FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!

தமிழகத்தின் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 5:00 am IST
பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை - பிரதிப் படம்
பகிர்:

குறைந்த தொகுப்பூதியத்தில் 16 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தமிழகத்தின் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு, தவெக அரசின் முதல் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக் கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்காக கடந்த 2011-12 கல்வியாண்டில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

தொடக்கத்தில் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், பல கட்டங்களாக உயர்த்தப்பட்டு, தற்போது மாதம் ரூ.15,000 வழங்கப்படுகிறது. இருப்பினும், "பணி நிரந்தரமே எங்களின் ஒரே தீர்வு" என்ற கோரிக்கையுடன் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

பணியின் பெயர் பகுதிநேர ஆசிரியர் என்றாலும், பள்ளிகளில் நாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், வருகைப் பதிவு, உதவித் தொகை தொடர்பான பணிகள், அரசுத் திட்டங்களின் இணையவழிப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணிகளையும் இவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம் இல்லாததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ராஜிநாமா, ஓய்வு, இயற்கை மரணம் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 5,000 பணியிடங்கள் காலியாகியுள்ளன. தற்போது 11,773 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் உடற்கல்வி 3,843, ஓவியம் 3,721, கணினி அறிவியல் 2,033, தையல் 1,584, இசை 329, வாழ்க்கைக் கல்வி 192, கட்டடக் கலை 49, தோட்டக் கலை 22 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள்; மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அதிகம் உள்ளனர்.

ஒரே பாடங்களை நடத்தினாலும், நிரந்தர சிறப்பாசிரியர்களுக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய வேறுபாடு நீடிக்கிறது. நிரந்தர ஆசிரியர்கள் அரசு சலுகைகளுடன் மாதம் சுமார் ரூ.1 லட்சம் வரை பெறும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் எந்தவித சலுகைகளும் இன்றி ரூ.15,000 மட்டுமே பெறுகின்றனர்.

தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கூறுகையில், "தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கட்டுப்படியான ஊதியம், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி, மகப்பேறு விடுப்பு, பணிக்கொடை உள்ளிட்ட நலன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். தற்போது வழங்கப்படும் ரூ.15,000-இல் ரூ.10,000 ஊதியமாகவும், ரூ.5,000 உதவித்தொகையாகவும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. மேலும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும்போதும், 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை" என்றார்.

தேர்தல் காலங்களில் பணி நிரந்தரம் மற்றும் "சம வேலைக்கு சம ஊதியம்' என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றை புதிய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையிலேயே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தும் அறிவிப்பையும் அதற்கான அரசாணையையும் வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறப்பு உதவித் தொகை

கடந்த ஜனவரியில் நடைபெற்ற தொடர் போராட்டத்துக்குப் பிறகு, பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், மே மாதத்துக்கான சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த மே மாதத்துக்கான ரூ.10,000 சிறப்பு உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments