முகப்பு
வெள்ளிமணி

சீர்மிகு வாழ்வருளும் சித்ரா பௌர்ணமி!

முழு நிலவன்று, நிலாச் சாப்பாடு சாப்பிடுவது அந்த கால பழக்கம்! சந்திரன் பூரண கலைகளுடன் விளங்கும் பெளர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

முழு நிலவன்று, நிலாச் சாப்பாடு சாப்பிடுவது அந்த கால பழக்கம்! சந்திரன் பூரண கலைகளுடன் விளங்கும் பெளர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகை பதினாறாவது நித்தியையாக, மகா திரிபுரசுந்தரியாக, லலிதாபரமேஸ்வரியாக பூரண பிரகாசத்துடன் பெளர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. அன்று தேவியைப் பூஜித்து வழிபட்டால் குடும்பத்தில் 
சுபிட்சம் உண்டாகும். 

பெளர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்பிகையை வழிபடுவது மிகவும் சிறப்பு. அம்பிகையின் இருப்பிடமாக பூர்ண சந்திரனை குறிப்பிடுகிறது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். அதனால் அம்பிகையை பெளர்ணமி சந்திரனில் இருப்பதாகப் பாவித்து பூஜித்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

பெளர்ணமி பூஜை பொதுவாக, எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியதென்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணப் பேறு கிட்டவும், திருமணமான பெண்களுக்கு மழலைச் செல்வம் கிட்டவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், பெளர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். எல்லா பெளர்ணமி பூஜையிலும் சிறந்து விளங்குவது சித்ரா பெளர்ணமி பூஜையாகும்.

சித்திரை மாத பெளர்ணமியன்று விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்குப் பூப்போட்ட வஸ்திரம் அணிவித்து, நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் அணிவித்து, பூஜைகள் செய்து, பலவித அன்னங்கள், பாயசம், பானகம், மற்றும் ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய குழந்தை பாக்கியம் கிட்டும். மரண பயம் நீங்கும். நம் பாவக் கணக்கை எழுதும் சித்ர குப்தனின் பிறந்த நாள் சித்ரா பெளர்ணமி. அன்று சித்ரகுப்தனுக்கு விரதமும் அனுஷ்டிக்கப்படுகறது. அதனால் சித்ர குப்தனின் அருளும் கிட்டும். அன்று உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து விரதம் இருந்து, ஒரு மூங்கிலிலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், நோட்டுப் புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம். 

தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது. இத் தினத்தில் அம்பிகை கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலும் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் கூழ் ஊற்றுவதும் இடம்பெறுகின்றது. சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

பெளர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் அம்பிகையை முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். பெளர்ணமி அன்று இல்லத்தில் பூஜை செய்த பின்பு ஆலய தரிசனம் செய்வது உத்தமமாகும். அதிலும் ஆலயங்களில் குங்கும அர்ச்சனை செய்து ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்பாளை வழிபடுபவர்களுக்கு சகல சித்திகளும் கிட்டும். இறைவன் திருவருள் சக்தி வழிபாட்டில் மேலும் சிறக்கும். 

சித்ரா பெளர்ணமி அன்று இந்திரனையும் பூஜிப்பர். தேவர்களின் தலைவனான இந்திரன் ஒருமுறை குரு வழிகாட்டுதல் இல்லாததால், பல பாவங்கள் செய்தான். பின்னர், தன் பாவங்கள் அகல பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அவ்வாறு வருகையில் ஓரிடத்தில் தன் பாவங்கள் எல்லாம் நீங்கியதை உணர்ந்தான். அந்த இடத்தில் ஒரு பொற்றாமரைக் குளமும் சிவ லிங்கமும் இருப்பதைக் கண்டான். சிவலிங்கத்திற்குக் கோயில் கட்டி அருகே இருந்த குளத்தில் இருந்து பொற்றாமரைகளை எடுத்து லிங்கத்திற்கு பூஜை செய்தார். இந்த சம்பவம் நடந்த இடம் மதுரை. இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரா பெளர்ணமி அன்று இந்திரனுக்கு பூஜை உண்டு. 
ஏப்ரல் 29 -ஆம் தேதி சித்திரை பௌர்ணமி நன்னாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.