தமிழ்மணி

அமைதியின் அரசர் இயேசு

உலக வரலாற்றின் மையமாகத் திகழும் இயேசு பெருமான் பிறந்த நாளை (டிச.25) வையகம் போற்றி மகிழ்கிறது.

தினமணி செய்திச் சேவை

பேராசிரியர் பால் வளன் அரசு

உலக வரலாற்றின் மையமாகத் திகழும் இயேசு பெருமான் பிறந்த நாளை (டிச.25) வையகம் போற்றி மகிழ்கிறது. மாடடைக் குடிலில் மார்கழிப் பனியில் எளிமையின் வடிவமாக இயேசு தோன்றினார். இறை வாக்கினர் எசாயா கூறுவது போன்று ''ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்.

ஆட்சிப் பொறுப்பு அவரது தோள் மேல் இருக்கும். அவரது 'திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்' (9:6) கிழக்கிலிருந்து சென்ற ஞானியாராகிய மூன்று வேந்தர் கசுபார், பந்தசார், மெல் கியோர் ஆகியோர் அவர்களுக்கு காட்டிய விண்மீன் குழந்தை இயேசு பிறந்த மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றது.

குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்' (மத்தேயு 2:12). பிறந்திருக்கும் குழந்தை மன்னன் என்பதைக் குறிக்கும் வகையில் பொன்னும், இறைவன் என்பதைச் சுட்டும் வகையில் சாம்பிராணியும், மனிதன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெள்ளைப் போளமும் வழங்கினர்.

மரியாள் ஈன்று புறம் தந்த இயேசுவின் மாட்சியினை வீரமாமுனிவர் தாம் எழுதிய தேம்பாவணியில் ஒரு பாவாக-உயிரோவியமாக வழங்கியுள்ளார்.

''உலகம் மூன்றினும் உவமை நீக்கிய

இவயை மூன்றினும் இழிவுஇல் கன்னியாய்

அலகுஇல் மூன்றினுள் நடுவ மைந்தனை

நிலவு மூன்றினுள் நிறப்ப ஈன்றனள்'' (10.94)

மூவேறு உலகினுக்கும் மாறுபட்ட வகையில், முக்காலமும் கன்னியாக மிளிரும் மரியாள், அளவில்லாத மூவொரு கடவுளின் நடுவராகிய இயேசுவை, சூரிய-சந்திர-விண்மீன்களை விஞ்சும் வகையில் தோன்றும் பெற்றுத் தந்தாள்!

உலகம் சுற்றிய தமிழரான சுத்தானந்த பாரதியார், நேயமாக மாந்தர் வாழ நெறி கொடுத்த இயேசுவைப் போற்றி மகிழ்கிறார்.

''தூய ஞான தேவன் தந்தை பரமன் விட்ட தூதனாய்

துன்பம் மிக்க உலகினுக்கு அன்பு மார்க்க போதனாய்

நேயமாக மாந்தர் வாழ நெறி கொடுத்த ஐயனாம்

நித்தம் அந்த இயேசு நாதன் பக்தி செய்து உய்குலாம்''

இயேசு இயம்பிய நற்செய்தி உலக நாடுகள் இருநூற்று முப்பத்து நான்கிலும் பரவிப் பரிமளித்துப் பயன் தந்து வருகிறது. உண்மையினால்தான் புகழும் வாழ்வும் நிலைபெறும் என்பதை 'ஒளியும் உய்யும் உண்மையால்' என்று தெளிவுபடுத்தியுள்ளனர். 'வாய்மையே வெல்லும்' என்பது பாரத மணித் திருநாட்டின் முத்திரைச் சொல்லாகும்.

இருபதாம் நூற்றாண்டில் இறவாக் காவியமாக இயேசுவின் வாழ்வியலை வழங்கிய கண்ணதாசன், இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகம் வாழ்கிறது என்பதை விளம்பியுள்ளார்.

'தத்துவ ஞானம் வந்து பிறந்தது யூத நிலத்தினிலே' என்று வரலாறு கூறும்போது, 'இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையில்' என்று பாடி முடிக்கிறார்.

'உலகெங்கும் போய்ப் படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' (மாற்கு, 16:16) என்று தம் திருத்தொண்டர் அனைவருக்கும் இயேசு மொழிந்த கட்டளை புவியெங்கும் நீடித்து நிலைபெற்றுள்ளது என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க செய்தியாகும்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் விவிலியத் திருநாள் ஒளியுடன் மிளிர்வது கருதத்தக்கது. உலக மக்களில் நூற்றுக்கு நாற்பதின்மர் இயேசுவின் பிறரன்புமே பத்துக் கட்டளைகளின் பிரதியாகத் திகழ்கின்றன. இயேசு கற்பித்த இறை வேண்டலில், பிறர் செய்த பிழைகளை ஒருவர் பொறுத்தாற்று வதற்கு ஏற்பவே, இறைவனும் அவரை மன்னிப்பார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்புமிக்க செய்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும்: ஜி.கே. வாசன்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகிரியில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

தென்காசியில் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

SCROLL FOR NEXT