முகப்பு
வெள்ளிமணி

51 சத்தி பீடம்: நல்ஹாத்தி காளிகா!

மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகரிலிருந்து சுமார் 228 கி.மீ தொலைவில் உள்ளது காளிகா தேவி ஆலயம்.

Updated On : 1 ஆகஸ்ட், 2013 at 4:17 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகரிலிருந்து சுமார் 228 கி.மீ தொலைவில் உள்ளது காளிகா தேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 16வது சக்தி பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் பேச்சு குழல் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. இது தற்போது நலதீஸ்வரி ஆலயம் என அழைக்கப்படுகிறது.

நல்ஹாத்தி பீடத்தில் உள்ள சக்தி காளிகா (சின்னமஸ்தா) என்ற திருப்பெயரிலும், இறைவன் யோகீசர் என்ற திருப்பெயரிலும் அலங்கரிப்படுகின்றனர்.

இந்த காளிகா தேவி ஆலயத்தில், சின்னமஸ்தா தேவி திருவுருவமாக பழங்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். காளியின் பயங்கர ரூபத்தை காட்டும் விதமாக சின்னமஸ்தா தேவி காட்சியளித்திருக்கிறாள். பிற்காலத்தில் நிகழ்ந்த அந்நிய படையெடுப்புகளால் சின்னமஸ்தா தேவியின் கோயில் சேதப்படுத்தப்பட்டு சிதிலமடைந்தது.

Advertisement

இதையடுத்து, நல்ஹாத்தி தலத்தில் சின்னமஸ்தா தேவி திருவுருவத்துக்கு பதிலாக காளி என்ற நாமத்துடன் 'பிண்டி' எனப்படும் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கிறாள். சாதாரணமாக வட இந்தியக் கோயில்களில் திருவுருவச்சிலை இல்லாத கருவறையில் இத்தகைய பிண்டி காட்சி அளிப்பது இயல்பு.

நம் சரீரத்தில் புருவங்களின் மத்தியப் பகுதியில் இரண்டு இதழ் தாமரையாக பிரகாசிக்கிறாள் தேவி. காளி தேவி வேகமாகவும், அதிக சக்தியுடனும் பிரகாசிப்பதால் பிரசண்ட தேவி என்றும் சின்னமஸ்தா என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

நல்ஹாத்தி ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறு குன்றில் மேல் நலதீஸ்வரி ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்பெற்று விளங்கிய இத்திருக்கோயில் தற்போது மேற்புறம் வைக்கோலால் வேய்ந்த கூரைகளோடு காட்சியளிக்கிறது.

நவராத்திரி மற்றும் தீபாவளிப் பண்டிகை நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வைகாசி வளர்பிறை சதர்த்தசி அன்று பரப்பிரம்ம ஜயந்தி இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று கன்னிப் பெண்கள் ஆயிரக்கணக்கில் வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

நலதீஸ்வரி ஆலயக் கருவறையில் காளி மாதாவாக தரிசனம் தரும் பிண்டியை சின்னமஸ்தாவாக மனதில் இருத்தி வழிபட்டால் புத்திர, தன - தான்ய சகல சம்பத்துக்களை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.