தவக்காலம்... தூய்மையின் காலம்!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிடச் சொன்னவர் இயேசு கிறிஸ்து. தாழ்ந்து போகிறவர் கெட்டுப் போவது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுத மொழி.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிடச் சொன்னவர் இயேசு கிறிஸ்து. தாழ்ந்து போகிறவர் கெட்டுப் போவது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுத மொழி.
தவக்காலம் என்பது சோதனையின் காலம். சோதனை எல்லாம் வல்லவருக்கு மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் அதனை எதிர் கொண்டே ஆக வேண்டும். பட்டினி கிடப்பதனால், வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதினால் மட்டும் நாம் தவக் காலத்தினை சிறப்பித்திட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலம் நம்மைக் கடந்து செல்லும்போது நமது உள்ளத்தில் ஏதாவது மாற்றதை விட்டுச் செல்ல வேண்டும். பட்டினி கிடப்பதாலோ தியானம் செய்வதாலோ தவக்காலத்தை சிறப்பித்திடலாம் என்று எண்ணி விட முடியாது.
நாம் செய்கிற தியாகமெல்லாம் அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று செய்கின்ற தியாகமெல்லாம் தியாகமாகாது. கண்ணீரும் துன்பமும் எல்லோருக்கும் பொது. அந்தக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்குவதும் சோகக் கண்ணீராக்குவதும் அவரவர் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைந்திடும்.
புனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்து மட்டும் அல்ல, படித்துப் பார்த்து அதனைப் பின்பற்றுதல் வேண்டும். அன்னை மரியாளின் தாழ்மை, இந்த பூமியிலே அவளுக்கு கடவுளின் அன்னை என்ற மணிமகுடத்தை பெற்றுத் தந்தது. விண்ணக, மண்ணக அரசியாக அவளை உயர்த்தியது. அவளது பிள்ளைகள்தான் நாம் என்பதை நமது வாழ்வில் அவளது வாழ்வைப் பிரதிபலிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். இப்படி நடந்தால் அது இறைவனுக்கு மிக உகந்ததாக இருக்கும். அதனால் இறைவனின் ஆசிர் நமக்குக் கிட்டும்..
தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி, நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி, நிமிர்ந்து நடக்கும்போது இறை ஆசீரும், இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்குத் துணை இருக்கும். தவக்காலத்தை மனதைத் தூய்மைப்படுத்தும் காலமாக மாற்றிக் காட்டுவோம்.