முகப்பு
வெள்ளிமணி

பங்குனியில் பொங்கும் மகிழ்ச்சி!

சைவ சமய வழிபாடுகளிலும், வைணவ சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரத் திருநாள் (இவ்வாண்டு மார்ச் 29) முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு தெய்வீகத் திருமணங்கள் இந்நாளில் நடந்ததாகப் புராணம் இயம்புகிறது. முக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:13 PM
பகிர்:

சைவ சமய வழிபாடுகளிலும், வைணவ சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரத் திருநாள் (இவ்வாண்டு மார்ச் 29) முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு தெய்வீகத் திருமணங்கள் இந்நாளில் நடந்ததாகப் புராணம் இயம்புகிறது. முக்கியமாக பரமேஸ்வரன்-பார்வதி, ராமர்-சீதை, முருகப் பெருமான்-வள்ளி கல்யாணங்கள் இத்திருநாளில்தான் நடைபெற்றதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.  ஹரிஹர அம்சமான ஐயப்பன் அவதரித்த திருநாளும் இதுவே. இந்த பங்குனி உத்திரத் திருநாள் பல்வேறு ஆலயங்களிலும், சமய நிலையங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வைணவர்களால் பெரிய கோயில் என்று சிறப்பித்து அழைக்கும் திருவரங்கத்தில் வருடத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் உத்சவங்கள் நடைபெற்று வருவதை இன்றும் கண்குளிர, மனங்குளிர சேவிக்கலாம்.

பங்குனியில் நடைபெறும் உத்சவத்தில் 9வது திருநாளில் (பங்குனி உத்திரம்) பெருமாள் தன் பிரதான தேவியாரான ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண புறப்பட்டு வருவார். அதற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஸ்ரீரங்கநாதன், சோழநங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து வந்த விவரத்தை அறிந்து, தன்னையல்லாமல் வேறொருவரைத் தன்னருளுக்குப் பாத்திரமாக்கிக் கொண்டதைக் காணப் பொறாமல், "பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது' எனத் தாயார் தடை செய்வாள். இந்தப் பிணக்கை நம்மாழ்வார் இருந்து தீர்த்து வைக்கிறார். தன் தவற்றைப் பெருமாள் ஒப்புக் கொள்ள, பெருமாளை நாச்சியார் ஏற்றுக் கொள்கிறார். பிறகு பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாணக் கோலமாக அன்பே வடிவமாக எழுந்தருளி, "சேர்த்தி' என்னும் சேவையில் காட்சி தருவார்கள்.

இந்த உத்சவம் "மட்டையடி உத்சவம்' என்ற பெயரில் ஆலயத்தில் உள்ள ஐந்தாவது திருச்சுற்று பிரகாரத்தில் உள்ள பங்குனி உத்திர மண்டபத்தில்  நடைபெறும். இந்த பங்குனி உத்திர மண்டபமே சரணாகதி தத்துவம் வெளிப்படும் இடமாக அமைகிறது.

ஆம், உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில்தான் வடமொழியில் உரைநடையாக உள்ள "கத்ய த்ரய'த்தை அருளிச் செய்தார். பிராட்டியாரிடமும், பெருமாளிடமும் முழுவதுமாக சரணாகதி அடைவதை உணர்த்தும் ஒரு விண்ணப்பமாக இதனைப் பாராயணம் செய்வது மரபு.

இந்த ஆனந்தம் ஒருபுறமிருக்க, பார்வதி-பரமேஸ்வரரின் திருமண வைபவத்தை மகாகவி காளிதாஸரின் "குமார சம்பவம் காவியம்' மற்றோர் ஆனந்தமயமாக அடியார்களுக்குக் காட்டுகிறது. காளிதாஸ் தன் குமார சம்பவத்தில் தெய்வத் தன்மையின் முழுமையும் பெற்றுள்ள சிவபிரானைக் காவியத் தலைவராகவும், பார்வதியைக் காவியத் தலைவியாகவும் அமைத்துள்ளார்.

இமயமலையில், சிவபெருமானின் திருக்கரம் பற்றும் பேறு பெறத் தவம் செய்கிறாள் உமையன்னை. மஹாதேவர், அன்னையின் தவத்தை மெச்சுகிறார்!  தம் சார்பில் "சப்த முனிவர்களை' அனுப்பி, ஹிமவானிடம் பெண் கேட்கிறார். ஹிமவானின் சம்மதம் பெற்ற பின், பார்வதியை மணந்து கொள்ள சிவபெருமான் மாப்பிள்ளை கோலத்தில் வருகின்றார். அந்த அழகைக் கண்ணுற்ற பெண்கள், ""சிவபெருமான் கோபத்தினால் மன்மதனுடைய உடலை எரிக்கவில்லை; மன்மதன் தன்னைவிட அழகுவாய்ந்த சிவபிரானைக் கண்டவுடன் வெட்கமுற்றான்; "தான் இனி உயிருடன் வாழ்தல் கூடாது' எனக்கருதி யோக முறையினால் உடலை சாம்பலாக்கிக் கொண்டான் போலும்'' என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் என்று கவி காளிதாசன் பாடுகின்றார்.

இதைவிட சிவபெருமானின் சுந்தர ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகள் வேண்டுமா?

சிவ-பார்வதி கல்யாணம், பல்வேறு சிவாலயங்களில் வருடாந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பங்குனி உத்திர தினத்தன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை தங்கசாலைத் தெருவில் உள்ள சைவ சமய பக்த ஜன சபை வளாகத்தில் (கந்த கோட்டம் அருகில்) மார்ச் 29ம் தேதியன்று மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க, சபையின் செயலரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: சரவணன், 044-25354490)

பங்குனி உத்திரத் தினத்தன்று அருகிலுள்ள சிவன், பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று தெய்வீகத் திருமண விழாவில் பங்கேற்று மகிழ்வோமாகுக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.