FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஒழுக்கமும், நல்ல எண்ணங்களும் தேவை!

'இளைய தலைமுறையினர் பேச்சாளர்களாகிவிட்டால் மட்டும் போதாது. உலகம் உற்றுநோக்குகிறது... ஒழுக்கத்தையும், நல்ல எண்ணங்களையும் போற்றி வளருங்கள்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 4:06 am IST
பகிர்:

'இளைய தலைமுறையினர் பேச்சாளர்களாகிவிட்டால் மட்டும் போதாது. உலகம் உற்றுநோக்குகிறது... ஒழுக்கத்தையும், நல்ல எண்ணங்களையும் போற்றி வளருங்கள். இதுவே வளரும் இளம் பேச்சாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நான்அறிவுறுத்துவது' என்கிறார் புலவர் இரெ.சண்முகவடிவேலு.

தமிழ் இலக்கிய உலகில் பேச்சாளர்களில்  வயதிலும் அனுபவத்திலும்  மூத்தவர் புலவர் இரெ. சண்முகவடிவேலு. எண்பத்து எட்டு வயதான இவர், திருவாரூர்த் தமிழ்ச்  சங்கத்தின் தலைவராக இலக்கியப் பணியாற்று

கிறார். இதோடு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்பொழிவு என நாடெங்கிலும் இன்றும் பேசிவருகிறார்.

Advertisement

Advertisement

முல்லா, பீர்பால், தெனாலிராமன் கதைகளோடு, தானே எழுதிய கதைகளை இடத்துக்குத் தகுந்தவாறு இடையிடையே சுவைபடச்  சொல்லி, கேட்பவர்  கூட்டத்தை தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர். புராணங்கள், இலக்கியங்களில் உள்ள சிக்கலான பல கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் லாகவமாக உதாரணம் சொல்லி, வாதத்தில் வெல்லும் திறன் பெற்ற இவருடைய நகைச்சுவைப் பேச்சுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடன் ஒரு சந்திப்பு:

பேச்சில் ஆர்வம் ஏற்படத் தூண்டுதலான சம்பவம் என்ன?

நான் நாகூரில் பிறந்தேன். பள்ளி இலக்கிய மன்ற விழாவில் அண்ணா 'தோழமை' என்ற தலைப்பில் பேசினார். 'தோழமை' என்ற சொல்லிலேயே 'தோழமை இருக்கிறது' என்று தொடங்கினார். 'தோ' என்ற முதலெழுத்து வல்லின எழுத்தாகவும், 'ழ' என்ற இரண்டாம் எழுத்து இடையின எழுத்தாகவும், 'மை' என்பது மெல்லின எழுத்தாகவும் உள்ளன.

இவ்வாறு வல்லின, இடையின, மெல்லின எழுத்துகள் ஒற்றுமையாகக் கூடித் தோழமை உருவாகியிருக்கிறது. நாமும் எல்லோரும் கூடித் தோழமையைக் காப்போம் என்றார். கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் நட்பை அண்ணா விளக்கினார். அந்தச் சொற்பொழிவு ஆழமாகப் பதிந்தது. அவர் பேசிய அந்த மொழியழகும், அடுக்கடுக்காகச் சொற்களின் சிறப்பும், செய்திகளை வரிசையாகச் சொல்லிய பாங்கும் என் நெஞ்சில் நிறைந்தது. இதுவே சொற்பொழிவாளராக நானும் வர வேண்டும் என்ற குறிக்கோளை எனக்குள் உதித்தது.

பேச்சாளரானது எப்படி?

தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் 'ஐ.நா. சபை' என்ற தலைப்பில் பேசுமாறு தலைமை ஆசிரியர் வற்புறுத்தினார். 'பழக்கமில்லை' என்று கூறி மறுத்தேன். 'பழகுங்கள்' என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல்தான் பேசினேன். கேட்டவர்கள் என்னைப் புகழ்ந்தனர். விழாவுக்குத் தலைமை வகித்த கல்வி அலுவலரோ, பல இடங்களிலும் பெருமையாகச் சொன்னார். பல ஆசிரியர் சங்கத்தினர் என்னைப் பேச அழைத்தனர். பேச்சாளரானேன்.

பேச்சுக் கலை குறித்து..?

'புரிந்துகொள்வதற்கு கடினமானவற்றையும், பிறர் எளிதில் விளங்கிக் கொள்ளும்படி எளிமையாகச் சொல்லும் ஆற்றலும், துணிவும், சோர்வில்லாத் தன்மையும் கொண்டவரை எளிதில் யாராலும் வெற்றிக்கொள்ள முடியாது' என்பார் திருவள்ளுவர்.

அதிலும் சொல்ல வேண்டியவற்றை நகைச்சுவையோடு, நல்ல உவமை கலந்து, கேட்பவர் மனம் பாதிக்காமல், கேட்பவரின் கோபத்தைத் தூண்டிவிடாமல் லாவகமாகச் சொல்லி சாதிப்பது என்பது யாருக்கும் விரைவில் வராத கலை.

