வெள்ளிமணி

நலம் நல்கும் நாராயணீயம்!

DIN

"பரசுராம க்ஷேத்திரம்' என்ற புராணப் பெருமையுடன் திகழும் கேரள மாநிலத்தில் இன்றைக்கு சுமார் 450 வருடங்களுக்கு முன் "திருநாவாய்' என்ற வைணவ திவ்ய தலத்திற்கு அருகாமையில் உள்ள மேல்பத்தூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் நாராயண பட்டத்திரி. (இயற்பெயர்: நாராயண நம்பூதிரி). இளம் பருவத்திலேயே இறையருளால் அனைவரும் அதிசயக்கும்படி அதிமேதாவியாகத் திகழ்ந்தார். தலைசிறந்த சமஸ்கிருத பண்டிதரும் ஆவார். தனக்கு வியாகரணங்கள் (இலக்கணம்) கற்பித்த ஆசான் (குரு) வாதரோகம் என்ற நோயினால் அவதிப்படுவதைக் கண்டார். குருகுல வாசம் முடிவில் குருதட்சிணை அளிக்கும் தருணம் வந்தது. நன்றிக்கடனாக குருவைப்பற்றியுள்ள நோய் அவரைவிட்டு தன்னைப் பற்றிக் கொள்ளட்டும் என்று இறைவனிடம் மன்றாடி வேண்டிக்கொண்டு அந்த நோயை வலிய வரவழைத்துக் கொண்டார் பட்டத்திரி.
 இளமைப்பருவத்திலிருந்த அவர் அந்த நோய் நீங்குவதற்காக ஒரு தலைசிறந்த பண்டிதரின் அறிவுறுத்தலின்படி குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீகுருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார். அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீ குருவாயூரப்பன், அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை பட்டத்திரி வர்ணிக்கும் போது கருவறையில் நரசிம்ம தரிசனமே கிடைக்கப்பெற்றதாகக் கூறுவர். நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச்சொல்ல அவரது தம்பி (சீடர்) ஓலைச் சுவடியில் எழுதி நமக்கு அளித்ததே "ஸ்ரீமந்நாராயணீயம்' என்னும் மகத்தான பக்தி காப்பியம்.
 100 தசகங்களில் 1034 வடமொழி சுலோகங்களால் நாராயணீயத்தைப் பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ணனின் பாதத்தில் அவர் சமர்பித்தது ஒரு கார்த்திகை மாதம் 28-ஆம் தேதியாகும் (டிசம்பர் 1587 -ஆம் வருடம்). கடைசி தசகம் முடியும் தறுவாயில் ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் தரிசிக்கும் பேற்றினைப் பெற்றார். அவரது நோயும் நீங்கி தேகம் புடம் போட்ட தங்கம் போல் ஆயிற்று.
 குருவாயூரப்பன் ஆலயத்தில் பிரதி வருடம் கார்த்திகை 28 -ஆம் தேதியன்று "நாராயணீயதினம்' என்ற பெயரில் தேவஸ்வம் சார்பில் விசேஷமாக ஸ்ரீ நாராயணீயம், பாராயணம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகின்றது. பட்டத்திரி வாழ்ந்த மேல்பத்தூர் இல்லத்திலும் இந்த நாள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. அங்கு அவருடைய பளிங்கு உருவச்சிலையும், மிகப் பெரிய ஆடிட்டோரியமும் (தியானமண்டபம் மாதிரி) உள்ளது. இவ்வாண்டு, இந்த நாள் டிசம்பர் 14 -ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று அமைகின்றது. ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருள் வழங்குவது வழக்கம். எனவே, இந்த தினத்தில் ஆலயத்திலோ அல்லது இல்லத்திலோ நாம் நாராயணீயம் பாராயணம் செய்தால் அனைத்து நலமும் வாய்க்கப்பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT