கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
தலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
தலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
தலைவியைச் சந்திக்க இயலாத சூழலில் பலவாறு புலம்புகிறான். கடமைகளிலிருந்து தலைவனின் கவனம் சிதறுகிறது. உறவுஇ நட்பெனப் பலரும் தலைவனின் நிலையைக் கண்டு கடிந்துரைத்தனர். தன்னுடைய ஆற்றாமை எப்படிப்பட்டது என்பதை உவமை காட்டி உணர்த்த முற்படுகிறான்.
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
Advertisement
Advertisement
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை
மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்று
கொளற் கரிதே.
- (குறுந். 58)
தலைவியுடன் இருக்க வாய்ப்பில்லை. கடமையையையும் செய்ய முடியவில்லை; இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் தலைவனின் மனம் தடுமாறுகிறது. ஆற்றாமை கால்கோளிட்டது. ஆற்றாமைக்கான காரணிகளுள் பிரிவு முக்கியமான ஒன்றாகிறது. கடமையைச் செய்வதற்கான செயல்பாடுகளை செய்யவொட்டாமல் செய்கிறது.
பகலவனின் ஆற்றல் உச்சமடையும் வெயில் நேரத்தில் வெம்மையான பாறையிடத்தில் இருக்கும் வெண்ணெய்யைப் பாதுகாக்க கைகளைக் கொண்டு பாதுகாக்கலாமென்றால் கைகளில்லை. ஊமையாய் இருப்பதால் யாரிடமாவது தெரிவித்து காக்கச் செய்யவும் வழிவகை இல்லை. உருகுவதைப் பார்த்துத் துயரப்பட கண்கள் மட்டும் உண்டு; வெண்ணெய் உருகுவதுபோல் மாளாத காதல் தீ பற்றி உருக்குகிறது. அது பொறுத்துக் கொள்வதற்கு அரிதாக இருக்கிறது. இதுவே ஆற்றாமையாய் புலப்படுகிறது.
ஒருவரின் துன்பம் அதை அனுபவிப்பவரைத் தவிர மற்றவர்களால் உய்த்துணர முடியாது. சில நேரங்களில் கைகளிலிருந்தும் பேசுவதற்கான ஆற்றல் இருந்தும் செயல்பட முடியாத நிலையைப் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. இப்பாடல் தலைவனாகிய ஆண் மனநிலையில் வெள்ளிவீதியார் என்ற பெண்புலவரால் படைக்கப்பட்டது. பெண்ணாக இருந்து வெளிப்படுத்த முடியாத உணர்வைப் புலவர், ஆணைக் கருத்தாவாகக் கொண்டு உணர்த்தியுள்ளார் எனக் கொள்ளவும் இடமுண்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.