முகப்பு
வெள்ளிமணி

ஐந்து கூழாங்கற்களின் மகிமை!

விவிலியத்தில் தாவீது என்கிற இளைஞன் ஒருவனைப் பற்றிய ஆச்சரியமூட்டும் கதை ஒன்று இருக்கின்றது.

Updated On : 13 பிப்ரவரி, 2014 at 3:11 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:53 AM

விவிலியத்தில் தாவீது என்கிற இளைஞன் ஒருவனைப் பற்றிய ஆச்சரியமூட்டும் கதை ஒன்று இருக்கின்றது.

இந்த தாவீது, சிறு வயதிலேயே, கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியர் என்கிற எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக, சாமுவேல் என்கிற இறைவாக்கினர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டவன்.

தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினான்.

Advertisement

இஸ்ரேயல் மக்களுக்கும் பெலிஸ்தியர்களும் போர் நடந்தபோது, தனது சகோதரர்களுக்குப் போர்முனையில் உணவு கொண்டு செல்வதற்காக ஒருமுறை சென்றான். அப்போது, தனது சகோதரர்களிடமும் மற்ற வீரர்களிடமும், பெலிஸ்தியரைத் தன்னால் எதிர்த்துப் போரிட முடியும் என்று கூறினான். படை வீரர்கள் அவனைக் கேலி செய்தனர்.

ஆனால், கடவுள் என்னோடு இருக்கிறார்... அவர் எனக்காக யுத்தம் புரிவார் என்று கூறி, வீரர்கள் அளித்த தலைக்கவசம், மார்புக்கவசம் ஆகியவற்றை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து விட்டுக் கையில் ஒரு கோலும், ஐந்து கூழாங்கற்களும், தனது கவனையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பெலிஸ்தியர்கள், கோலியாத் என்கிற ராட்சத மனிதன் ஒருவன் துணையுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த கோலியாத்தை வீழ்த்தினாலே, பெலிஸ்தியர்கள் தோற்றுப் போவார்கள் என்பதை உணர்ந்த தாவீது அவனை எதிர்கொண்டு வீரத்துடன் நின்றான்.

சிறுவனான தாவீதைக் கண்ட கோலியாத் அவனை எள்ளி நகையாடினான். உன்னை ஒரு கையாலேயே நசுக்கி விடுவேன் என்று சவாலும் விட்டான்.

தாவீது அவனைக் கண்டு அஞ்சாமல் தனது இறைவனின் மீதிருந்த நம்பிக்கையினால் தைரியமாக அவனை எதிர்கொண்டான்.

"இது எனது இறைவனின் போர். அவர் எனக்குத் துணையிருப்பார். உன்னை என்னிடம் ஒப்புவிப்பார். உன்னைக் கொன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக்குவேன்'' என்று கூறிய தாவீது தனது கையிலிருந்த கவனை எடுத்து அதில் கூழாங்கல்லைப் பொருத்தினான்.

இறைவனிடம் ஜெபித்துவிட்டு, தனது கவன் மூலம் அந்த கோலியாத்தின் நெற்றிப் பொட்டில் கூழாங்கல்லைக் குறி பார்த்து அடித்தான். தலை கிறுகிறுத்துப் போய் கோலியாத் வீழ்ந்தான். தாவீது ஓடோடிச் சென்று, கோலியாத்தின் வாளினாலேயே அவனது தலையை வெட்டி அவனை சாகடித்தான். இதைக் கண்ட பெலிஸ்திய வீரர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் சேர்ந்து தாவீதைத் தூக்கி மகிழ்ந்து வெற்றியைக் கொண்டாடினார்கள். இதன் மூலம் தாவீது அரசனாகும் வாய்ப்பும் கிட்டியது.

இது போலத்தான் எந்தக் குற்றமும் செய்யாமல் நாமும் இருப்போமானால், நம்மைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து கடவுள் நம்மைக் காப்பார்.

இறைவன் வாளினாலும் ஈட்டியினாலும் நம்மை மீட்கிறவர் அல்ல. நொடிப் பொழுதில் நாம் அறியாத நேரத்தில் நமக்கு வேண்டிய தைரியத்தைக் கொடுத்து நம்மை மீட்பார்.

எப்படி தாவீது, ஐந்து கூழாங்கற்களுடன் சென்று தனது எதிரியை வென்றாரோ, அதே போல நாமும் ஜெபம், தவம், வழிபாடு, நம்பிக்கை, தானதர்மம் என்னும் ஜந்து கூழாங்கற்களைக் கொண்டு நமது எதிரிகளை வெல்ல முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.