத் கேட்டுத் தந்தை தந்த ஆட்சியை நீத்துக் கானகம் புறப்பட்டான். தேரோட்டி சுமந்திரன் வெறுந்தேரோடு திரும்பி வந்து இராமன் காடு நோக்கிப் போனான் என்று கூறினான். அதனைக் கேட்ட அக்கணமே தயரதன் ஆவியும் போய்விட்டது. அப்போது பரதன் அயோத்தியில் இல்லை. நெடுந்தொலைவில் கேகய மன்னன் அரண்மனையில் இருந்தான்.

திருமணத்திற்குப்பின் அவன் மாமன் உதாசித்து அயோத்தி வந்து அழைத்துச் சென்றிருந்தான். இராமனை விட்டுப் பிரியாத இலக்குவனைப் போலப் பரதனையை விட்டுப் பிரியாதவன் சத்துருக்கனன். அவனும் அங்கு இருந்தான். இவர்களோடு இவர்தம் மனைவியர் சென்ற குறிப்பு இல்லை.

வசிட்டன் தந்த திருமுகத்தோடு கேகயம் சேர்ந்தனர் தூதர் . உடனே அங்கிருந்து புறப்பட்ட பரதன், தயரதன் இறந்த பதிநான்காம் நாள் அயோத்தி திரும்பினான்.

தாய் கேட்ட வரத்தால் தன் தந்தை உயிர் துறந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தான்; துடிதுடித்தான்; ஆற்றாது புலம்பினான். அவன் புலம்பல்களுள் ஒன்றினைத் தெரிவிக்கும் பாடல் -

செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ!

எவ்வழி மருங்கினும் இரவலர் தாம்

இவ்வழி உலகினில் இன்மை நண்பினோர்

அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐயா?

என்பதாகும்.

இதற்கு வை. மு. கோ. பதிப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உ.வே.சா. நூல் நிலையம் ஆகியவற்றின் பதிப்புகளிலும் எழுதப்பட்டுள்ள உரை ஒரே வகையிலேயே அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும், "மன்னவ , இவ்வழி உலகினில் இன்மை நண்பினோர் எவ்வழி மருங்கினும் இரவலாளர்தாம்' என்று கொண்டு கூட்டிப் பொருள் கண்டுள்ளனர்.

அறிஞர் வை.மு. கோ. "ஐயனே! நேர்மையான நீதி தவறாத வகையினால் ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திய மன்னவனே! இந்தப் பூலோகத்தில் எந்த இடத்தில் உள்ளவரும் எந்த வமிசத்தில் உள்ளவரும் உன்னிடத்தில் இரப்பாளராய் இருந்தவரே. வேறு இல்லாமையால் சொர்க்கலோகத்தில் இரவலராக ஆகாமல் உன்னோடு நட்பு கொள்ள உரியர் இருக்கின்றனர் என்று கருதிச் சென்றாயோ' என்று உரையிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பின் உரையாசிரியர், இன்மை நண்பினோர் என்பதற்கு மாறாக , இனிய நண்பினோர் என்னும் பாடத்தைக் கொண்டு "இம்மண்ணுலகத்தில் உனக்கு இனிய நண்பராய் இருந்தவர்கள் பல இடங்களிலும் உள்ள இரவலாளரே. அப்பொன்னுலகினும் இருக்கின்றனரோ ( இலரே ) என்று பொருள் கண்டுள்ளார் (2241).

மேலும், குறிப்புரையில் இச்செய்யுளில் "பொன்னுலகில் பெற இயலாத இரப்பாளர் பொருட்டேனும் இவ்வுலகில் இருந்திருக்கலாமே என்று அரற்றுகின்றான்' என்று விளக்கம் தந்துள்ளார்.

உ.வே.சா. நூலகப் பதிப்பு, "நேர்மையான நெறியிலே செலுத்திய ஆணைச் சக்கரத்தையுடைய அரசே! என் ஐயனே! இவ்வுலகத்தில் உனக்கு இனிய நட்பாளராவோர் எங்குமுள்ள இரவலரே ஆவர். அவ்வுலகத்திலும் (அவ் விரவலர்) இருக்கின்றரோ' (இல்லையே) என்று விளக்கம் தந்துள்ளது.

இவ்விளக்கங்களில் தெளிவு இல்லை. இந்தப் பூலோகத்தில் எங்கும் இரப்பாளார் தவிரப் பிறர் இல்லை என்றும், இரப்பாளர் பொருட்டேனும் இவ்வுலகில் இருந்திருக்கலாம் என்றும், உனக்கு இனிய நட்பாளராவோர் எங்குமுள்ள இரவலரே ஆவர் என்றும் தந்துள்ள விளக்கம், ஏற்பார் இல்லாத நாடு என்பதற்கு முரணாக அமைகிறது.

இவ்வாறு பொருள் கொள்வதற்குக் காரணம் யாது? உலகினில் என்னும் சொல்லில் உள்ள இல் என்பதனை இடப் பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபாகக் கொண்டதே ஆகும். மர்ரே பதிப்பிலும் சொற்பிரிப்பு இவ்வாறே பொருள் கொண்டுள்ளனர் என்பதனைக் காட்டுகிறது. இப்பாட்டில் இல் என்பது இல்லை என்று பொருள்படும் குறிப்பு வினைமுற்று ஆகும்.

இஃது இப்பொருளில், கம்பரின் இராமகாதையில்,

மேல் ஓர் இடம் இல் எனச் செம்பொன் இஞ்சி (163)

மங்குநர் இல் என வரம்பில் வையம் (181)

போன்ற இடங்களில் வருதல் காணலாம்.

உலகினில் என்பதனை இவ்வாறு பிரிக்கும் போது, கொண்டு கூட்ட வேண்டாமல் ஆற்றொழுக்காகப் பொருள் கொள்ளும்படி பாட்டு அமைகிறது.

"நேரிய வழியில் ஆணைச் சக்கரத்தைச் செலுத்திய அரசே! எங்கு நோக்கினும் இவ்வுலகில் இரப்பாளர் இல்லை. ஒருவேளை வறுமையுற்றோர் மேலுலகத்தில் இருக்கிறார்களோ? ஐயா! அவர்களைத் தேடிச் சென்றாயோ' என்று ஆற்றாது புலம்புகிறான் பரதன் என்று அமையும்.

இதனால் நாட்டில் எங்கும் பிச்சைக்காரர் இல்லை என்பது தெளிவாகிறது. இன்மை நண்பினோர் என்பதற்கு மாறாக இன்மை நண்ணினார் என்னும் பாடம் இரு சுவடிகளிலும், இன்மை நண்ணினோர் என்னும் பாடம் நான்கு சுவடிகளிலும் இருப்பதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் காணப்படுகிறது. இதனால் இன்மை நண்ணினோர் என்பதே நல்ல பாடமாகத் தோன்றுகிறது.

இப்பாட்டின் திருந்திய வடிவம்

செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ!

எவ்வழி மருங்கினும் இரவலர் தாம்

இவ்வழி உலகின் இல்; இன்மை நண்ணினோர்

அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐயா?

என்பதாகக் கொள்வதே சிறப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

ட்ரீம் கேர்ள்... மாளவிகா மோகனன்!

Kantara chapter 2 public review - காந்தாரா 2 எப்படி இருக்கு? | Rishab Shetty

SCROLL FOR NEXT