அருள் நிறைந்தவளே...
அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் கடவுளின் தாய் எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது.
அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் கடவுளின் தாய் எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். அருள்மிகப் பெற்றவரே என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் அருள்
நிறைந்தவளே, வாழ்க என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை. அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது.
கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு "ஆராதனை' எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை "வணக்கம்' எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் கடவுளின் தாய் என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது. மனிதராகப் பிறந்த இறைமகனாகிய கிறிஸ்துவுக்கும், பரமபிதாவுக்கும், தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது.
கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25-ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25-ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. (இந்த ஆண்டு இது ஏப்ரல் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது)
கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, இது எப்படி நிகழும் என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஓர் எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் ஓர் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் கடவுளால் எல்லாம் கூடும். இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம்.
முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும், கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர் ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது, கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம். அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார். இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும்.
கடவுளின் அருளை நாம் பெறும்போது, நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால் நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம் பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' எனக் கூறலாம் (பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும் இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும்.