அப்படிப்பட்ட பேச்சுக் கலையைப் பெற்றவர்கள், கேட்பார் இனிக்கப் பேசினால் காலநேரம் மறந்து அமர்ந்து செவிமடுக்கும் இவ்வுலகம். பண்டிகை நாள்களோ, திருவிழாக்களோ, இலக்கிய நிகழ்வுகளோ எதுவாயினும் எழுத்தைவிடப் பேச்சுக்கு சுவாரசியம் அதிகம்தான்.

பேச்சாளர்களை அழைத்துப் பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள், வழக்காடு மன்றங்கள் என்று விவாத நிகழ்ச்சிகள் நடத்துவது தமிழர்களின் வாடிக்கையாகும். இவற்றில் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தும் புலமைப் பெற்றவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. பேச்சு சாதுர்யம் கொண்ட எந்தத் துறையினரையும் அழைக்கின்றனர்.

ஒருகாலத்தில் கருத்துக்கும் வாதத் திறமைக்கும் முன்னுரிமை அளித்த ரசிகர்கள் தற்போது தங்களை மறந்து வாய்விட்டுச் சிரிக்கவைப்போருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கருத்தோடு, சிரிப்பையும் குழைத்துத் தருபவர்கள் சிறந்தவர்களாகின்றனர்.

மேடைகளில் நெகிழ்ச்சியான சம்பவம் உண்டா?

நாடறிந்த நல்ல பேச்சாளரான பேராசிரியர் பா. நமசிவாயத்தின் பள்ளித் தோழர் புலவர் பழனிகிருஷ்ணன். சிறந்த சொற்பொழிவாளரான பழனி கிருஷ்ணனின் குரல் இனிமையாக இருக்கும். திருமுறைப் பாடல்களை இனிமையாகப் பாடுவார். இருவரும் திருவாரூர் பெரிய கோயிலில் பேசுவதற்காக வந்திருந்தனர்.

சொற்பொழிவு மேடையில் புலவர் பழனிகிருஷ்ணன் இறைவணக்கமாக, தேவாரத்தை உருக்கமாகப் பாட, கேட்டவர்கள் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினர். அவர் பாடி முடியும் வரை பேராசிரியர் நமசிவாயம் மெய்சிலிர்த்துக் கேட்டார்.

சம வயது உடையவர் என்பதையெல்லாம் மறந்து, பழனிகிருஷ்ணனின் காலில் விழுந்து அவரை நமசிவாயம் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார். இதனைக் கண்டோர் அதிசயித்து எழுந்து நின்று கைதட்டினர். இதுவே மேடை நிகழ்வுகளில் என்னை நெகிழவைத்தது.

தங்கள் பேச்சால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன?

என் பேச்சால் சமுதாய மாற்றம் உண்டாகும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. 'எல்லாரும்தான் படிச்சீங்க? என்ன பண்ணிக் கிழிச்சீங்க?' என்றார் பட்டுக்கோட்டையார்.

என்னால் முடிந்தது, நகைச்சுவைப் பேச்சை விரும்பிக் கேட்குமாறு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்!

இலக்கியப் பணிகள் குறித்து..?

திருவாரூர் வா.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள  இலக்கிய, மக்கள் மன்றங்களில் உரையாற்றியுள்ளேன். இதழ்களில்  கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

 'வாழ்க்கை  ரொம்ப சுலபமுங்க', 'தமிழ் வளர்த்த சான்றோர்', 'நானிலம் போற்றும் நால்வர்', 'வாய்விட்டுச்  சிரிக்கிறார் வள்ளுவர்', 'திருக்குறள் கதை அமுதம்', 'செவிநுகர் சுவைகள்', 'அண்ணாவின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள்', 'பெரிய புராணத்தில் பெண்ணின் பெருமை', 'இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு  இளங்கோவடிகள்', 'குறுந்தொகை நலம்' உள்ளிட்ட நூல்களை எளிய நடையில் குறுங்கதைகளோடு  எழுதியிருக்கிறேன்.

எனது இலக்கியப் பணிகளுக்காக, தமிழ்நாடு அரசின் 'தமிழ்ச் செம்மல்', 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' களையும், பல்வேறு அமைப்புகள் வழங்கிய 'நல்லாசான்', 'முத்தமிழ் முரசு', 'நகைச்சுவைச் சித்தர்', 'நகைச்சுவை இமயம்', 'இயல் செல்வம்' உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளேன். சாலமன் பாப்பையா, பேராசிரியர் பா.நமசிவாயம், சோ. சத்தியசீலன், அறிவொளி, இரா. செல்வகணபதி, இராஜாராம், சுகிசிவம் உள்ளிட்டோர் திருவாரூரில் ஒன்றுகூடி விழா நடத்தி, எனக்கு 'நகைச்சுவைத் தென்றல்' என்று பட்டம் வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments