தெய்வ மணம் கமழும் கூவம்
சைவ வழிபாட்டில் 64 சிவ வடிவங்களை (மகேஸ்வர வடிவங்கள்) சிறப்பித்துக் கூறுவர். அவற்றுள் ஒன்றுதான் திரிபுராந்தக மூர்த்தி' வடிவம். சிவபெருமானின் இந்த வடிவத்துடன் தொடர்புடைய புராண வரலாற்றுப் பின்னணியைப் பார
சைவ வழிபாட்டில் 64 சிவ வடிவங்களை (மகேஸ்வர வடிவங்கள்) சிறப்பித்துக் கூறுவர். அவற்றுள் ஒன்றுதான் திரிபுராந்தக மூர்த்தி' வடிவம். சிவபெருமானின் இந்த வடிவத்துடன் தொடர்புடைய புராண வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.
தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், ""நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்'' என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.
வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர். உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். "தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது' என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி.
அதே நேரம் சிவபரம்பொருள் திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு திருமூலர் தரும் விளக்கம் சிந்திக்கத் தக்கது. ""அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரோ'' என்கிறது திருமந்திரம்.
இதன் பொருள், "கங்கையை சடையில் அணிந்த இறைவன் ஆருயிர்களைச் செவ்வியுறச் செய்து ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான்' என்பதாம். இறைவனது இயக்கத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளுமாறு அமைந்துள்ளது இந்த புராண வரலாறு.
இறைவனின் இந்தத் திருவிளையாடலை சம்பந்தப்படுத்தி இரண்டு திருத்தலங்களை கூறுவர். ஒன்று அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றான திருவதிகை. மற்றொன்று திருவிற்கோலம் என்னும் கூவம். (திருவள்ளூரிலிருந்து தென் மேற்காக 17 கி.மீ. தூரத்தில் உள்ளது கூவம் என்னும் ஊர்).
திரிபுரம் எரித்த காலத்தில் இறைவன் வில்லேந்திய திருக்கோலத்தில் வீற்றிருந்ததையொட்டி ஊரின் பெயர், "திருவிற்கோலம்' ஆயிற்று என்பது வரலாறு. கூவம் என்பது ஊரின் பெயர் (கூவம் நதியின் தென்புறத்தில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலயம்).
இவ்வூர் "கூபரக்னபுரி' எனவும் சொல்லப்படுவதுண்டு. சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரின் மீது ஏறிப் புறப்பட்டபோது தேரின் கூவரமாகிய ஏர்க்கால் முசிந்தமையால் இத்தலம் "கூவரம்' என வழங்கப்பட்டு, பின் "கூவம்' என பெயர் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு.
தொண்டை நாட்டு தல வரிசையில், திருஞான சம்பந்தர் பாடல் பெற்று திகழ்கிறது திருவிற்கோலம். இத்தலத் திருப்பதிகத்தில் சம்பந்தப் பெருமான் இறைவன் திரிபுரமெரித்த வரலாற்றைப் பல பாடல்களிலும் குறித்தருளுவதைக் காணலாம்.
மூலவர் தீண்டாத் திருமேனி! மணல் லிங்கம்! அதிக மழை, வெள்ளம் பெருகும் காலங்களில் சுவாமியின் திருமேனியின் மீது முன்னெச்சரிக்கையாக வெண்மை படரும். போர் நிகழப் போவதாயின் செம்மை படரும். இவ்வற்புத நிகழ்வை, சம்பந்தப் பெருமானும்,
""ஐயன் நல்லதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்
பையரவு அல்குளாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!'' என்று போற்றிப் பாடுகிறார்.
ஆலயத் திருக்குளம் "கூபாக்கினி தீர்த்தம்' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. குளத்தில் இன்றளவும் தவளைகள் வாசம் செய்வது இல்லை. வில்வமரம் தலமரமாக உள்ளது. உருத்திராக்கமம் ஆலயத்தின் எதிரில் உள்ளது.
இங்குள்ள பைரவர் சந்நிதியில் நாய் வாகனம் இல்லை. மூலவர் லிங்கத்திற்கு நித்யவழிபாட்டில் ஒவ்வொரு காலங்களிலும் அபிஷேகம் செய்ய வரும்போது ஒவ்வொரு முறையும் அர்ச்சகர் ஆலயக் குளத்தில் நீராடி பயபக்தியுடன் வந்து, லிங்கத் திருமேனியின் பாணப் பகுதியைத் தொடாமல் பூஜை செய்து வருவது இன்றளவும் நடந்து வருகிறது.
திருவாலங்காட்டில் சிவபெருமானோடு தர்க்கம் செய்து நடனத்தில் தோற்ற காளி, இத்தலத்தில் சிவபெருமானின் ரக்ஷ நடனம் (காத்தல் நடனம்) கண்டு களித்து, "தர்க்க மாதா' என்ற பெயருடன் கோயில் கொண்டு விளங்குகிறாள். அவ்வன்னை இத்தலத்தின் காவல் தெய்வமாகப் பீடைகள் அகற்றும் பிடாரியாக விளங்குகிறாள்.
ஆலய உள் பிரகாரங்களில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதியிலிருந்து ஆரம்பித்து பல்வேறு மூர்த்தங்களை தரிசனம் செய்யலாம். இத்தலத்திற்குரிய தல புராணம், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் 350 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன் கூவத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள "சத்தரைத்தோப்பு' என்ற இடத்திலிருந்து கூவம் நதி உற்பத்தியாகி சென்னை வரை வந்து மக்களுக்கு பயன்பட்டது என்பது ருசியான தகவல். மேலும் ஆலய அபிஷேகத்திற்கான நீரும், பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் கொண்டு வரப்படுவது சிறப்பு அம்சம்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட கூவம் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத அருள்மிகு திரிபுராந்தக சுவாமி திருக்கோயிலில், வருடாந்திர சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 18 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கியமான உற்சவ தினங்கள்: ஏப்ரல் 22- பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவை, ஏப்ரல் 24 திருத்தேர், ஏப்ரல் 27- நடராஜர் வெள்ளை சாத்துப்படி வள்ளுவன் காட்சி.
சென்னையிலிருந்தும், பூவிருந்தவல்லியிலிருந்தும் கூவம் செல்ல பேருந்து வசதி உள்ளது. பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற வேண்டுகின்றோம். மேலும் தகவல்கள் பெற, ஆலயச் செயல் அலுவலர் எஸ். லட்சுமிகாந்தனை தொடர்பு கொள்ளலாம். (செல்-9444497004)