முகப்பு
வெள்ளிமணி

அன்னையின் தவக்கோலம்

பகன், முகன் என அசுரர்கள் இருவர். தேவர்களுக்கும் சாதுக்களுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள்.

Updated On : 18 ஏப்ரல், 2013 at 2:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:51 PM

பகன், முகன் என அசுரர்கள் இருவர். தேவர்களுக்கும் சாதுக்களுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். தேவர்கள் பல முறை போரிட்டும், அசுரர்களை அவர்களால் வெல்ல இயலவில்லை. தேவர்கள் காசியில் உள்ள விஸ்வநாதப் பெருமானை சரண் அடைந்தனர்.

தங்களைக் காத்து, அசுரர்களின் தொல்லையில் இருந்து விடுபடச் செய்யுமாறு அவர்கள் வேண்டினர். அவர்களின் மனக்குறை களைய விஸ்வநாதப் பெருமான், இரு தேவியரைப் படைத்தார். அவர்களில் ஒருவரே காளிகட்டில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகாளிதேவி. மற்றொருவர் தெற்கே கோயில் கொண்ட பகவதிதேவி. இவ்விருவரும் இறைவனின் கட்டளையை ஏற்று அந்த அசுரர்களை அழிக்க முற்பட்டனர்.

பாரத பூமியில் தென் கோடி முனையான கன்னியாகுமரி முனையில் அசுரரை அழிப்பதற்காக அன்னை பகவதி கடும் தவத்தில் ஈடுபட்டார்.

Advertisement

பகவதி எழுந்தருளியிருக்கும் தலத்துக்கு அருகே உள்ள சுசீந்திரத்தில் கோயில் கொண்டிருக்கும் தாணுமாலயப் பெருமான் பகவதியின் பேரழகிலே விருப்பம் கொண்டு அவரை மணம் முடிக்கத் தீர்மானித்தார். தாம் கொண்ட விருப்பத்தை அவர் தேவர்களிடம் கூறினார். "இறைவனின் திருமணம் நடந்தால் பகவதியின் தவம் நிறுத்தப்பட்டு விடும். அசுரர்களை அழிக்க முடியாத நிலை உருவாகும்' என்று எண்ணிய தேவர்கள், நாரதரிடம் ஆலோசனை கேட்டனர்.

அதன்படி நாரதர் தாணுமாலயரை வணங்கி இந்தத் திருமணத்தை நிறைவேற்ற வேண்டுமானால், இரண்டு நிபந்தனைகளை ஏற்று அருளும்படி வேண்டினார். இறைவனும் அந்த நிபந்தனைகளைக் கூறும்படி கேட்டார். முதலாவது நிபந்தனைப்படி ""கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லாத மலர் ஆகியவற்றை சீதனப் பொருள்களாகக் கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார். இரண்டாவதாக திருமண முகூர்த்தத்துக்கு ஒரு நாழிகை முன்னதாகவே மணவறைக்கு வந்துவிட வேண்டும் என்று கூறினார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார் தாணுமாலயர்.

அதன்படி சீதனப் பொருள்களை எல்லாம் அனுப்பி வைத்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருக்கொண்டு கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது எனப் புரிந்து கொண்ட பெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தாணுமாலயரின் திருமணம் தடைப்பட்ட காரணத்தால் அன்னை பகவதியின் தவமானது தொடர்ந்தது.

ஒருநாள்... தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட அசுரன், தேவியைக் கண்டதும் மணம் முடிக்க விரும்பினான். ஆனால் தேவி மறுத்தாள். அதனால், அசுரன் தேவியைக் கவர்ந்து செல்ல எண்ணி உடைவாளை எடுத்தான். தேவியும் போர் வாளை வீசினாள். இறுதியில் தேவி தன் சக்கராயுதத்தால் அசுரனை அழித்தாள். தேவர்கள் நன்றி செலுத்தினர். தொடர்ந்து தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள் அன்னை பகவதி.

அன்னை கன்னியாகுமரி, இங்கே கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இலுப்பைப் பூமாலையை ஒரு திருக்கரத்தில் தரித்து மற்றொரு திருக்கரத்தைத் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக அன்னை நின்றபடி அருள்பாலிக்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.