'மஹா சம்ப்ரோக்ஷணம்' காணும் மஹா சிம்மம்!
பக்தனின் "விசுவாசத்தை' மட்டுமே அளவு கோலாக வைத்து அருள் பாலித்தது, நாராயணனின் நரசிங்க கோலம். இது பரமாத்மாவின் எல்லா அவதாரங்களுக்குமே பொருந்துமெனினும், பிரஹலாத வரதனின் தோற்றத்தில் காட்டிய திருமாலின் வேக
பக்தனின் "விசுவாசத்தை' மட்டுமே அளவு கோலாக வைத்து அருள் பாலித்தது, நாராயணனின் நரசிங்க கோலம். இது பரமாத்மாவின் எல்லா அவதாரங்களுக்குமே பொருந்துமெனினும், பிரஹலாத வரதனின் தோற்றத்தில் காட்டிய திருமாலின் வேகம், மெய்யன்பர்களை உருக வைக்கும்.
திருமாலின் இந்த திவ்ய வடிவை விண்ணுலகத்து தேவர்கள் வியந்து போற்றினர்; மண்ணுலகத்து வாழ்ந்த மகான்கள் பலரும் வர்ணித்து போற்றிப் பாடியுள்ளனர். செல்வத் திருமகள் உறையும் திருமார்பினனான இந்த சிங்கபிரானுக்கு திருக்கோயில்கள் பல உள்ளன. அவ்வரிசையில் புதியதாக ஓர் ஆலயம், "கட்டவாக்கம்' கிராமத்தில் எழுப்பப்படுவது பற்றி ஏற்கெனவே நமது "வெள்ளிமணி'யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இப்போது இந்த ஆலயம், "மஹா சம்ப்ரோக்ஷணம்' காணவுள்ளது என்பதே சிறப்புச் செய்தி.
மேல் இருகரங்களில் சக்கரம், தனுசுடன் (வில், அம்பு) கூடிய மிகப் பிரம்மாண்டமான (16 அடி உயரம்) லட்சுமி நரசிம்மரை "கட்டவாக்கம்' கோயிலில் தரிசனம் செய்யலாம். ஆதாரபீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் யோக பட்டயத்துடன் அமர்ந்து அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தத்தின் அழகை சொல்லி மாளாது. மற்ற இரண்டு கரங்களில் அபயஹஸ்த முத்திரையுடன் மடியில் தாயாருடன் காட்சி தருகிறார் இந்த "மாலோலன்'.
இந்த விஸ்வரூப லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண வைபவம், மே 9ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30க்குள் நடைபெற உள்ளது. பூர்வாங்க பூஜை ஹோமங்கள் மே 7ம் தேதி ஆரம்பமாகின்றன. தற்போது கர்பகிரக விமானம், கருடன் சந்நிதி, பலி பீட வேலைகள் முடிந்துள்ளன. அடுத்த கட்டமாக அர்த்த மண்டபம், மகாமண்டபம், பூவராகர் சந்நிதி, பஞ்சமுக நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், தன்வந்திரி, ஆழ்வார்-ஆசார்ய பெருமக்கள் ஆகியோருக்குச் சந்நிதிகள் ஆகியவை அமைய உள்ளன. மூன்றாவது கட்டமாக ராஜ கோபுரம், ஆஞ்சநேய பகவான் சந்நிதிகள் கட்டப்பட உள்ளன.
மகா சம்ப்ரோஷண வைபவத்திற்கும், இரண்டாவது, மூன்றாவது கட்டிடப் பணிகளுக்கும் பெருமளவில் நிதி உதவி தேவைப்படுகிறது. இது சம்பந்தமாக பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஸ்ரீ பாவனஹரி ஹோம டிரஸ்ட், ஸ்ரீவிஸ்வரூப லட்சுமி நரசிம்ம சுவாமி சந்நிதி, கட்டவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்-631 604. தொலைபேசி தொடர்புக்கு -9444225091, 044-27290805.
அமைவிடம்:
வாலாஜாபாத்- சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது கட்டவாக்கம். வாலாஜாபாத்திலிருந்து 5 கி.மீ. தூரம். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோயில் முதலிய இடங்களிலிருந்து வாலாஜாவுக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.