காரிகையருக்கு அருளும் கார்த்திகை நீராடல்!
மாதங்களில் கார்த்திகை "ஒளிமாதம்' எனப்படுகிறது. இம்மாதம் முழுவதும் வீடுகளில் தீபங்கள் ஏற்றுதல் நிகழ்கின்றது.
மாதங்களில் கார்த்திகை "ஒளிமாதம்' எனப்படுகிறது. இம்மாதம் முழுவதும் வீடுகளில் தீபங்கள் ஏற்றுதல் நிகழ்கின்றது. திருவண்ணாமலை மற்றும் இதர ஆலயங்களில் தீபவழிபாட்டின் சிறப்பை உணர்த்தும் விதமாக பெரிய அளவில் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு தீப மாதமாக திருகார்த்திகை விளங்கினாலும், இது தீர்த்தங்களின் சிறப்பை புலப்படுத்தும் மாதமாகவும் திகழ்கின்றது. விரிஞ்சிபுரம், ஸ்ரீ வாஞ்சியம், காஞ்சிபுரம் (கச்சபேசம்), திருவிசலூர், திருக்கடவூர் மற்றும் பல சிவாலயங்களில் தீர்த்தவழிபாடு காலம் காலமாக பிரதி கார்த்திகைதோறும் நடந்து வருகின்றது. அவ்வகையில் நம்மில் பலபேர் அதிகம் அறிந்திராத ஓர் தீர்த்தவாரி வழிபாடு திருப்பனந்தாள் திருத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமையன்று நடத்தப்படுகின்றது. இதன் முக்கியத்தும் என்னவென்றால், இத்தல இறைவி பிரகந்நாயகியே இத்தல தீர்த்தங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நாக கன்னிகை குளத்தில் தீர்த்தவாரி கண்டருளுதலாகும். இந்த தீர்த்தவாரி வைபவம் அம்மன் காம்யார்த்தமாக (ஒரு காரணகாரியத்தை உத்தேசித்து) அம்மனை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடைபெறுகின்றது என்பது வேறு எங்கும் காணவியலாதது. இதன் சிறப்பை தலவரலாற்றுடன் சேர்த்து மேலும் அறிந்து கொள்வோம்!
தருமையாதீன அருளாட்சியில் விளங்கும் திருக்கோயில்களில் ஒன்று திருப்பனந்தாள். தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் இத்தலம் 39 ஆவது திருஞானசம்பந்தர் பதிகம் பெற்றது. தனது பதிகத்தில் இத்தலத்தை "திருத்தாடகை ஈச்சரம்' என்றே குறிப்பிடுகின்றனர். மேலும் பல அருளாளர்கள் அருளிய பாடல்கள் இத்தலத்திற்கு உண்டு. தல விருட்சமாகிய பனையின் தாளில் (அடி) இறைவன் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளிய தலமாதலால் பனந்தாள் என வழங்கப்பெற்றது. தாடகை என்ற பெண்ணிற்காக (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தலை சாய்த்து அவளிட்ட மாலையை பெற்றுக்கொண்ட அன்பின் மூர்த்தியாகச் செஞ்சடையப்பர் என்னும் திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளி அருள் வழங்கும் சிறப்புடையது இத்தலம். தாடகைக்காகத் தலை சாய்த்த இறைவன் எவராலும் நிமிர்க்க இயலாதவனாக இருந்து, குங்கிலியக்கலய நாயனார் (63 மூவரில் ஒருவர்) பக்திற்கு கட்டுப்பட்டு தலை நிமிர்ந்த பெரிய புராண வரலாறு இத்தலத்திற்கு பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது. அம்பிகை, ஜராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரமன், திருமால் முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார்கள். ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பங்கள் இதன் பெருமையையும், பழைமையையும் பறை சாற்றும் இவ்வூரில் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் ஏற்படுத்திய ஸ்ரீகாசிமடம் அமைந்துள்ளது மேலும் சிறப்பாகும்.
தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாக கன்னியர்கள் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம். அவ்வாறு வந்த நாகவள்ளி, நாககன்னிகைகள் இங்குள்ள குளத்தில் ஒரு கார்த்திகை தினத்தன்று நீராடி அம்பிகையை பூஜை செய்து நாகராஜனை மணக்கும் பேற்றினை பெற்றனராம். இத்தலவரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயத்தின் முக்கிய விசேஷ நாள்களில் ஒன்றாக ஆண்டுதோறும் கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூர உற்சவ அம்மன் தீர்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெறுகின்றது. அன்று நடைபெறும் தீர்த்தவாரியில் திருமணத்தடைகள் நீங்கி மாங்கல்யப் பேற்றினை அடைவதற்காக கன்னிகைகளும், மகப்பேறு வேண்டி மங்கையர்களும், தாம்பத்ய ஒற்றுமை நிலைக்க குடும்ப பெண்களும் இந்த தீர்த்த குளத்தில் நீராடி ஈஸ்வரனையும், அம்பிகையையும் வழிபட்டால் தங்கள் எண்ணம் ஈடேறப்பெறலாம் என்ற ஓர் ஐதீகம் நிலவி வருகின்றது. பங்கேற்று பயனடைந்தோர் ஏராளம் என்றும், இத்தலமே திருமணத்தடைகள் நீக்கும் தலமென்றும் ஆலய சிவச்சாரியார் தெரிவிக்கின்றார். இவ்வாண்டு, பிரகந்நாயகி தீர்த்தவாரி வைபவம் நவம்பர் 23, வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகின்றது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில் 18 கி.மீ தூரத்தில் உள்ளது திருப்பனந்தாள்.
தொடர்புக்கு: 94431 16322 / 94431 06752.