வெள்ளிமணி

மனக்கவலை போக்கும் மணக்குள விநாயகர்!

புதுவை நகர்க்குப் புகழ் சேர்க்கும் பல இடங்களில் முதன்மையாக இருப்பது அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்.

பொ. ஜெயசந்திரன்

புதுவை நகர்க்குப் புகழ் சேர்க்கும் பல இடங்களில் முதன்மையாக இருப்பது அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில். இக்கோயில் வரலாறு புதுவை நகர் வரலாற்றோடு பின்னிக் கிடக்கின்றது. அக்காலத்தில் புதுச்சேரி மிகப்பெரிய நகரமாக விளங்காவிடினும், செம்மையான, நாகரீகம் செழித்த, செல்வர்கள் கொழித்த அழகான பேரூராக விளங்கியுள்ளது. இன்றைய மணக்குள விநாயகர் கோயில் தெரு என்று அழைக்கப்படும் தெருவானது, அக்காலத்தில் (பிரெஞ்சுக்காரர் வருகைக்கு முன்னர்) நெசவாளர் தெரு என விளங்கியுள்ளது. விடிவதற்கு முன்னரே இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பு தான் கைத்தறிப் பாவு நீட்டுதல் (அல்லு பிடித்தல்) என்ற தொழில் நடைபெறும். 
குளக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த மணற்குள விநாயகரை முதன் முதலாகப் பூசித்து வந்தவர்கள் நெசவாளர்களேயாவர். இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் மணற்குள விநாயகமூர்த்தி புதுவையை என்றும் பாதுகாப்பவராகி ஒவ்வொருவரின் மனத்திலும் எழுந்தருளியிருப்பது பொருத்தமானதாகும்.
மணற்குள விநாயகர் என்ற பெயருக்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. இக்கோயில் இருக்கும் இடத்திற்கு அருகில் மேற்குப் பகுதியில் ஒரு குளம் இருந்தது. அக்குளம் மணற்குளமாகத் திகழ்ந்தது. அக்குளக்கரையில் விநாயகரை வைத்து வழிபட்டு வந்தனர். எனவேதான் அவ்விநாயகர் மணற்குள விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். இக்கோயில் மிகப்பழைமையானது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. கி.பி. 15- ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 
புதுவையை ஆட்சி செய்த பரங்கியர்கள் காலத்தில் மணற்குள விநாயகர் விக்ரகம் பலமுறை கடலில் போடப்பட்டதாகவும், பின்னர் ஒவ்வொரு முறையும் அந்தத் திருவுருவம் பழைய இடத்திலேயே இருந்ததாகவும் இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததாகவும் மக்கள் இன்று வரை கூறிவரும் செவிவழிச் செய்தியாகும். 
தொள்ளைக்காது சித்தர் சுவாமிகள்: தொள்ளைக்காது சுவாமிகள் என்று போற்றப்படுகின்ற முரட்டாண்டிச்சித்தர் புதுவையை நாடி வந்தார். இவரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது, ஆனால் சற்றே முரட்டுக் குணம் உடையவராக விளங்கியவர். நெடிய உயரம், ஒல்லியான உடல்வாகுடன் எதன்மீதும் பற்றற்ற நிலையில், எதனையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாத நிலையில் வாழ்ந்தவர். இன்றைய புதுச்சேரி எல்லைக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் காணப்பட்ட மேடான ஓரிடத்தில் தனித்து வாழத் தலைப்பட்டார். இத் தொள்ளைக்காது சுவாமிகள் வெள்ளைக்காரர்கள் அக்காலத்தில் புதுவையில் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் சமாதி ஆகிவிட்டமையால் புதுவை வாழ் பொதுமக்கள் வெள்ளைக்காரர் வீதியில் தொள்ளைக்காதர் அமைந்துவிட்டார் என்று கூறி வந்தனர் என்பர். 
இங்கே உள்ள கடைகளில் கிடைக்கும் தாமரை, அல்லிப்பூ ஆகியவற்றை வாங்கி பூஜைக்கு கொடுத்து திரும்ப கொண்டு வந்து வீட்டில் வைத்தால் மனக்கவலை போகும் என்பது ஐதீகம். வாகனங்கள், மனைகள் புதிதாக வாங்கியவர்கள் மணற்குள விநாயகர்க்கு அர்ச்சனை செய்து சென்றால் வாகனங்களால் எந்த ஆபத்தும் வராது. அதுபோல மனை வாங்கியவர்கள் பல நூற்றாண்டுகள் சண்டை இல்லாமல் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது. விநாயருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இது மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே காணக்கிடைக்காத சிறப்பு, விநாயகருக்கு இங்கே திருமணம் நடக்கிறது. 
இங்கு சித்தி, புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கே இருக்கிறார். இங்கே உள்ள பள்ளியறையில் விநாயரோடு உடன் இருப்பது தாயார் சக்தி தேவியார் ஆவார். மிக முக்கியமாக இந்து மதம் என்றில்லாமல் கிறிஸ்துவம், முஸ்லிம் ஆகிய சேர்ந்த வெளிநாட்டினர் பெருமளவில் இங்கே வந்து வழிபட்டு நேர்த்திக்கடன் வைத்து செல்லுகின்றனர். அதனால் இக்கோயில் அனைத்து மதங்களையும் தாண்டி ஒரு அதிசய பிள்ளையாராக இருக்கிறார். 
சித்திரை வருடப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், தை, ஆடி அமாவாசை, கந்த சஷ்டி உற்சவம், விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், மாசிமகம், மஹாசிவராத்திரி விமரிசையாக நடைபெறும்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 2.கி.மீ. தூரத்தில் உள்ளது ஷேர் ஆட்டோ, பேருந்து ஆகிய வசதிகள் உண்டு. 
தொடர்புக்கு: 0413-2336544, 2336546. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT