முகப்பு
தமிழ்மணி

பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

தமிழறிஞரும், எழுத்தாளரும், இலக்கிய, ஆன்மிக சொற்பொழிவாளருமான வாகீச கலாநிதி கிருஷ்ணராயபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்ற கி.வா.ஜ. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் தலைமை மாணாக்கர்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:28 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:22 PM

தமிழறிஞரும், எழுத்தாளரும், இலக்கிய, ஆன்மிக சொற்பொழிவாளருமான வாகீச கலாநிதி கிருஷ்ணராயபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்ற கி.வா.ஜ. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் தலைமை மாணாக்கர். 'கலைமகள்' இலக்கிய இதழின்ஆசிரியராகப் பல புதிய படைப்புகளையும், பல எழுத்தாளர்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

இவரது 'வீரர் உலகம்' என்னும் இலக்கிய விமர்சனப் படைப்புக்கு சாகித்திய அகாதெமி 1967-ஆம் ஆண்டு விருது வழங்கி சிறப்பித்தது.

கி.வா. ஜகந்நாதன் தன் 14-ஆவது வயது முதல் செய்யுள்கள் இயற்றத் தொடங்கினார். சிதம்பரம் நடராஜர் குறித்து 'போற்றிப் பத்து' என்னும் செய்யுள் கோவை அவருடைய முதல் படைப்பு. 'ஜோதி' என்னும் புனைபெயரில்தான் கவிதைகள் எழுதி வந்தார். நாமக்கல் கவிஞர் மரபு என

Advertisement

அடையாளப்படுத்தப்படும் மரபுக் கவிஞர்

வரிசையில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

மரபான சந்தமும், யாப்பும் கொண்ட கவிதைகளை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கவிதை எழுதுவது எப்படி? என்பதைப் புரிய வைப்பதற்காக 'கவி பாடலாம்' என்ற நூலையும் எழுதியவர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'சுதந்திரதேவி திருப்பள்ளியெழுச்சி', 'சுதந்திரதேவி திருக்கோயில்' போன்ற கவிதைகளை

எழுதியதோடு மட்டுமல்லாது, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தும் சிறுகதை, நாவல்களையும் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே 'கலைமகளில்' பிரசாரம் செய்த பெருமைக்குரியவர்.

'தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதையரின் ஆய்வுகளுக்கும் இவர் பெரிதும் உதவியாக இருந்தார். உ.வே.சா. நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் உடனிருந்து அவரைக் கவனித்துக் கொண்டார். உ.வே. சாமிநாதையர் அவருடைய 'தக்கயாகப் பரணி' பதிப்பின் முன்னுரையில் 'இந்நூலை பரிசோதித்துப் பதிப்பித்து வரும் நாட்களில் உடனிருந்து எழுதுதல் -ஆராய்தல்- ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளை அன்போடு செய்தவர் மோகனூர் தமிழ்ப்பண்டிதர் கி.வா. ஜகந்நாதையர் ஆவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உ.வே. சாமிநாதையர் எழுதிய தன்வரலாற்று நூலான 'என் சரித்திரம்', மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் ஆகியவற்றை எழுதவும், தொகுக்கவும் கி.வா. ஜகந்நாதன் பெரிதும் உதவினார். தமிழ்த் தாத்தா வைத்திருந்த குறிப்புகளை ஆய்வு செய்து உ.வே. சாமிநாதையர் குறித்து 'என் ஆசிரியப்

பிரான்' என்னும் நூலை கி.வா. ஜகந்நாதன் எழுதினார்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மியான்மர், ஐரோப்பா போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் அவர் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட பெருமையும் அவருக்கு உண்டு. மேடைப் பேச்சிலும் சரி, உரையாடலிலும் சரி, சிலேடை நயம் இழையோடும்.

தமிழில் காளமேகப் புலவருக்குப் பிறகு சிலேடை நயத்தை அதிகம் பயன்படுத்தியவர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையல்ல! அதனால் கி.வா.ஜ.வை 'உரைநடைக் காளமேகம்' என்று சொல்வதுண்டு. அவரது சிலேடைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகவும் வந்துள்ளன.

ஒருமுறை இவரைப் பார்ப்பதற்கு வியாபாரம் செய்யும் வைணவக் கடைக்காரர் ஒருவர் வந்தார். 'புதிய கடை ஒன்றைத் திறக்கப் போகிறேன். அந்தக் கடைத் திறப்பு விழா பூஜையில் பிள்ளையார் படத்தை வைக்கலாமா? அல்லது எங்கள் குடும்ப வழக்கப்படி வெங்கடாசலபதி படத்தை வைக்கலாமா?' என்று கேட்டார். 'எந்தப் படத்தை வேண்டுமானாலும் வையுங்கள். ஆனால், கலப்படம் மட்டும் வேண்டாம்' என்று இவர் சொன்னபோது இவருடைய சிலேடை உரையைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்களாம்!

நாடோடிப் பாடல்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டுக் குறிப்பெடுத்தார். அவற்றைத் தொகுத்து, நூலாக வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல், 22,000-க்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். மண் சார்ந்த கிராமிய இலக்கியங்கள் மீது இவருக்குத் தனி ஈடுபாடு உண்டு!

தமிழ் நாட்டுப்புறவியலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தியா முழுவதும் நாட்டுப்புறவியல்களைச் சேகரித்த ஆய்வாளரான தேவேந்திர சத்யார்த்தியைச் சந்தித்து உரையாடி தமிழ் மொழியின் வளத்தை அவருக்கு எடுத்துரைத்தார்.

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரியபுராணம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரைகளும், அறிமுகங்களும் எழுதினார். 25 வயது இளைஞராக இருந்தபோது, சேந்தமங்கலம் சுயம்பிரகாச சுவாமிகள் வழியாக 'ட்ரோவர் துரை' என்னும் பிரிட்ஷாருக்கு தமிழ்ப் பாடமும்- திருக்குறளும் கற்பித்தார். ட்ரோவர் துரை முதல் மாத ஊதியமாக 15 ரூபாய் கொடுத்தார்.

திருக்குறள் கற்பித்ததின் மூலம்தான் இவருக்கு முதல் ஊதியமே கிடைத்தது!

அந்தத் திருக்குறள்தான் பின்னாளில் இவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. கோவை ராமகிருஷ்ண மிஷன் சார்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் ஆராய்ச்சி உரையை அவிநாசிலிங்கம் செட்டியார் அறிவுறுத்தலின் பேரில் இவர் எழுதினார். திருக்குறள் உரைகள் அனைத்தையும் பாடபேதம் பார்த்து, பிழைநீக்கி 'திருக்குறள் ஆராய்ச்சி உரை' என்னும் நூலைப் பதிப்பித்தார். திருக்குறள் ஆய்வு உரைகளில் மிகச் சிறந்த உரையாக இது கருதப்படுகிறது.

கி.வா.ஜ.வின் 'வாழும் தமிழ்' என்னும் நூல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் குறித்து தினமணியில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இதில் சேனாவரையர் உரையையும், சில இடங்களில் நச்சினார்க்கினியர் உரையையும் கி.வா.ஜ. விரிவாக விளக்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் 32 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விளிமரபு குறித்தும் இடைச்சொல், உரிச்சொல் குறித்து ஒவ்வொரு கட்டுரையிலும், எச்சவியலில் இடம்பெறும் சொல் குறித்த சில நூற்பாக்களையும் இந்த நூலில் சுவைபட கி.வா.ஜ. விளக்கிக் கூறியுள்ளார்.

தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்த நூலுக்கு 'வாழும் தமிழ்' என்று தாம் பெயர் வைத்தமைக்கான காரணத்தை 'வாழ்க்கை நிலையை மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிகளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புகளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆகவே, தொல்காப்பியம் என்னும் இலக்கணம் அன்றும், இன்றும், வாழும் தமிழைப் பற்றிச் சொல்கிறது; இலக்கியத்திலும்-உலகியலிலும் வாழும் தமிழைப் பற்றிப் பேசுகிறது. இந்தக் கருத்துடனே 'வாழும் தமிழ்' என்ற பெயரை இந்தப் புத்தகத்துக்கு வைத்தேன்' என்று கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள கி.வா.ஜ. வாகீச கலாநிதி, செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார். திறனாய்வாளர், உரையாசிரியர், கவிஞர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவர்.

ஏப்ரல் 11 கி.வா.ஜ.வின் 120-ஆவது பிறந்த நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.