வெள்ளிமணி

பத்தில் பத்து

இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டு முஹர்ரம் மாதத்தில் துவங்குகிறது. முஹம்மது நபியின் பேரர்

மு. அ. அபுல் அமீன்

இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டு முஹர்ரம் மாதத்தில் துவங்குகிறது. முஹம்மது நபியின் பேரர்

ஹுசைன் (ரலி) எஜீது என்ற கொடியவனை - மக்கள் விரோத ஆட்சி நடத்திய அநியாயக்காரனை எதிர்த்து போரிட்டு மடிந்த முஹர்ரம் பத்தாம் நாள் (4.11.2014) தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பத்து நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

அல்லாஹ் தடுத்த புசிக்க கூடாத பழத்தைப் பறித்து ருசித்து சாப்பிட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய ஆதி நபி, மனித குலத்தின் ஆதி பிதா ஆதம் நபி அழுதழுது அல்லாஹ்வைத் தொழுது கேட்ட பாவம் மன்னிக்கப்பட்ட மகத்தான நிகழ்ச்சி.

இத்ரீஸ் நபி அவர்கள் சொர்க்கத்தை காண ஆசைப்பட்டு இறைவனை இறைஞ்சினார்கள். இத்ரீஸ் நபியின் வேண்டுதலை ஏற்ற வேண்டுதல் வேண்டாமையில்லா இறைவன் இத்ரீஸ் நபியை வானிலுயர்த்தி சொர்க்கத்தைக் காட்டினான். அச் சொர்க்கத்திலேயே இத்ரீஸ் நபி தங்கிய நாள்.

நூஹ் நபியின் நற்போதனையை ஏற்க மறுத்த மக்களை அல்லாஹ் வெள்ளத்தில் மூழ்கடிகத்தான். நூஹ் நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் கப்பலில் ஏறி தப்பினர். சூறாவளியில் சுற்றி சுழன்ற கப்பல் ஜுதி மலையில் கரை சேர்ந்தது. நூஹ் நபியும் அவர்களின் உம்மத்துகளும் (பின்பற்றுவோர்) உற்சாகமாய் உயிர் பிழைத்த உயரிய நாள்.

இறைவன் நானே, எனக்கும் மேலாய் எந்த இறைவனும் இல்லை என்று இறுமாப்போடு ஆட்சி புரிந்தான் நம்ரூது. இறைத் தூதர் இப்ராஹீம் இறைவன் ஒருவனே; அவனே அல்லாஹ். அவனையே வணங்க வேண்டும். அவனுக்கு இணையில்லை என்று ஏகத்துவத்தைப் போதித்தார்கள். அதனால் வெகுண்ட நம்ரூது இப்ராஹீம் நபியை நெருப்பு குண்டத்தில் தூக்கி எறிந்தான். அல்லாஹ் அருளால் நெருப்பு குண்டம் குளிர்ந்த பூங்காவானது. இப்ராஹீம் நபி நெருப்பிலிருந்து தப்பிய ஒப்புயர்வுடைய நாளே இந் நாள்.

தாவூது நபி அவர்களின் தவறான தீர்ப்பை மலக்கு (வானவர்கள்) களை மனித உருவில் அனுப்பி வழக்கு தொடுத்து உணர வைத்தான் அல்லாஹ். உணர்ந்த நபி உருகி உருகி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு மன்றாடினார். தாவூது நபியின் பாவம் மன்னிக்கப்பட்டது இந்நாளில்.

உலகாண்ட சுலைமான் நபி சைத்தானின் சூழ்ச்சியில் கணையாழியைத் தவறவிட்டு ஆட்சியை இழந்தார்கள். கணையாழி கிடைத்து சுலைமான் நபி இழந்த ஆட்சியை மீட்டதும் இந்நாளே.

அய்யூப் நபி நோயுற்று நொடிந்து ஒதுக்கியிருந்து ஓரிறையை ஓவாது தொழுதார்கள். நோவினைத் தந்த நோயும் நோவாது நீங்கிட அய்யூப் நபி சுகம் பெற்றதும் இப் பெருநாளில்.

நானே நாயன்; நாட்டு மக்கள் என்னையே வணங்க வேண்டும் என்று கூறி எகிப்தில் ஏகாதிபத்திய எதேச்சதிகார ஆட்சி நடத்திய பிர்அவ்னை எதிர்த்து ஏக இறை கொள்கையாம் ஏகத்துவத்தை எடுத்தியம்பிய இறை தூதர் மூசா நபிக்கும் அவர்களின் வழிபற்றி நடந்தோருக்கும் வழிவிட்ட நைல்நதி பிர்அவ்னையும் அவனின் படைகளையும் வெள்ளத்தில் மூழ்கடித்து விழுங்கியதும் இவ்விழுமிய நாளில் தான்.

ஒருவர் இறங்கினால் கப்பல் ஓடும் என்ற பொழுது கப்பலிலிருந்து இறக்கி விடப்பட்டு, மீனால் விழுங்கப்பட்டு மீனின் வயிற்றில் மீளா இருட்டிலும் தாளாது அல்லாஹ்வைத் தாழ் பணிந்து வணங்கிய யூனூஸ் நபி மீனின் வயிற்றிலிருந்து வெளியில் வந்தது இந்நாளில்.

நேர்வழி காட்டிய ஈசா நபியை நேச கரம் நீட்டி கொல்ல முயன்ற கூட்டத்தின் மோசடியை முறியடித்து ஈசா நபியை விண்ணேற்றிய வியத்தகு நிகழ்ச்சி நடந்ததும் இந் நன்னாளில் தான்.

பத்து நிகழ்ச்சிகள் நடந்த முத்தான முஹர்ரம் பத்தில் சித்தம் தெளிந்து சித்தி பெற சிரத்தையாய் செய்ய வேண்டிய செயல்கள் பத்து, கீழ்குறிப்பிட்ட நற்செயல்களில் பத்தினைப் பக்தியோடு பாங்குற செய்ய வேண்டும்.

காலை எழுந்ததும் குளிக்க வேண்டும். அன்று ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்; நோன்பு நோற்ற நோன்பாளிகள் நோன்பு திறக்க உணவளிக்க வேண்டும். நபிலான கூடுதல் தொழுகைகளைத் தொழ வேண்டும்; தொழுதபின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற இறைவனை வேண்ட வேண்டும். அறிஞர்களைச் சந்தித்து ஐயமற அறிவுரை பெற வேண்டும். நோயாளிகளைச் சென்று பார்த்து ஆறுதல் கூறி அவர்களின் நோய் நீங்க இறையருள் கோர வேண்டும்.

அனாதைகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். தான தருமங்கள் தாராளமாய்ச் செய்ய வேண்டும். சண்டையிட்டு பேசாதிருப்போரைச் சமாதானப்படுத்தி ஒற்றுமையை உருவாக்க வேண்டும். குடும்பத்தினர் அக்கம் பக்கமுள்ளோரின் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும். வழி தவறியவர்களுக்குச் சீரிய அறிவுரை கூறி நேர்வழியைக் காட்டி நெறியோடு வாழ புரிய வைக்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வரலாற்று நிகழ்ச்சிகள் தரும் படிப்பினைகளை உணர்ந்து பக்குவம் பெற்று பத்து செயல்களையும் மிக்க கவனத்துடன் செய்து தக்கோன் அல்லாஹ்வின் பொக்கிஷமான பேரருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT