முகப்பு
வெள்ளிமணி

மதிப்புக்குரிய இனம் எது?

ஒவ்வொருவரும் தன்னை எல்லோரும் அன்பு செய்ய வேண்டும்; ஆதரிக்க வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மதிப்புக்குரிய இனம் எது? மனித இனம் (சீராக் 10:19). கடவுளின் பார்வையில் மனிதர்கள் மதிப்பு மிக்கவர்கள். ஆனால், மனிதர்கள் மனிதர்களை மதிப்பதில் ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவரும் தன்னை எல்லோரும் அன்பு செய்ய வேண்டும்; ஆதரிக்க வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்; மதிப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். ஆனால், அடுத்தவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதை, நாம் அடுத்தவர்களுக்குச் செய்யத் தயாரானால் கடவுள் நமக்கு அளிக்கும் உயர்ந்த மதிப்பைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியுள்ளவர்களாக மாறுகின்றோம்.

மனிதர்கள் மனித மாண்பை இழந்து போவதற்குக் காரணம் அவர்களிடம் குடிகொண்டிருக்கும் சுயநலம்தான்.

இன்றைய மனிதர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கை நடத்துகிறார்கள். பிறரைப் பற்றிச் சிந்தித்தால்கூட அங்கு ஏதாவது ஒரு விதத்தில் சுயநலம் ஒளிந்து கொண்டிருக்கும்.

நான் என்ன என் சகோதரனின் காவலாளியா? என்று கேட்ட காயீனின் மனநிலை அவனுடைய வார்த்தைகளில் பிரதிபலிக்கவில்லையென்றாலும் செயல்களில் பிரதிபலித்தது.

அது போலவே, முகச்சாயம் பூசிவிட்டு வெளியே நல்லவர்களாக நடமாடும் மனிதர்கள் நிறையப் பேரை நாம் பார்த்திருக்கிறோம்.

சாலையோரங்களில் துப்புவதும் பொது கழிப்பறைகளை அசிங்கப்படுத்துவதும் பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிவதும், சில வேளைகளில் நமக்குள் கோபத்தை உருவாக்கும். ஆனால், இந்தச் செயல்களைச் செய்பவர்கள், தாங்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கிறோம் என்பதை உணராமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உணவு உண்ணும்போது சத்தமாகப் பேசுவதும் மற்றவர்கள் அருவருக்கத்தக்க வகையில் செயல்படுவதும் பிறரை மதிக்கத் தெரியாததன் அடையாளங்களாகும்.

"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' (லூக்கா 6:31).

தன்னை மதிக்கின்ற ஒருவரால் மட்டுமே பிறரையும் மதிக்க முடியும். தான் மற்றவரால் எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படியே மற்றவரையும் மதிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து அனைவரையும் அன்பு செய்தார். மதித்தார். தன்னை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த யூதாûஸக் கூட "தோழா' என்று அழைத்தார். தனக்கு எதிராக சூழ்ச்சி செய்தவனைக்கூட தோழா என்று அழைத்தார் என்றால், அது அவர் ஓர் இறைமைந்தன் என்பதையே நமக்குக் காட்டுகிறது.

இந்த உண்மை நமக்கு ஒன்றை உணர்த்துகின்றது. இறைவனை அன்பு செய்தால்தான், நாம் நம்மையும் பிறரையும் அன்பு செய்ய முடியும்.

"ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர் முன்னிலையில் மதிப்பு பெறுவர்' (சீராக் 10:20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.