கம்பர் 
தமிழ்மணி

கம்பனின் தமிழமுதம் - 36: எந்த வேலையிலும் இப்படி சிலர் உண்டு!

கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான் என்னும் பழமொழிப்படி சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

த.இராமலிங்கம்

'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்னும் பழமொழிப்படி சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கம் வரும்வரை படித்துக் கொண்டிருந்துவிட்டு, தூக்கம் கலைந்ததும், படுக்கையில் அமர்ந்தே படிப்பதைத் தொடர்வார்கள். சிலர், இதற்கு நேர் எதிர். படிப்பதே வேப்பங்காய். கையில் புத்தகம் ஒன்றை எடுத்தாலே, கண்களில் தூக்கம் சொக்கும். எதையாவது காரணம் சொல்லி, படிக்க வேண்டியதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதேபோன்று, "வேலைக்கு அடிமையானவர்' என்கிற சொற்பிரயோகத்தை நீங்கள் அறிவீர்களா? எந்த நேரமும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார்கள். அலுவலகக் கோப்புகளை வீட்டுக்குக் கொண்டுவந்து, படுக்கப் போகும் நேரம்வரை வேலை செய்துகொண்டே இருப்பார்கள். அடுத்தவர்கள் வேலையையும் சேர்த்து செய்துகொண்டிருப்பார்கள். இதற்கு நேர்மாறாக சிலர் இருப்பார்கள். செய்ய வேண்டிய வேலையைக்கூடச் செய்யாமல், ஏதாவது காரணம் சொல்லி

சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருப்பார்கள். சில அலுவலகங்களில், வேலைக்கு வந்த கொஞ்ச நேரத்தில், தேநீர் அருந்தப் போயிருப்பார்கள்; கவனித்திருக்கிறீர்களா? இது உணவு இடைவேளைக்கு முன்னும் இருக்கும்; பின்னும் இருக்கும். எப்படி ஒரு வேலையைச் செய்துமுடிக்கவேண்டும் என்று அடுத்தவருக்கு விளக்கம் சொல்வது பெரிதாக இருக்கும். ஆனால், தங்கள் வேலையை மட்டும் செய்யமாட்டார்கள்.

தூக்க முடியாமல் கோப்புகளை ஒருவர் சுமந்து வருவார். அந்தக் கோப்புகளைத் தொட்டுக் கொண்டே இன்னொருவர் வருவார். 'யானை சுமந்து கொண்டே போனது; நரி மூச்சு வாங்கிக் கொண்டே அதன் கூட போனது'' என்பார்கள். சுமக்கிறவர்கள் சுமந்து கொண்டே இருக்க, சுமப்பவர்களைப் போல நடிப்பவர்கள் அவர்களுடனேயே இருப்பார்கள்.

இந்த நிகழ்கால நடப்புகளை எல்லாம், சிந்தனைகளையெல்லாம் நமக்குத் தரும் வேடிக்கையான காட்சி ஒன்றின் மூலம் கம்பன் காட்டுகிறான்.

இலங்கையில் சீதை சிறைப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியானது. இராம இலக்குவர் உட்பட, வானர வீரர்கள் அனைவரும் பெரும்படையாக இலங்கை நோக்கி வந்தனர். கடலைக் கடந்தால்தான் இலங்கைக்குள் நுழைய முடியும். வருணனின் ஆலோசனைப்படி, கடல் மீது சேதுப் பாலம் கட்டலாம் என்று முடிவாகியது.

வானரங்கள் பெரும் மலையைக் கொண்டு வருவதென்றும், அவற்றைக்கொண்டு நளன் பாலம் கட்டுவதென்றும் திட்டம். வானரங்கள் சிறியதும் பெரியதுமான மலைகளைக் கொண்டுவந்து கடலில் வீசியபடி இருந்தன. தனது ஆற்றலால், ஒரு மலையும் இலக்கு தவறிவிடாமல் தனது கைகளில் வாங்கிக் கொண்டான் நளன். "வருபவர் எவராக இருந்தாலும், அவர்களைத் தவறாமல் வரவேற்று உபசரிக்கும் திருவெண்ணெய்நல்லூர் சடையன் செயல்போல் அது இருந்தது' என்று தனது நன்றியுணர்ச்சியைப் பதிவு செய்த கம்பன், மலைகளைக் கொண்டு வந்த வானரங்களின் செயல்களைக் காட்சிப்படுத்துகிறான்.

வானரங்கள் சில, வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டன. அதன்படி, சில வானரங்கள் மலைகளைப் பெயர்த்து எடுக்கும் வேலையை மட்டும் செய்தன. அப்படிப் பெயர்த்து எடுத்த மலைகளை இழுத்து ஓரிடத்தில் குவிக்கும் வேலையைச் சில வானரங்கள் செய்தன.

சில, குவிக்கப்பட்டிருந்த மலைகளைத் தங்கள் தலைகளில் தூக்கிச் சென்றன. கடுமையாக உழைத்த வானரங்கள் சில இரு கைகளில் ஒரு மலையைத் தூக்கிக்கொண்டும், இரு கால்களுக்கிடையில் ஒரு மலையை உருட்டிக்கொண்டும், வாலில் ஒரு மலையைக் கட்டி இழுத்துக்கொண்டும் சென்றன.

நளனுக்குத் துணையாக நின்ற சில வானரங்கள், மலைகளை வாங்கிக் கடலில் இட்டு நிரப்பிக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு மலையும் கடலுக்குள் இப்படி இறங்கும்போதெல்லாம், சில வானரங்கள் வேலையில் கலந்து கொள்ளாமல் மகிழ்ச்சிக் குரல் மட்டும் எழுப்பிக் கத்திக்கொண்டிருந்தன. இன்னும் சில வானரங்கள், எந்த வேலையும் செய்யாமல் ஆட்டமும் பாட்டுமாய் குதித்துக்கொண்டிருந்தன. இந்த இரு பாடல்களில் கம்பன் இந்தக் கருத்துகளைச் சொல்கிறான்.

காலிடை ஒரு மலை உருட்டி, கைகளின்

மேலிடை மலையினை வாங்கி,

விண் தொடும்

சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய,

வாலிடை, ஒரு மலை ஈர்த்து, வந்தவால்

பேர்த்தன மலை சில; பேர்க்கப்

பேர்க்க, நின்று

ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;

தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று

ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின

காப்பியத்தின் கதைப்போக்கின் இடையில், கம்பன் வைக்கும் சில காட்சிகள், இன்றைய சமூக நடைமுறையையும் நமக்கு நினைவுபடுத்தவே செய்கின்றன! "வேலை செய்பவர்கள் எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்; வேலை செய்வதுபோல் காட்டிக்கொள்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்' என்பதனை இந்த வேடிக்கைக் காட்சியில் பதிவு செய்கிறான் கம்பன்!

இன்றைய நிகழ்வுகள் அன்றைக்கும் இருந்திருப்பதையே இது காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

SCROLL FOR NEXT